சூரிய கிரகணத்தை கண்ணாடி, பிலிம்கள் உள்பட எதன் மூலமும் பார்க்கக்கூடாது என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்
நாளை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் காலை 5.28 மணிக்கு ஆரம்பிக்கும்
காலை 6.21 மணிக்கு உச்சகட்டமாக 63 சதவீதம் அளவுக்கு கிரகணம் தெரியும். இந்த சூரியகிரகணம் 360 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும், மிக நீண்ட அரிய சூரியகிரகணமாகும். முழு கிரகணம் (சூரியன் முழுமையாய் மறைவது) 6 நிமிடங்கள் 39 வினாடிகள் நீடிக்கும்.
இதை கருப்புக் கண்ணாடிகள் மூலமோ அல்லது கருப்பு பிலிம்கள் மூலமோ பார்க்கக் கூடாது. விஞ்ஞானிகளின் துணையுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பில்டர் கண்ணாடிகள் மூலம்தான் பார்க்கலாம். வெறும் கண்களாலோ, பாதுகாப்பில்லாத கண்ணாடிகள், பிலிம்கள் மூலமோ பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அச்சப்பட ஏதுமில்லை..
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது, பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு முழுச் சந்திரன் சூரியனை மறைப்பது தான் சூரியகிரகணமாகும். இதில் அச்சப்பட எதுமில்லை. இது ஒரு மிக அழகிய வானியல் நிகழ்வாகும். இதை வெறும் கண்களால் பார்த்தால் கண்களுக்கு பாதி்ப்பு வரும் என்பதைத் தவிர வேறு எந்த விதத்திலும் அச்சப்பட தேவையில்லை.
அதே நேரத்தில் பூமியைப் போலவே சூரியன், நிலவு உள்பட அனைத்து கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. இதனால் தான் முழு நிலவுக் காலத்திலும் அமாவாசையின்போதும் கடல் மட்டம் உயர்வதும் குறைவதும் நடக்கிறது.
அந்த வகையில் நிலவும், சூரியனும் ஒரே கோட்டில் வரும்போது அவற்றின் மொத்த ஈர்ப்பு சக்தியிலும் புவியின் ஈர்ப்பு சக்தியிலும் மாற்றங்கள் ஏற்படுவதாகக் கூறப்பட்டாலும் அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை.