75 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றுள்ளது. திங்களன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி எத்தரப்புக்கும் வெற்றியின்றி முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து இந்தத் தொடரில் 1-0 என்கிற நிலையில் முன்னணி பெறுகிறது. இந்த ஆஷஸ் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ பிளிண்டாஃப், ஆஸி அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியமை இந்தப் போட்டியில் ஒரு சிறப்பம்சமாக இருந்தது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவரான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் ஆஸி அணியின் மைக்கெல் கிளார்க் சதமடித்ததும் இதர சிறப்புகளாகும்..இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் இம்மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது.