நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 40 வருடங்கள் நிறைவு. – புன்னியாமீன்

moon.jpg40 வருடங்களுக்கு முன்பு அதாவது 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, “ஈகிள்” என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, “கொலம்பியா”விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினையும் சுமந்துகொண்டு ஈகிள் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கியது.

நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ரோங் பெற்றுக் கொண்டார். இப் பிரதேசம் பின்னர் “அமைதித் தளம்” (Tranquility Base) என அழைக்கப்பட்டது. சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங் கூறிய கூற்று – ஒரு மனிதனைப் பொறுத்த அளவில் இது ஒரு சிறிய காலடி, மனித இனத்துக்கு ஒரு பாரிய பாய்ச்சல். அப்பல்லோ 11 ( Apollo 11 ) பயணத்திட்டமே சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். இது அப்பல்லோ திட்டத்தில் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டம்.

ஜோன் எப். கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்ட இந்த வியப்புக்குரிய பயணம் அமெரிக்கர்களை விண்வெளித்துறையில் தனியிடத்தில் அமர வைத்தது. அறிவியல் துறையின் வளர்ச்சியி்ல் சாதனைக்குரிய மைல் கல் இந்த நிகழ்ச்சி என்றாலும் கூட, சோவியத் யூனியனுக்குப் போட்டியாக உருவானதே நிலவுப் பயணம் என்பதே நிஜம். இது ஒரு வரலாற்று நிகழ்வாக காணப்பட்டாலும் கூட இந்த நிகழ்வு பற்றியும் பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் வெளிவரத்தான் செய்தன.

அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளித் திட்டமாகும். இது, 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் நிறைவேறியது. சந்திரனில், பாதம் பதித்த முதல் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளை தொடர்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அப்பல்லோ திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. 3 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நாசா இத்திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் அப்பல்லோ 11 விண்கலம், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி 39A ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டு நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகிய மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் பயணத்தைத் தொடங்கியது.

சந்திரனை அடைந்த அப்பல்லோவின் கட்டுப்பாட்டு ஓடத்தில் மைக்கேல் கொலின்ஸ் தங்கிக் கொள்ள, முதலி்ல் நிலவில் காலடி எடுத்து வைத்தார் நீல் ஆம்ஸ்ட்ரோங். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து நிலவில் இறங்கினார் எட்வின் ஆல்ட்ரின். நான்கு நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெருமை பொங்க பூமிக்குத் திரும்பியது அப்பல்லோ. உலகமே வியந்து போய் நின்ற நேரம் அது. அந்த தருணம் குறித்து எட்வின் ஆல்ட்ரின் கூறுகையில், மிகப் பெரிய நிகழ்வு அது, பெருமைக்குரிய தருணம் அது என்றார்

சந்திரனில் இறங்கிய ஆம்ஸ்டிராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அங்கு இருந்தனர். நிலவில் மாதிரி மண்ணை எடுத்துக் கொண்டனர். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்து உலகையே வியப்பில் ஆழ்த்தியது. நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூலை 24, 1969 திரும்புவதற்கு முன்பு நிலவில் எட்வின் ஆல்ட்ரின், நீல் ஆம்ஸ்ட்ரோங்கும் அமெரிக்க கொடியை நாட்டினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *