வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியை மீட்டுத் தந்த ஜனாதிபதிக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தாத பட்சத்தில் அது ஒரு வரலாற்றுத் தவறாகவே கணிக்கப்படும் என மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம், மலீஹாபுரம் மீள் குடியேற்றத் திட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பதியுத்தீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் பதியுத்தீன் தனதுரையில் மேலும் கூறியதாவது,
இடம்பெயர்ந்த ஒவ்வொரு மகனும் தமது மண்ணை நேசிப்பவனாக இருந்தால் தமது மீள் குடியேற்றத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால், தமது பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்டிருந்தால் அரசுக்கு எதிராக செயற்படவே முடியாது.
மாறாக சில சுயேச்சைக் குழுக்களின் பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாந்து மாற்றுக் கட்சிகளுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் வாக்காகவே அமையும். ஆகவே ஜனாதிபதியும், அரசும் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாழ்படுத்தி விடவேண்டாம். அதிகமான போர் வீரர்களை பலி கொடுத்து தாயக மண்ணை மீட்டுக்கொடுத்தமைக்கு இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் எமக்கு ஆதரவு இல்லையே என்ற பழிச் சொல்லுக்கு வழிவகுத்து விடாதீர்கள்.
இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து உலக மக்களும் உன்னிப்பாக எம்மை அவதானி த்துக்கொண்டிருக்கின்றார்கள். பதிவு செய்யப்பட்டுள்ள 6200 வாக்குகளில் எத்தனை வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படுகின்றன என்பதை அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்று தமிழ்ச் சமூகம் சிங்கள சமூகம் என்பன ஜனாதிபதிக்கு பின்னே அணி திரண்டு நிற்கின்றன. ஜம்இய்யத்துல் உலமாக சபையினர் கூட அண்மையில் ஜனாதிபதிக்கு பாராட்டு விழா நடாத்தியுள்ளனர். இப்படியிருக்கும்போது ஏன் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மட்டும் ஜனாதிபதிக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க முடியாது.
இன்று கிழக்கு மாகாண மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசித்தவர்களாக நிம்மதியுடன் வாழும் நிலை ஏற்பட ஜனாதிபதி வழி வகுத்துள்ளார். அதேபோன்று எமது சுதந்திரமான மீள் குடி யேற்றமும் இடம்பெற்று எமது இளம் சமுதாயத்தினர் மகிழ்வுடன் வாழவேண்டுமானால் அனைத்து மக்களும் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து எமது தாயக மண்ணை மீட்டுத் தந்த ஜனாதிபதிக்கு எமது நன்றிக் கடனை செலுத்துவோம் என்றார்.