விசர் நாய்க்கடிக்கு உள்ளாவோரின் தொகை நாட்டில் அதிகரித்து வருவதால் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அவற்றுக்கான தடுப்பூசி மருந்துகளை உரிய காலங்களில் ஏற்றி அவற்றுக்கு விசர் நோய் மற்றும் நோய்கள் ஏற்படாது தடுத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் விசர் நாய்க்கடிக்கு உள்ளாவோரின் தொகை அதிகரித்துள்ளதால் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 28 பேர் விசர் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு நாய் கடித்தால் உடனடியாக அரச மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கட்டாக்காலி நாய்களின் தொகை அதிகரித்து வருவதாக உள்ளூராட்சி சபைகள் தெரிவிக்கின்றன. முன்னர் இவற்றை உள்ளூராட்சி சபைகள் அழித்துவரும் பணிகளை மேற்கொண்டன. ஆனால், பௌத்த நாட்டில் அப்பாவி பிராணிகளை கொல்லக்கூடாது என உயர் மட்டத்தினர் அறிவித்துள்ளதால் தற்போது நாய்களுக்குக் கருத்தடுப்பு ஊசிகள் ஏற்றப்படுகின்றன.
நாடு முழுவதும் தற்போது 6 இலட்சத்துக்கும் அதிகமான நாய்கள் உள்ளன. இவற்றில் 55 ஆயிரம் நாய்களுக்கு விசர் நோய் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி இதுவரை 65 ஆயிரம் பெண் நாய்களுக்குக் கருத்தடை மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.