மும்பை நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான முகமது அஜ்மல் அமீர் கஸாப், அந்தக் குற்றத்தில் தான் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
திங்கட்கிழமை மும்பையில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்ற விசாரணையின்போது, கஸாப் திடீரென தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 170 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதுதொடர்பாக கைது செய்யப்பட்ட கஸாப், பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கடல் வழியாக படகில் தாங்கள் எப்படிப் பயணித்தார்கள் என்பது குறித்தும், அங்கிருந்து தங்களை இயக்கியவர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களையும் நீதிபதிகளிடம் கஸாப் விளக்கியதாகத் தெரிகிறது.
கஸாப் திடீரென தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது அனைத்துத் தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், ஏற்கனவே நடந்த முந்தைய விசாரணைகளின்போது, கஸாப் தான் குற்றவாளி இல்லை என்று கூறிவந்தார்.