புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உரிய பாடசாலைகளுக்கு செல்லத் தவறினால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இன்று முதல் இது நடைமுறைக்கு வருமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஊவா மாகாண ஆசிரியர் சங்கத்தினர் பெலவத்தையில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.அவர், இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 31,000ற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு இருக்க நியாயமில்லை. சில பகுதிகளில் அதிகூடிய ஆசிரியர்களும் சில பாடசாலைகளில் மிகக் குறைவான ஆசிரியர்களும் உள்ளனர். இவர்கள் முறையாகப் பகிரப்படவில்லை.
எவ்வாறெனினும் கஷ்டப் பிரதேசங்கள், கிராமியப் பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கண்டிப்பாக தமது பாடசாலைகளுக்குச் செல்வது அவசியம். வசதிகளைக் கருதி சகலரும் நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்ல ஆசைப்பட்டால் கிராமிய பகுதி மாணவர்களின் கல்வியே பாதிப்படையும்.
இதனைக் கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்றே மேற்படி ஆசிரியர்கள் தமக்கு நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
ஊவா மாகாண அதிபர்கள், ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களென பலரும் ஜனாதிபதியிடம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விபரித்தனர். தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் எஸ். ராஜேந்திரன் தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார். இவற்றுக்குச் செவிமடுத்த ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார்.