குடும்பத் தகராறு காரணமாக இளம் தாயொருவர் தனது இரு சிறு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த சம்பவமொன்று வியாழக்கிழமை இரவு மதவாச்சி கொக்கடியகொல்லாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கணவன்மனைவிக்கிடையிலான நீண்டநாள் தகராறையடுத்தே வியாழக்கிழமை இரவு வீட்டின் முன்பாக உள்ள கிணற்றினுள் தனது இரு சிறு பிள்ளைகளையும் தள்ளிவிட்ட தாயார் பின்னர் தானும் கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
நேற்றுக்காலை இந்தக் கிணற்றில் தண்ணீர் அள்ளச் சென்றவர்கள் கிணற்றில் சடலங்கள் மிதப்பதை அவதானித்துள்ளனர்.
இதுபற்றி பொலிஸாருக்கு அறிவிக்கவே அங்கு விரைந்த பொலிஸார் சடலங்கள் மூன்றையும் கிணற்றினுள்ளிருந்து வெளியே எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தாயாரான அனுஷா தில்கானி ஜெயரட்ன (29 வயது), ஜெகான் சந்தீப (6 வயது), அஷான் நெத்சர (3 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இறந்த மூவரது சடலங்கள் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதவாச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுர கொடித்துவக்கு தலைமையிலான பொலிஸ் குழு நடத்திவருகிறது.