புத்தளம் மாவட்டத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் கற்கை நெறிகளையும், வதிவிட பயிற்சிகளையும் அவசரமாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. என். எப். பெரேரா தெரிவித்தார்.
வயம்ப பல்கலைக்கழகத்தின் கிளையை புத்தளத்தில் விஸ்தரிப்பது தொடர்பான கூட்டமொன்று நேற்று புத்தளத்திலுள்ள கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் புத்தளம் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே உபவேந்தர் பேராசிரியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸின் அழைப்பின் பேரில் வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உட்பட பகுதி தலைவர்கள் புத்தளம் நகருக்கு வருகை தந்தனர். வயம்ப பல்கலைக்கழக கற்கை நெறிகளை நடாத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். பிரதி அமைச்சர் பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த உபவேந்தர்,
பிரதி அமைச்சர் பாயிஸ் எமது பல்கலைக்கழகத்தினை பொறுத்தவரை மிக முக்கியமான ஒருவராக காணப்படுகின்றார். அவரின் அமைச்சினூடாக நாம் நிறைய பிரயோசனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. வயம்ப பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளன. இந்த தருணத்தில் எமது செயற்பாடுகளை புத்தளத்தில் விஸ்தரிப்பதில் பெருமை அடைகின்றார்.
உயர்தர மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்சார், ஊழியர்கள், நிபுணர்களுக்கு தேவையான கற்கை நெறிகளையும் பயிற்சி வகுப்புகளையும் புத்தளத்தில் ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்கின்றோம். குறிப்பாக விஞ்ஞான, விவசாய துறைசார் ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகளை வழங்க ஏற்பாடுகளை செய்கின்றோம். தெங்கு உற்பத்தி, கடல்சார் தொழில், விவசாய உற்பத்தி தொடர்பான டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்புக்கள், பட்டப்பின் படிப்புக்களை புத்தளத்தில் ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்கின்றோம் என்று உபவேந்தர் தெரிவித்தார்.