பாடசாலை நேரங்களில் ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் சுற்று நிருபமொன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளின் அதிபர்களுக்கான கூட்டமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; பாடசாலை நேரங்களில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பது மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் நட வடிக்கைகளைப் பாதிக்கும். எனவே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவனை தொடர்பாக ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டுவரவேண்டியுள்ளது. ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை எந்த வகையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கக் கூடாது. எனவே இது தொடர்பில் சுற்று நிருப மொன்றை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும். அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் நல்லுறவுகள் இருக்க வேண்டும். பாடசாலைகளில் பௌதிக வளங்கள் அதிகரிக்கப்பட்டு கல்வி நிலை உயர்வடைவது போல் ஒழுக்க விழுமியங்களும் வளர்ச்சிகாண வேண்டும்.
இன்று பாடசாலைகளில் மாணவனால் அதிபர் தாக்கப்படுகின்றார். இதனால் ஒழுக்கம் குறித்து தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. மலையக மாணவர்கள் க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் சித்தியடையும் சதவீதம் அதிகரிக்குமானால் மட்டுமே உயர்தர வகுப்புக்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமன்றி பல்கலைக்கழகம் நுழையும் மாணவர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, இந்திய தூதரகத்தின் உதவியுடன் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வேலைத்திட்டமொன்று மேற் கொள்ளப்படவுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வருடம் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் முதலான பாடங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏனைய பாடங்களையும் கவனத்தில் கொள்ளப்படும். மத்திய மாகாணப் பாடசாலைகளில் ஆசிரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த இடமாற்றங்கள் மூலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படமாட்டாது.
மலையக மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஓர் கூட்டு முயற்சி அவசியமாகும். அதிபர். ஆசிரியர் மற்றும் பெற்றோர் யாவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். நாம் அமைச்சு மட்டத்தில் உதவிகளை நல்குவோம் என்றார். இக்கூட்டத்தில் மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் உதவிக் செயலாளர் சதீஸ். முன்னாள் மாகாண சபைத் தலைவர் துரைமதியுகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.