புலிகளின் அழிவுக்கு முன்பு எமது விடுதலைப் போராட்டத்தில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயங்களில் கருணாவின் வெளியேற்றமும் அது தொடர்பாக நடைபெற்ற வாதப்பிரதிவாதங்கள் மற்றும் சம்பவங்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. அதனால் புலியெதிர்ப்பின் அரசியல் என்ற விடயத்தை நாம் கருணாவின் வெளியேற்றம் என்ற விடயத்திலிருந்து தொடங்குவது பொருத்தமனாததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கருணாவின் வெளியேற்றத்துடன், தமிழ் மக்களது தேசியத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவியிருந்த பிரச்சனை ஒன்று முன்னுக்கு வந்தது. யாழ்மையவாதமே அந்த பிரச்சனையாகும். ஆனால் இந்த பிரச்சனையை, அதற்கே உரிய அரசியல் தளத்தில் வைக்க முடியாத கருணாவின் அரசியல் வறுமை காரணமாக, இந்த பிரச்சனையானது அரசியல்ரீதியாக விவாதிக்கப்பட, தீர்வு காணப்பட முயலப்படவில்லை. கருணாவின் சொல்லாடல்கள் பொதுவாகவே யாழ் ஆதிக்கம் பற்றி பேசினாலும், ‘வன்னிப் புலிகள்’ பற்றிய இவர்களது பிற விமர்சனங்கள், இலக்கை சரியாக குறிபார்த்து வீசப்படாத கணைகளாக செயலிழந்து நின்றன. இந்த விதமான சொல்லாடல்கள், ‘யாழ்மையவாதம்’ என்ற விடயத்தை கருத்தாக்கம் என்ற அளவிலும், அதன் நடைமுறை வடிவங்கள் சார்ந்தும் விரிவாக எடுத்துக் கொண்டு விவாதிக்க, இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரளக் கூடிய அனைத்து சக்திகளையும் இணைத்துக் கொள்ள, பெரிய தடையாக இருந்தது. இந்த பிரச்சனையானது வெறுமனே கிழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக, அதிலும் மட்டக்களப்பு சார்ந்த பிரச்சனையாக குறுக்கப்பட்டிருந்தது. இதனால், யாழ்மையவாதம் தொடர்பாக தீவிர விமர்சனங்களைக் கொண்டிருந்த திருகோணமலை, வன்னி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களைக் கூட நெருக்கமாக கொண்டுவர இவர்களால் முடியவில்லை.
கருணா எழுப்பிய யாழ் ஆதிக்கம் பற்றிய பிரச்சனையை முகம் கொடுப்பதில் ஆரம்பத்தில் புலிகளுக்கு சிரமம் இருக்கவே செய்தது. இதனால் இவர்கள் பல்வேறு நபர்களையும் தமது தற்காப்பிற்காக அணிதிரட்டினார்கள். மட்டக்களப்பை தமது அசலான பூர்வீகமாக கொண்டிராதவர்களாக கருதப்பட்ட சிலர், “யாழ் ஆதிக்கம் என்று ஒன்று கிடையவே கிடையாது” என்ற தொனியில் அறிக்கை விட்டார்கள். காசி ஆனந்தன், சிவராம் போன்றவர்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர். இதிலும் சிவராமின் பாத்திரமானது, மிகவும் அயோக்கியத்தனமாகதாக இருந்தது. இந்த உடைவுக்கு காரணமானவர்களுள் ஒருவராக கருதப்பட்ட இவர், பின்பு பிரச்சனை முற்றிய போது புலிகளின் தரப்பிற்கு குத்துக் கரணம் அடித்ததாக விடயம் அறிந்து பலரும் குறிப்பிடுவர். (இவர் புலிகளின் ‘மாமனிதர்’ ஆன விடயமானது, புலிகள், சிவராம் ஆகியோரது நேர்மை பற்றி மட்டுமல்ல, புலிகளால் வழங்கப்பட்ட பட்டங்களின் தன்மைகளையும் அம்பலப்படுத்த போதுமானவை)
தமிழ் தேசியவாதத்தின் பிரதான போக்கானது (Main Streem) ஏற்கனவே யாழ்மையவாதத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டே இருந்ததால், கருணாவின் குற்றச் சாட்டுகளை முறியடிப்பது புலிகளுக்கு சாத்தியமற்றதாக இருக்கவில்லை. மாறாக, கருணா தனது சொந்த நலன்களுக்காக பிரதேசவாதத்தை தூக்கிப் பிடித்ததாகவே தமிழ் தேசியவாதத்தின் பிரதான போக்கு முடிவு செய்தது. மிச்சத்தை புலிகள் இராணுவரீதியாக முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.
தமிழ் தேசியத்தின் பிரதான போக்கு இப்படியாக அமைந்தாலும் கூட, வேறு சிலரது நடவடிக்கைகளோ இதற்கு மிகவும் வித்தியாசமானதாக அமைந்திருந்தன. இவர்கள் நீண்ட காலமாகவே புலிகளை கடுமையாக விமர்சித்து வந்தவர்களாவர். இவர்களது விமர்சனங்கள் புலிகளது ஜனநாய மீறல்கள் தொடர்பானவையாகவே அமைந்திருந்தன. கருணா வெளியேறிய போது, இவர்கள் கருணா பற்றி எவ்வித விமர்சனங்களும் இன்றி, கருணாவை ஆதரிக்கத் தலைப்பட்டார்கள். கருணாவின் ‘ஜனநாயக பாரம்பரியம்’ (Democratic Credentials) பற்றி அறிந்திருந்த பலருக்கு, இவர்களது நடவடிக்கைகள் புதிரானதாக தோன்றின. எந்த விதமான தர்க்கரீதியான நியாயங்களையும் இவர்களது நடவடிக்கைகளில் காண முடியவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களது பூர்வீகம் பற்றி கவனித்த சிலர், இவர்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாக இருப்பதை கவனித்து, கிழக்கு மாகாண பிரதேசவாதமே இவர்களது முடிவுகளில் வெளிப்பட்டதாக கருதினார்கள். ஆனால், இந்த பிரதேசவாத வியாக்கீனங்களை விலக்கிவிட்டு சற்று நுணுக்கமாக அணுகிப்பார்த்தால் நாம் இன்னோர் காரணத்தை கண்டறியலாம். யாழ்மையவாத எதிர்ப்பு என்பதுதான் அதுவாகும்.
தமிழ் தேசிய இயக்கமானது, அதன் ஆரம்பம் தொட்டே யாழ்மையவாதத்தை அதன் ஆதிக்க சித்தாந்த கூறுகளில் ஒன்றாக தன்னுள் கொண்டிருந்தது. இதன் காரணமாக, கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் பெரியளவில் தமிழ் தேசிய இயக்கத்தில் இணைந்து கொண்டாலும், எப்போதுமே அசௌகரியமான ஒரு உணர்வுடனேயே இருந்தார்கள். அவ்வப்போது தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற நடவடிக்கைகளில் இது வெளிப்படையாகவே தெரிய வரும்போது, அதற்கெதிரான போராட்டங்கள் அந்தந்த இடங்களில் சிறிய அளவில், உள்ளூர் மட்டத்தில் நடைபெற்றாலும், இந்த பிரச்சனை அதன் அரசியல் தளத்தில் வைத்து பேசப்படும் நிலைமை உருவாகிவிடவில்லை. தேசிய இயக்கத்தில் இருந்த நல்லெண்ணம் கொண்ட சிலர் இந்த யாழ்மையவாதத்திற்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்தாலும் -உதாரணமாக: திருகோணமலையை தலை நகரமாக அறிவிப்பது, தமிழ் பல்கலைக்கழகத்தை திருகோணமலையில் உருவாக்கும்படி முன்மொழிவது, முக்கியமான மாநாடுகளை திருகோணமலையில் நடத்துவது, அமைப்பினுள் தலைமைப் பொறுப்புக்களை நோக்கி கிழக்கு மற்றும் வன்னி பிரதேச அங்கத்தவர்களை கொண்டுவர முனைவது… போன்றவை. -இந்த நடவடிக்கைகள் ஒரு போதும் அரசியல் ரீதியானதாகவும், பிரக்ஞை பூர்வமானதாகவும் அமைந்திருக்கவில்லை.
இதற்கு மாறாக இன்னோர் பிரிவினர், இந்த யாழ்மையவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக “யாழ் அகற்றிச் சங்கம்” எனும் பெயரில் முன்னெடுக்கத் தலைப்பட்டனர். இவர்களது நோக்கங்கள் சந்தேகத்திற்கு உரியனவாக ஆரம்பம் முதலாகவே அமைந்திருந்தது. இவர்களில் பலர் ஏதோ ஒரு வகையில் அசலான கிழக்கு அல்லது வன்னியர்களாக இருக்கவில்லை. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலிருந்த அண்மையில் குடிபெயர்ந்தவர்களின் வழிவந்த இரண்டாம் தலைமுறையினராக இவர்கள் இருந்தார்கள். இவர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவர்களால் தமது வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக உணர்ந்ததன் விளைவாகவே இது அமைந்திருந்தது. (இந்த இடத்தில் பெனடிக்ட் அன்டர்சனின் ‘Imagined Community’ எனும் நூலிலுள்ள ‘Pilgrimage’ எனும் அத்தியாயத்தில் வரும் சம்பவங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.) அத்துடன் இந்த யாழ் அகற்றிச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களாகவும், தமிழ் தேசியத்தை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பவர்களாகவும் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் தேசிய இயக்கங்கள் பலம் பெருகையில் இந்த விதமான நடவடிக்கைகள் பகிரங்கமாக முன்னெடுக்கப்படுவது நின்று போனாலும், இந்த புறக்கணிக்கப்படுதல் பற்றிய உணர்வானது நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. த.வி.கூ. கட்சியின் செயற்பாடுகளிலும் இந்த பிரச்சனை வெளிப்பட்டது: எதிர் கொள்ளப்பட்டது. கிழக்கைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையுடன் முரண்பட இந்த பிரச்சனைகள் காரணமாக அமைந்தன. இதன் விபரங்களை இன்னோர் சந்தர்ப்பத்திற்காக ஒத்தி வைப்போம்.
இப்போது கருணாவுடன் இணைந்து கொண்டவர்களது விடயத்திற்கு மீண்டும் வருவோம். இவர்கள், நீண்ட காலமாகவே தமிழ் தேசியத்தில் ஓங்கியிருந்த யாழ்மையவாதம் காரணமாக அசௌகரியமாக உணர்வுடனேயே தமிழ் தேசிய இயக்கத்துடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் ஆவர். இவர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் புலிகளுடன் முரண்பட்ட போது, புலிகளை விமர்சிப்பதற்கு, புலிகளது ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்பதை தமது தாக்குதலுக்கு வாய்ப்பான இலக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்களே ஒழிய, உண்மையான ஜனாநாயக அக்கறைகளினால் அல்ல. இதனால் கருணாவின் பிரிவின் போது வெளிப்பட்ட வாதப்பிரதிவாதங்களில் இவர்கள் தமது ஆதங்கங்களும் வெளிப்படுவதை Instinct level இல் கண்டார்கள். அதனால் கருணாவின் ஜனநாயக தகுதி (Democratic Credentials) பற்றியெல்லாம் இவர்களுக்கு கேள்விக்கே இடமில்லாமல் போயிற்று. கண்மூடித்தனமாக இவர்கள் கருணவை ஆதரித்து செயற்படத் தொடங்கினார்கள். அந்த வகையில் இதுவோர் Instant Hit ஆகும்.
இதே காரணங்களினாலேயே, கருணாவை இராணுவரீதியாக தோற்கடித்த பின்பும் கூட புலிகளால் கிழக்கில் ஒரு பலமான படைப்பிரிவை வைத்திருப்பது சாத்தியமில்லாமல் போயிற்று. இப்படியாகத்தான் கருணாவின் பிளவுடன் முன்னுக்கு வந்த பல்வேறு அரசியல் பிரச்சனைகளும் அவற்றிற்கே உரிய அரசியல் தளங்களை எட்டாமல் வெறுமனே புலியெதிர்ப்புவாதமாக குறுகிப் போனது.
இப்போது இந்த புலியெதிர்ப்புவாதம் என்றால் என்னவென்று பார்ப்போம். புலிகளது அரசியல் தொடர்பான முரண்பாடுகளை அதன் அரசியல் தளத்தில் வைத்து அணுகி, அவற்றிற்கு அரசியல்ரீதியாக பதிலளிப்பதற்கு மாறாக, இந்த பிரச்சனையை வெறுமனே புலிகள் என்ற அமைப்பு சார்ந்த பிரச்சனையாக குறுக்குவது: புலிகளது தலைமையான பிரபாகரனது தனிப்பட்ட குணநலன் சார்ந்த விடயமாக பார்ப்பது: இந்த வெளிச்சத்தில் புலிகளது செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்ப்பது, விமர்சிப்பது: புலிகளுக்கு எதிராக செயற்படுவதாக கூறிக் கொள்பவர்கள் செய்யும் எல்லா செயற்பாடுகளையும் ஆதரிப்பது, விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வது: என நாம் புலியெதிர்ப்புவாதத்தை இப்போதைக்கு தற்காலிகமான ஒரு வரையறையை வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். இதுவொன்றும் முற்று நிறைவான வரையறையாக அமைய வேண்டும் என்பதில்லை. இந்த கட்டுரையில் பேசப்படும் விடயங்களின் பரப்பெல்லைக்குள், எமது நோக்கத்தை சரிவர நிறைவேற்ற போதுமான கருவியாக இருப்பின் அது இப்போதைக்கு போதுமானதே.
புலிகளது ஏக பிரதிநிதித்துவ கொள்கை, சகோதரப் படுகொலைகள் ஒன்றும் திடீரென தோன்றிவிடவில்லை. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுந்தரம் என்பவரை யாழ்ப்பாணத்தில், சித்திரா அச்சகத்தில் வைத்து சுட்டுக் கொன்றதுடனேயே தொடங்கிவிட்டது. இது அடுத்த மட்டத்தில் ஏனைய சகோதர இயக்கங்களைச் சார்ந்த போராளிகளை அவ்வப்போது படுகொலை செய்வது என்று தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்புதான் சக இயக்கங்களை முற்றாக தடைசெய்வது என்ற நிலையை அடைந்தது.
போராளிகள் இதனை ஆரம்பத்திலேயே சரிவர இனம் கண்டிருந்து, இந்த வகையான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட விதத்திலும், தூர பார்வையுடனும் செயற்பட்டிருந்தால் இதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய முயன்றிருக்கலாம். ஆனால் ஆரம்பம் முதலே ஒருவித சந்தர்ப்பவாத போக்கு சகல இயக்கங்களிலும் காணப்பட்டு வந்துள்ளது. எப்படிப்பட்ட குறுக்கு வழிகளிலாவது தாம் முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்பதில் இருந்த முனைப்பானது, ஒரு கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டை எடுத்து, அதற்காக விடாப்பிடியாக போராடுவது என்ற நிலைமையை உருவாக்க தடையாக இருந்தது. இதனால் குழுக்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வழியிருக்கவில்லை. சக அமைப்புகளை சேர்ந்து பயணிப்பவர்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, போட்டிக் குழுக்களாக பாக்கும் நிலைமை தோன்றியது.
இதனைவிட, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்கங்கள் அனைத்துமே, ஒரு பிரக்ஞைபூர்வமான அரசியலை முன்வைக்காமல், தன்னியல்பாகவே செயற்பட்டதால், குழுக்களை இணைப்பதற்கு பொதுவான அரசியல் என்ற ஒன்று இருக்கவில்லை. இதனால் நபர்கள் முன்னுக்கு வந்தார்கள். கூடவே நபர்களுக்கு இடையிலான முரண்பாடுகளே, அரசியல் முரண்பாடுகளுக்கு மாறாக, முதன்மை பெற்றது. அரசியல் முரண்பாடுகள் என்பவை பரஸ்பரம் கலந்துரையாடல்கள், சமரசங்கள், விட்டுக் கொடுப்புகள் மூலமாக தீர்வு காணப்படக் கூடியவையாகும். ஆனால், இந்த நபர்கள் சார்ந்த முரண்பாடுகள் உண்மையில் இப்படியாக, இலகுவாக தீர்வு காணப்பட முடியாதவை. இப்படிப்பட்ட முரண்பாடுகள் அடிக்கடி சர்ச்சைகளை தோற்றுவித்தது. ஆயுதம் தாங்கிய நிலையில் இந்த சர்ச்சைகள் ஆயுத பிரயோகத்தில் போய் முடிந்தது. இரண்டு இயக்கங்களுக்கிடையில் மோதல்கள் நடக்கும் போது அடுத்த அமைப்பானது, இந்த மோதலில் குளிர்காய முனைந்ததும் சாதாரணமாகவே நடைபெற்றது.
இவற்றைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், ரெலோ இயக்கம் பகிரங்கமாக தடை செய்யப்பட்ட போது ஏனைய அனைத்து இயக்கங்களும் தமது ஆதரவாளர்களுடன் வீதியில் இறங்கியிருந்தால் அந்த நடவடிக்கைகளை அந்த இடத்திலேயே, அப்போதே நிறுத்தியிருக்கலாம். ஆனால் அப்படியாக செயற்படக்கூடிய வல்லமை, தலைமைத்துவம், ….. போன்றவை மற்றைய இயக்க தலைமைகளிடத்தில் இருக்கவில்லை. அப்போதைக்கு எப்படி பிரச்சனையில் சிக்குப்படாமல் தப்பிப்பது என்பதிலேயே ஒவ்வொரு இயக்கமும் குறியாக இருந்தன. இந்த தடைகளானது குறிப்பிட்ட ஒரு அரசியால் போக்கை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன என்ற புரிதல் இருந்திருந்தால், அடுத்த இலக்கு நாமும்தான் என்ற ஆதங்கத்தில், இந்த போக்கை தடுத்து நிறுத்துவது பற்றி அதிகம் அக்கறை எடுத்து இருக்க முடியும். எமது சிந்தனைகளோ உடனடியான சிறு வெற்றி என்பதைக் கடந்து சிந்திக்கும் அளவில் இல்லாத போது, இப்படிப்பட்ட சிந்தனையும், அதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளும் இவர்களது சிந்தனை வீச்சத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டனவாகவே அமைந்து விட்டன.
ஒவ்வொரு இயக்கத்தடையும் எழுந்தமானமாகவும், தற்செயலாகவும் நடைபெறவில்லை. குறிப்பிட்ட ஒரு இயக்கம் அதன் அக முரண்பாடுகள் வெளிப்படையாக வெடித்து, இயக்கமும் பலவீனமாக, மக்கள் மத்தியல் அவர்களைப் பற்றிய அபிப்பிராயமும் மோசமான ஒரு கட்டத்தை எட்டிய பின்புதான் இந்த தடை செய்யும் நடவடிக்கையும் நிறைவேறியது. ‘புறக்காரணிகள் கூட அகக்காரணிகளினூகவே செயற்படும்’ என்ற வாசகம் இங்கு நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது.
புலிகள் இயக்கத்தால் தடை செய்யப்படும் இன்னொரு இயக்கத்திற்கு, அதன் தலைமைக்கு இருக்க கூடிய சாத்தியக் கூறுகள் எவையெவை என்று பார்க்க முனைவோம்.
• முதலாவது, அந்த தடைவிதிப்பை மீறி தாம் சரியென இதுவரைகாலமும் எற்றுக்கொண்டிருந்த அரசியல் இலக்குகைள அடைவதற்காக தலைமறைவாக இயங்குவது, தேவைப்பட்டால் புலிகளின் தடைக்கு எதிராக சகல வடிவங்களிலும் போராடுவது.
• தமது இயக்க நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டுவிடடு புலிகள் அமைப்பினருடன் இணைந்து புதிய அடையாளத்துடன் போராட்டத்திற்கான தமது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவது.
• அமைப்பைக் கலைத்துவிட்டு போவது. சாதாரண சிவிலியன் வாழ்க்கைக்கு திரும்புவது. தளத்தில் இருப்பது அவர்களது கடந்தகால அரசியல் காரணமாக குறிப்பிட்ட ஒருவருக்கு ஆபத்துகள் நேரலாம் எனக் கருதும் போது தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறுவது.
• புலிகளின் எதிரிகள் எனக் கருதப்பட்ட ஏனைய அமைப்புக்கள், அரசுகளுடன் இணைந்து செயற்படுவது.
இப்படியான பல்வேறுபட்ட Optionsகளும் எல்லோருக்கும் திறந்தே இருந்தனர். வெவ்வேறு நபர்களும், குழுக்களும் இந்த பல்வேறு Optionsகளிலும் தமக்கு சரியெனப்பட்டதை தேர்ந்து எடுக்கவே செய்தார்கள். அதன் அரசியல் மற்றும் தனிப்பட்ட சாதக மற்றும் பாதக அம்சங்களை அந்தந்த Optionsஐ மேற்கொண்டவர்கள் பெற்றுக் கொண்டார்கள்: தேவைப்பட்ட விலையை செலுத்தினார்கள்.
தமது இலட்சியங்களுக்கு துரோகம் செய்து விடக்கூடாது என்பதற்காக சிவிலியன் வாழ்க்கைக்கு திரும்பிய பலர் மிகவும் கஷ்டப்பட்டார்கள். தமது வாழ்க்கையின் முக்கிய ஒரு காலகட்டத்தில், பிற்கால வாழ்க்கைக்கு அவசியமான கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை பெறும் வாய்ப்புகளை உதாசீனம் செய்து விட்டு அமைப்புக்களில் செயற்பட்டவர்களுக்கு முறையான ‘புனர்வாழ்வு’ கொடுத்து, சமூகத்துடன் இணைத்துக் கொள்ள முறையாக செயற்திட்டங்கள் எதுவும், எவரிடத்திலும் இருக்கவில்லை. இதனால் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தவே மிகவும் கஷ்டப்பட்டவர்கள் ஏராளம்.
அதிலும் அகதியாக மேற்கு நாடொன்றிற்கு வந்துசேர முடியாத பலர் அன்றாட உணவிற்கே மிகவும் கஷ்டப்பட்டார்கள். போதாக்குறைக்கு இவர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்து விட்டதால் திருமணமாகி குடும்பம், மனைவி, பிள்ளைகள் என்ற சுமைகள் வேறு. இந்த பலவீனமான நிலைமையை பயன்படுத்தி அவர்களை தம்மோடு இணைத்துக் கொள்ள ஆலாய்ப் பரந்தனர் சிலர். ஒதுங்கியிருந்தவர்களை சந்தேகக் கண்கொண்டு தொல்லைப்படுத்தியும், கொலைசெய்தும் புலிகள் தமது “களையெடுப்புகளை” மேற்கொண்டார்கள். இப்படியாக சிவிலியன் வாழ்விலும் கலந்து போகமுடியாமலும், தாம் நேசித்த அரசியல் வாழ்க்கையை தொடரமுடியாமலும் தமக்குள் தினம்தினம் போராடி, நொந்துபோய் உடல் – உள நோய்களுக்குள்ளாகி இளம் வயதிலேயே இறந்து போனவர்கள் பலர். மதுவிற்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகிப் போனவர்கள் பலர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள், கொல்லப்பட்டவர்கள், அதிலிருந்து மீள முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்கள் பலர். இதனை விட தற்கொலை செய்து கொண்டவர்கள் இன்னும் பலர். இத்தனை விலையையும் இவர்கள் கொடுத்தது தாம் அரசியல் ரீதியாக விலைபோய் விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே.
புலிகளுடன் இணைந்து கொண்ட சிலருக்கே அந்த இயக்கத்துடன் அப்படியே சங்கமமாவது சாத்தியப்பட்டது. பலரது வாழ்க்கை இன்னமும் கடினமாகவே இருந்தது. வேற்று இயக்கத்திலிருந்து வந்தவர்கள் என்றரீதியில் இன்னமும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்பட்டார்கள்.
புலிகளின் தடைகளை மீறி தலைமறைவாக செயற்பட அரிதாக சிலரே முன்வந்தார்கள். இவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் மிகவும் அதிகமானவை. தலைமறைவு வாழ்வின் உயிராபத்துகள் மற்றும் ஒழித்திருந்து தப்பிப் பிழைப்பது உட்பட அத்தனை நெருக்கடிகளுடனும் கூடவே, இந்த புதிய, ஆபத்தான வாழ்க்கை முறையில் தீர்க்கமான அரசியலை முன்னெடுப்பது, அதற்கு பொருத்தமான தாபன வடிவங்கள், போன்ற பிரச்சனைகளை இவர்கள் எதிர் கொண்டார்கள். தமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்வதற்குதம், தப்பிப் பிழைப்பதற்கும், தமது அங்கத்தவர்களை பராமரிப்பதற்கும், தமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கும் அவசியமான நிதி மற்றும் ஏனைய மூலாதார வளங்களை பெறுவது, பேணிக் கொள்வது பற்றிய பரிச்சனைகளும் சுமையாக இவர்களை அழுத்தின. இது போன்ற பற்பல கேள்விகளுக்கு விடை காண்பதிலேயே இவர்களது நேரங்களின் பெரும்பகுதியும், வளங்களின் பெருமளவும் செலவானது. தலைமறைவு வேலை முறைகள் பற்றிய கோட்பாட்டு ரீதியான தெளிவின்மை, போதியளவு முன் அனுபவமின்மை மற்றும் இது போன்ற விடயங்களில் தகுந்த ஆலோசனை பெற வழியின்மை காரணமாக, எல்லா விடயங்களையும் தமது சொந்த அனுபவங்கள் மூலமாக பல்வேறு தவறுகளுக்கூடாக தாமே கற்றாக வேண்டியிருந்தது. குறுகிவந்த வளங்கள் தலைமறைவு வாழ்க்கையை மிகவும் நெருக்கடி மிக்கதாக மாற்றி பலர் புலிகளிடமும், சிறீலங்கா மற்றும் இந்திய அரசிடம் கைதாகவும் நேர்ந்தது. அமைப்பினுள் நிலவிய குழப்பங்கள் காரணமாக பலர் ஒதுங்கி வெளியேறினார்கள். அரசியல் முரண்பாடுகள், நோய்கள், மரணங்கள், மது போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் தற்கொலை போன்றவை இவர்களையும் துரத்தியது. நீண்ட, கடினமான இந்த வாழ்க்கை முறை சிலரை கடுமையாக களைப்படையச் செய்து (Burned – Out) தமது பணிகளை தொடர்ந்தும் செய்ய முடியாத அளவிற்கு முடக்கியது.
இத்தனைக்குள்ளும், ஒருவர் தனது உயிரையும், ஆன்மாவையும் தக்க வைத்துக் கொள்வதே ஒரு பெரிய போராட்டமாகத்தான் அமைந்தது. இப்படிப்பட்ட நெருக்கடிகள் காரணமாக பல குழுக்கள் சில வருடங்களுக்கு மேலாக நீடித்து நிலைக்க முடியவில்லை. ஒரு குழு ஒரளவு தப்பிப் பிழைத்து, தனது கோட்பாட்டு, அரசியல் மற்றும் அமைப்புப் பணிகளை ஓரளவு முடித்துக் கொண்டு, தன்னை பகிரங்க அமைப்பாக பிரகடனப்படுத்தி வெளிப்படையாக செயற்பட முன்வந்தது. ஆனால், அவர்களது அதிஷ்டம் தொடரவில்லை. வெளிப்படையாக இயங்க ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குள் அமைப்பானது முற்றாக சிதறிப்போனது. வெளியார்களால் பல வருடங்களாக தோற்கடிக்கப்பட முடியாத ஒரு அமைப்பானது, உள் நுழைந்தவர்களால் சிதற அடிக்கப்பட்டது. இதற்கான காரணங்கள் மற்றும் விமர்சனம், சுய விமர்சனங்களை இன்னோர் சமயத்தில் பார்த்துக் கொள்வோம்.
இப்போது இந்த கட்டுரைக்கு அவசியமாக தேவைப்படும் ஒரு பிரிவினரைப் பற்றி விரிவாக பார்ப்போம். இவர்கள் தாம், புலியின் எதிரிகள் என்று தம்மால் கருதப்பட்ட சக்திகளுடன் இணைந்து ‘புலி வேட்டைக்கு’ புறப்பட்டவர்களாவர். இவர்கள் இந்திய மற்றும் சிறீலங்கா அரசுகளிடம் சரணடைந்தார்கள். இந்த அரசுகளின் உளவுப் பிரிவுகள் இவர்களுக்கு பயிற்சி, ஆயுதம், தளவசதிகள், மற்றும் பணம் ஆகியவற்றை தாராளமாகவே வழங்கி, அவர்களை புலிகளுக்கு எதிராக செயல்படுவதற்கு ஊக்குவித்தார்கள், வழிநடத்தினார்கள், சமயத்தில் தமது “ஊத்தை வேலைகளுக்கும்” (Dirty Works) பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த சக்திகள் தமது நடவடிக்கைகளை, “எதிரியின் எதிரி நண்பன்” என்று நியாயப்படுத்தினார்கள். அத்தோடு, தம்மை இந்த அரசுகள் பயன்படுத்துகின்றன தமக்கு தெரியும் எனவும் வேறு வழியில்லையாததால் தாம் இதனை செய்ய நேர்ந்துள்ளதாக வேறு ஒப்புதல் வாக்கு மூலங்களை தனிப்பட்டரீதியில் வெளிப்படுத்தி, குற்ற உணர்வுடைய தமது மனச்சாட்சிகளுக்கு ‘பாவ சங்கீர்த்தனம்’ செய்து கொள்ள முனைந்தார்கள். ஆனால் பகிரங்கமாக இவர்கள் ஜனநாயகம் பற்றியும், அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள புலிகள் என்ற அமைப்பு மாத்திரமே தடையாக இருப்பதாகவும்,; புலிகளை அழிப்பது தமிழ் மக்களின் சமாதானத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும் மார்தட்டிக் கொண்டார்கள்.
இவர்கள் ‘புலி வேட்டை நடத்தியவிதம்’ கவனிக்கத்தக்கது. புலிகளை தேடுவதாக கூறிக்கொண்டு ஊரூராக கதிகலக்கினார்கள். கைதுகள், சித்திரவதை, கொலை போன்ற அனைத்தும் தாராளமாகவே நடைபெற்றன. ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட சில நபர்களின் பெயர்கள் இவற்றால் பிரபலம் பெற்றது. இவற்றைவிட ஆட்கடத்தல்கள், பணம் பறிப்பு, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் என்று தொடர்ந்தது. இவர்கள் நடத்திய அட்டகாசத்தில் இவர்களை விட புலிகள் பரவாயில்லை என்று புலிகளுக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தார்கள்.
இவற்றை விட தம்மை ஆட்டிவைக்கும் எஜமானர்களின் கோரிக்கைகளின் பேரில் இவர்கள் செய்த அரசியல் தில்லு முல்லுகள் ஏராளம். நபர்களை தேர்தலில் நிற்க வைத்தவிதமும், அதற்கு அவர்களை தேர்ந்தெடுத்தவிதமும் வேடிக்கையானவை. மது வெறியில் தான் எந்த பத்திரத்தில், ஏன் கையொப்பம் இடுகிறோம் என்று தெரியாமல் கையெடுத்திட்டு, தேர்தலில் “வெற்றி பெற்று” பின்பு குறிப்பிட்ட ஒரு அமைப்பின் முன்னணி ஊழியர் எனக் கருதப்பட்டு, புலிகளால் கொல்லப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.
வடக்கு – கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு வேற்பாளர்கள் பட்டியலை தாக்கல் செய்த தினத்தில் யாழ் கச்சேரியை சுற்றி வளைத்து இந்திய இராணுவம் தமது சட்டைப்பையில் ரூபா 500 வைத்திருந்து எவரையுமே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. முன்பெல்லாம் ஈழம் என்ற பதம் தமிழ் ஈழத்தையே குறிக்கும் என அடித்துப் பேசியவர்கள், “ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியதும்” சிங்கள அரசியல்வாதிகளை திருப்திப் படுத்துவதற்காக ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கும் பதமே என குத்துக்கரணம் அடித்தார்கள். இந்திய இராணுவம் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டபோது அவர்கள் குட்டையை குழப்பிவிட்டு செல்லும் நோக்கில், இவர்களைக் கொண்டு ‘தமிழீழ பிரகடனம்’ வேறு செய்துவிட்டுச் சென்றார்கள்.
இதே பாணியில் ENDLF தனது “ஜனநாயக கடப்பாடுகளை” நிறைவேற்றிச் சென்றது. கிளிநொச்சியும், மட்டு அம்பாறையும் இவர்களால் “புதுப் பொழிவு பெற்றது” EPDP வந்தார்கள்: இன்னுமொரு சுற்று படுகொலைகள் தொடர்ந்தது. மனித உரிமை மீறல்கள் இன்னுமொரு சுற்று பருத்தது. தீவுப் பகுதியில் இவர்கள் பண்ணிய அட்டகாசம் ஒரு தனியான கதை. இவர்கள் யாழ்ப்பாண தேர்தலில் வாக்குப் பெட்டிகளை தாமே நிரப்பினார்கள். விளைவு 12 எம்பிக்கள் பாராளுமன்றத்தில். அந்த புண்ணியத்தில் மந்திரி பதவிகள் வேறு. இதில் எம்பியான பலருக்கு பாராளுமன்றத்தில் சரிவர உரையாற்றக் கூடத் தெரியாது. இவர்களுக்கு உரைகளை எழுதிக் கொடுப்தற்கு புதிதாக ஆட்கள் தேவைப்பட்டது. இவர்கள் ஜனநாயக கடமைகளுக்கு மேலாக ஆட்களைக் கடத்தி பணத்தை பறித்தெடுப்பதை சிறப்பாகவே மேற்கொண்டார்கள். மாற்று அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை மாத்திரமன்றி, தமது அமைப்பிற்குள்ளேயே மாற்று கருத்துள்ளவர்களையும் கொன்று போட்டார்கள்.
கருணா – பிள்ளையான கோஷ்டியின் வருகையானது சிங்கள அரசியல்வாதிகளுக்கும், உளவுத்துறைக்கும் ஒரு புதிய வேலைத்திட்டத்தையே உருவாக்கிக் கொடுத்தது. அதுவரை காலமும் கருத்தளவிலேயே இருந்து வந்த ‘யாழ் அகற்றிச் சங்கத்திற்கு’ ஒரு செயல்திட்டமே வகுத்து விட்டார்கள். கிழக்கில் இருந்து யாழ் ‘வம்சாவளியினரை’ வெளியேற்றி தம்பங்கிற்கு ‘இனச்சுத்திகரிப்பை’ செய்து முடித்தார்கள். இதற்கிடையில் சிங்கள அரசியல் வாதிகளும், அவர்களை அண்டி வாழும் தமிழ் எடுபிடிகளும் இந்த குழுவை எப்படி உடைத்து யார் யாரை எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பேசிக்கொண்டிருக்க வந்தது பார் இந்த தலைவர்களிடையே பிளவு. என்ன அரசியல் முரண்பாடு என்றால் ஒருவர் சொலகிறார், தான் சேர்த்துக் கொடுத்த 18 கோடி ரூயாயை மற்றவர் சுருட்டிவிட்டாராம். அது சரி இத்தனை பெரியளவு பணம் எப்படி வந்தது? இவர்களது உழைப்பில் உருவானதா? எல்லாம் ஆட்கடத்தல் பணம் தான். அதனை சுருட்டியவர் வெளிநாட்டிற்கு கொண்டு சென்று உறவினர் மற்றும் நண்பர்கள் பெயரில் முதலீடாம். சனியன் பிடித்த பினாமி சொத்து தமிழ் தேசியத்தின் ஒரு கூறு போலவே இவர்கள் ஆக்கி விட்டார்கள்.
இவற்றையெல்லாம் ஒன்று திரட்டிப் பார்த்தால் அதன் சாராம்சம் பின்வருமாறு அமையும். புலிகளை ஒடுக்குவது என்பதன் பெயரில் மோசமான மனித உரிமை மீறல்களை எவ்விதமான தயக்கங்களும் இன்றி நிறைவேற்றி முடித்தார்கள். இதனால் இன்னும் பலரை புலிகளுக்கு அணிதிரட்ட உதவினார்கள். அரசியல் தளத்தில் என்று பார்த்தால் தமிழ் தேசிய அரசியலை எந்தளவிற்கு சேதப்படுத்த முடியுமோ, அந்தளவிற்கு சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள்.
இன்னுமொரு விடயம் பலருக்கும் புரியாத புதிராக இருப்பதுண்டு. அதாவது விடுதலைப் புலிகள் இலங்கை அரசை எதிர்த்து போராடுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு கணிசமான அங்கத்தவர்ளை பராமரிப்பது, தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்களை வாங்குவது என்று பல்வேறு செலவினங்கள் இருந்திருக்கும். இதனை ஏதோ ஒர் விதத்தில் எமது மக்களிடம் இருந்துதானே அவர்கள் பெற்றார்கள். இதற்கான பணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டதற்கு ஒருவித நியாயமிருப்பதாக பலரும் உணர்ந்தார்கள். ஆனால் அதனைப் பெற்றுக் கொண்ட விதம் தொடர்பானதாவே விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இலங்கை மற்றும் இந்திய அரசின் ஏஜென்டுகளாக மாறி அவர்களது pay roll ல் இருந்து பணம் பெற்றுக் கொண்ட இந்த குழுக்களுக்கு, இந்த ஆட்கடத்தலும், பணம் பறித்தலும் தேவையற்றனவாகி இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவற்றை தொடர்ந்தும் மேற்கொண்டதில் அரச படைகளிலுள்ள சில அதிகாரிகளுக்கும் பங்கிருப்பதாக கருதப்படுகிறது. அவர்களுக்கு இதுவோர் இரட்டை இலாபம். கடத்திப் பெறும் கப்பத்தில் இவர்களது பங்கு குறித்தது முதலாவது அம்சமாகும். இப்படியாக பணத்தைப் பறிப்பதானது இந்த இயக்கங்களை மக்களை விட்டும் அதிகம் தூரம் அன்னியப்படுத்தி விட்டது. இதனால் இவர்களை தமது தேவைகள் முடிந்த பின்பு அழித்தொழிப்பதில் அதிகம் பிரச்சனைகள் இருக்க மாட்டாது அல்லவா? அத்துடன் இவர்களைக் கொண்டே தமிழர் தேசிய இயக்கத்திற்கு சேறு பூசும் வேலையை செய்யக் கூடியதாகவும் இருந்தது.
சரி, அப்படித்தான் இலங்கை, இந்திய அரசுகளுடன் இணைந்து செயற்படுவதற்காக தந்திரோபாய காரணங்கள் கூறப்பட்டாலும், இப்படியாக செயற்பட்ட காலத்தில் இவர்கள் தமிழர் தேசிய பிரச்சனை தொடர்பான அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு என்னவிதமான பங்கை ஆற்றியிருக்கிறார்கள்? முழுக்க முழுக்க எதிர்மறை பாத்திரம்தான் இவர்கள் செய்து வருவது. இலங்கை, இந்திய அரசுகள் தமிழரது தேசிய பிரச்சனையை எந்தளவு கொச்சைப்படுத்த முனைகிறார்களோ, அதற்கான ஊது குழலாக மட்டுமே இவர்கள் செயற்பட்டுள்ளார்கள். சிறீலங்கா அரசினால் மிக மோசமான படுகொலைகள், அரசியல் மோசடிகள், மற்றும் நிர்வாக நெருக்குதல்கள் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் இவர்கள் அவற்றை கண்டிக்காதது மாத்திரமன்றி, அவற்றிற்கு தமது ஆதரவை புலியெதிர்ப்பின் பெயரால் தான் இவர்களால் வழங்க முடிந்தது. இந்திய தலையீட்டை கோருவது, மற்றும் இலங்கை அரசின் அத்தனை அரசியல் மோசடிகளையும் நியாயப்படுத்துவது போன்ற பணிகளைத்தான் இவர்கள் இப்போதும் செய்து வருகிறார்கள்.
புலிகளினால் அச்சுறுத்தப்பட்ட நிலையில், தமது சொந்த பாதுகாப்பு கருதித்தான் இவர்கள் இந்த அரசுகளிடம் அடைக்கலம் பெற்றதாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலுங் கூட, புலிகள் இப்போது அழிக்கப்பட்டு விட்டார்களே. அப்படியானால் தம்மை தவறாக வழிநடத்துபவர்களின் பிடியிலிருந்து வெளியேறி, சுதந்திரமாக தமது அரசியலை முன்னெடுக்க வேண்டாமா? அல்லது தமது அமைப்புக்களை கலைத்துவிட்டு ஒதுங்க வேண்டாமா? மாட்டார்கள். அவர்களுக்கு இப்போது தமது பதவிகள் முக்கியமானதாக போய்விட்டுள்ளது. இல்லாவிட்டால், இத்தனை போர்க் கொடுமைகளுக்கும் பின்பு, மூன்று இலட்சம் மக்கள் ஒரு மோசமான தடை முகாமில் இன்னலுறும் போது அதனை மூடி மறைக்க சிறீலங்கா அரசு நாடகமாடும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட இத்தனை பேர் முண்டியடித்துக் கொண்டிருப்பார்களா என்ன?
இந்த அமைப்புக்கள் மட்டுமன்றி ஏனைய சிறு குழுக்களும், தனிநபர்களைப் பொருத்தவரையிலும் கூட ஒரு விடயம் மிகவும் முக்கியமானதாகிறது. புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் முற்றாக தோற்கடிக்கப்பட்ட பின்பு, அவர்கள் எவரையும் அச்சுறுத்தக் கூடிய ஒருசக்தி என்ற வகையில் அழிந்துபோன பின்பு, மேற்கொண்டும் இந்த புலியெதிர்ப்பு வாதத்தை தூக்கிப் பிடிப்பது என்பது, தமிழர் தேசியத்திற்கு எதிரான செயற்பாடாகவே அர்த்தப்படுத்தப்பட வேண்டும்.
இந்த இடத்தில் இந்த “புதிதாக ஜனநாய வழிமுறைக்கு திரும்பியவர்களின்” கடந்த கால ஜனநாயக பாரம்பரியத்தை ஒரு தடவை மேலோட்டமாக தட்டிப் பார்ப்பது நிலைமைகளை இன்னும் தெளிவு படுத்திக்கொள்ள உதவும். இவர்களில் ஒருவர் வதை முகாம்களை இயக்கங்களினுள் முதன் முதலாக அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இன்னொரு குழுவினர், அமைப்பினுள் ஜனநாயகம் என்பது வெறும் கேளிக்கூத்தாக்கியவர்கள். தமது அரசியல் மற்றும் சர்வதேச நிலைப்பாடுகளை பிறரை திருப்திப் படுத்துவதற்காக மாற்றிக் கொண்டவர்கள். தமது கொங்கிரசின் அறிக்கையை தளத்திற்கு அனுப்பும் போது தளத்திலுள்ள அங்கத்தவர்களின் எதிர்ப்புணர்வுகளை தணிப்பதற்காக, கொங்கிரசில் நிறைவேற்றப்பட்ட அறிக்கைக்கு மாறாக, வேறொரு அறிக்கையை செயற்கையாக தயார் செய்து அனுப்பிய மோசடியாளர்கள். மற்றவரோ, படுகொலைகளுக்கு பெயர் போனவர். தம்மிடம் சரணடைந்த 600 பொலிசாரை சர்வதேச போர் நியமங்களுக்கு மாறாக கொண்றொழித்த போர்க்கால குற்றவாளி. முஸ்லிம் மக்களை கிழக்கில் கோரமாக படுகொலை செய்தது மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை வெளியேற்றியதன் பிரதான சூத்திரதாரியே இவர்தான். இப்படிப்பட்ட இந்த கிரிமினல் கூட்டம் “சமாதானத்தையும், இனங்களிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முனைவதாக” கூறுவதை விட வேறு கேலிக்கூத்து இருக்க முடியுமா? இவர்கள் ஈழத்தமிழருக்கு ஒரு சாபக்கேடு, அவமானச் சின்னம். இவர்கள் சொல்லுகிறார்கள் மகிந்த பிரச்சனையை தீர்ப்பார் என்று. வேலிக்கு ஓணான் சாட்சியாவதை இப்போது பார்க்கிறோம்.
இப்படியாக ஆதிக்க சக்திகளின் கைக்கூலிகளாக தாம் மாறிப் போனதற்கு புலிகளது தடை நடவடிக்கைகளை காரணமாகக் கூறும் இவர்கள், ஒன்றை மறந்து விட்டார்கள். அதாவது, ஒருவரது நடவடிக்கைகளுக்கு மூலாதாரமான காரணம் (Ultimate Reason) யார் என்பதுதான் அது. புலிகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் ஒவ்வொன்றின் முன்னும் பல்வேறு தேர்வுகள் (options) இருந்தன. அவற்றில் எதைத் தெரிவுசெய்வது என்பதும், அப்படி தெரிவு செய்யப்பட்டதில் ஏதாவது ஒரு தேர்வானது தவறானது என கண்டறியும் பட்சத்தில் அவற்றை மாற்றிக் கொள்ளும் வாய்ப்புகளும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதனை மறைத்துவிட்டு வெறுமனே சூழ்நிலையின் கைதிகள் போல தம்மை காட்டிக் கொள்வதன் மூலமாக யாருமே தத்தமது ‘பாவ சுமைகளில்’ இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இப்போதெல்லாம் சர்வதேச போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர், தான் வெறுமனே மேலதிகாரிகளின் கட்டளைகளை மட்டுமே பின்பற்றியதாக தனது குற்றங்களுக்கு நியாயம் காட்ட அனுமதிக்கப்படுவது கிடையாது. அவர் மீதான புறநிலையான நெருக்குதல்கள் எவ்வளவுதான் கடுமையானவையாக இருந்தாலுங் கூட ஒருவருக்கு இன்னும் பலரை சித்திரவதை செய்வதை, படுகொலை செய்வதை நியாயப்படுத்தும் வகையிலான காரணங்களாக இவை ஆக மாட்டாது. இன்னும் பல உயிரை அழிப்பதற்குப் பதிலாக ஒருவர் தற்கொலை செய்து கொள்வதன் மூலமாக அப்படிப்பட்ட மோசமான கொடுமைகளில் ஒரு பங்காளராக, நிறைவேற்றுபவராக இல்லாமல் தன்னை அவர் விடுவித்துக் கொண்டிருக்க முடியும். இதனை விடுத்து வெறுமனே சூழ்நிலையின் கைதிகள் போல கழிவிரக்கம் பாடுவது: தம்மை பிறர் பயன்படுத்திக் கொள்வதை தம்மால் தவிர்க்க முடியவில்லை: என்றெல்லாம் சப்புக் கொட்டுவது அனுமதிக்கப்பட முடியாதவையாகும். நாம் போராளிகள் என்ற வகையில் தேவைப்பட்டால் எமது உயிரையும் எமது உயர்ந்த இலட்சியத்திற்காக அர்ப்பணிக்கத் தயாராகவே போராட்டத்தில் இணைந்து கொள்கிறோம். ஆனால் எமது உயிரை காப்பாற்றிக் கொள்ள, எமது சொகுசான வாழ்க்கையை தொடர்வதற்காக சாதாரண மக்களை எந்தவித்திலும் இடர்பாடுகளுக்கு உள்ளாக்க எமக்கு உரிமை கிடையாது.
சரி, ‘எதிரியின் எதிரி எமது நண்பன்’ என்ற முடிவை தந்திரோபாய அடிப்படையில் இவர்கள் மேற்கொண்டதாகவே வைத்துக் கொள்வோம். தந்திரோபாயம் என்பது மூலோபாயத்திற்கு உட்பட்டது அல்லவா? அப்படியாயின் இவர்களது அரசியல் திட்டம், மூலோபாயம், மற்றும் தந்திரோபாயம் எவை? எந்த நிலைமைகளின் கீழ், எதுவரைக்கும் இந்த ‘புதிய நண்பனுடன்’ ஒத்துழைப்பதாக தீர்மானிக்கப்படுகிறது? எந்த நிலைமைகளின் கீழ் இந்த ஒத்துழைப்பு முடிவுக்கு கொண்டுவரப்படும் என்பது தொடர்பான திட்டவட்டமான நிலைப்பாடுகள் ஏதாவது இருக்கிறதா? அப்படியாக மூலோபாயம் இல்லாத தந்திரோபாயத்தை என்னவென்பது? ‘சந்தர்ப்பவாதம்’ என்றுதான் அது அழைக்கப்படும். அதுசரி, எதிரி யார்? நண்பர் யார்? என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிப்பதாம். அவ்வப்போது எமக்கு ஏற்படும் உணர்வுகள் மற்றும் நெருக்கடிகளின் அடிப்படையிலா அல்லது எமது சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகள் பற்றிய விஞ்ஞான பூர்வமான பரிசீலனை மற்றும் அவற்றின் நீண்டகால வளர்ச்சிப் போக்கு பற்றிய புரிதலின் அடிப்படையிலா? இப்படியாக நாங்கள் எடுக்கும் முடிவுகள் நீண்டகால அடிப்படையில் எமது தேசத்திற்கு நன்மை விளைவிக்குமா? அல்லது தீங்கு விளைவிக்குமா? என்ற அக்கறை எமக்கு இருக்க வேண்டாமா?
இந்த இடத்தில் இது தொடர்பான இன்னோர் விடயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் தாம் சரியென கருதும் அரசியலை ஏற்றுக் கொள்வதற்கும், அதற்கு அவசியமான அமைப்பு வடிவங்களை கட்டிக் கொள்வதற்கும் இருக்கும் சுதந்திரம் என்பது ஒவ்வொருவரதும் அடிப்படை ஜனநாயக உரிமை பற்றிய விடயமாகும். ஆனால், ஜனநாயகத்தில் ‘தனி நபர் ‘ என்ற அளவிலும், ‘சமூகம்’ என்ற வகையிலும் இருக்கும் நுண்மையான வேறுபாடுகளை (Democracy as Individual and Collecitve) நாம் மறந்துவிடக் கூடாது. சமூகத்தின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்டதாகவே தனிநபர்களது ஜனநாயகம் இருந்தாக வேண்டியுள்ளது. முழு தேசத்தின் ஜனநாயக உரிமையை – அந்த தேசத்தின் சுயநிர்ணய உரிமையை – மறுப்பதற்கு, தனிநபர்களின் ஜனநாயகம் பயன்படுத்தப்படுவது அனுமதிக்கப்பட முடியாததாகும். இந்த வகையில் புலியெதிர்புவாதம் என்பது முழுக்க முழக்க சந்தர்ப்பவாதமும், பிழைப்புவாதமும் அன்றி வேறில்லை என்பது தெளிவாகிறது.
போராட்டத்தில் இப்போது மேலோங்கியிருக்கும் நெருக்கடிகள், தோல்வி மனேபாவம், நம்பிக்கை வறட்சி, குழப்பங்கள், கலைப்புவாதம் என்பவை, இன்னோர் விதமான சிந்தனைகளுக்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது. இந்த இடத்தில் நாம் இந்த கருத்துக்களை பற்றி சற்று மேலோட்டமாக பார்த்துக் கொள்வது அவசியமானது என்று கருதுகிறேன்.
• சிறுபான்மையாக உள்ள தமிழர் ஏன் பெரும்பான்மையான சிங்களவருடன் மல்லுக்கு நிற்க வேண்டும்?
• அரச கரும மொழிச்சட்டம், சிங்கள ஸ்ரீ பற்றிய பிரச்சனை, தரப்படுத்தல் போன்ற அற்ப பிரச்சனைகளை பெரிதுபடுத்தி அடாது பண்ணியது தமிழர்தான்!
• தமிழர்கள் தமது சலுகை பெற்ற நிலையை தக்க வைப்பதற்காக, சிறிய பிரச்சனைகளை எல்லாம் பெரிதுபடுத்தியதுதான் இத்தனை இடர்களுக்கும் காரணம்!
• தமிழர்கள் சிங்கள பகுதியில் விரும்பிய இடமெல்லாம் குடியிருக்கும் போது சிங்களவர்களை மட்டும் தமிழ் பிரதேசத்தில் குடியேறுவதை தடுக்க முனைவது, அவர்கள் புத்த கோயில்கள் கட்ட முனைவதை எதிர்ப்பதுதான் தமிழ் இனவாதமாகும்.
• தனித் தமிழீழம் என்பதில் பிடிவாதமாக நிற்காமல், தமிழர் தரப்பு இறங்கி வந்திருந்தால் எப்போதோ தீர்வை நாம் கண்டிருக்க முடியும்.
• பேச்சுவார்த்தைகள் மூலமே தமிழர் பிரச்சனை தீர்வு காணப்பட முடியும்.
• ஐக்கியப்பட்ட புரட்சி தேசிய பிரச்சனைக்கு முடிவுகட்டும். கடந்த காலத்தில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம்தான் இப்படிப்பட்ட ஒரு புரட்சிக்கான சூழ்நிலை உருவாகமல் தடுத்து நிறுத்தியது.
இப்படியாக ஒரு நீண்ட பட்டியலை நாம் தரமுடியும். அவை அணைத்தையும் எடுத்துக் கொண்டு, அவற்றை ஒவ்வொன்றாக பதிலளிப்பது இந்த இடத்தில் சாத்தியப்படமாட்டாது என்பதால், (இதனை இன்னோர் சந்தர்ப்பத்தில் விரிவாக மேற்கொள்வதாக நாம் உத்தரவாதம் அளிக்கலாம்) இப்போதைக்கு இவற்றில் ஒரு விடயத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வோம்.
தமிழீழம் தவிர மற்றதெல்லாம் தரலாம் என்றார் பிரேமதாசா. இப்போதைய தலைவர்களும் தமிழீழ கோரிக்கையில் தமிழர் தரப்பு பிடிவாதமாக இருப்பதே, அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். சரி, ஒரு வாதத்திற்காக தமிழர் தரப்பானது தமிழீழ கோரிக்கையை விட்டுக் கொடுத்து சமரசம் செய்ய தயாராக இருப்பதாக வைத்துக் கொண்டு, சற்றே கீழே இறங்கித்தான் பார்ப்போமே.
• தனிநாட்டுக் அடுத்தபடியாக நாம் பார்க்கக் கூடிய அரசியல் ஏற்பாடு கூட்டாட்சியாகும் (Confederation). இதற்கு சிறீலங்கா அரசு தயாரா? இல்லை.
• சரி, அதற்கும் ஒருபடி கீழிறங்கி சமஷ்டி ஆட்சி முறையை ஏற்பதாக வைத்துக் கொண்டாலும், இதற்கும் தயாராக இல்லை.
• இன்னுமொரு படி கீழே போவோம். வடக்கு – கிழக்கு இணைந்த மாநிலத்திற்கு விரிவான அதிகாரங்களை வழங்கத் தயாரா? இதற்கும் தயாராக இல்லை. இந்த இணைப்பு சர்வஜன வாக்கெடுப்பின்றி, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பிரித்தாயிற்று.
• சரி, வடக்கு, கிழக்கு பிரிந்த தனித்தனி மாகாணங்களுக்கு பொலிஸ், நில அதிகாரங்களை கொடுக்கவும் முடியாது.
• 13 வது அரசியலமைப்பிற்கான திருத்தமும் கிடையாது என்றால்., ……….
இதற்கு மேல் நாம் என்ன செய்யலாம்? நக்கலாம்… அதைத்தான் சிலபேர் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறார்களே!
நாம்தாம் சிறீலங்கா அரசானது சிங்கள பேரினவாதத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்கிறோமே. அதன் அர்த்தம் என்ன? சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை போன்ற அனைத்துமே சிங்கள் பேரினவாதத்தின் பிடியில் இருக்கின்றன என்பதுதானே. இவற்றிற்கும் மேலாக வரலாற்றுக்கும் ஐதீகங்களுக்கும் வேறுபாடு காண்பிக்காத ஒரு கல்வி முறையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு தலைமுறை. இந்த தலைமுறையை அதன் பயப்பிராந்தியை தணிய விடாமல் பார்ப்பதை கடமையாகக் கொண்ட ஒரு வெகுஜன சாதனம். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் இந்த அரசியல் இணக்கப்பாடு காணலாம் என்ற கருத்துப் போக்குகளும் நம்மத்தியிலே உலாவி வருகின்றன. இதற்கு மேல், சிறீலங்காவின் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக வைத்துத்தான் நாம் செயற்படுவது என்றால் இந்த திசையில் நாம் ஒரு அடியாவது முன்னேற முடியுமா? நிர்வாகமும் இனவாத பிடியில் சிக்கியிருக்கிறது என்றான பின்பு சட்டவாக்க துறை ஏதாவது சட்டங்களை கொண்டு வந்தாலும் உம்: தமிழ் அரசகரும மொழியாவது, அவை முறையாக அமுல்படுத்தப்படும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா? மற்றையது, இப்படிப்பட்ட சில்லரைத்தனமான யோசனைகள் மிகவும் காலம் தாழ்த்தியவை மட்டுமல்ல, மிகவும் பற்றாக்குறையானவை (Too Little and Too Late) என்பது கூடவா இவர்களுக்கு புரியவில்லை. அல்லது தமிழ் மக்களது அவலங்களை பார்த்து இவர்கள் கேலி செய்கிறார்களா?
மொழியுரிமை, குடியேற்றம், தரப்படுத்தல் போன்ற பிரச்சனைகள் ஒவ்வொன்றும் அவற்றிற்கே உரிய வரலாற்றுப் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை கொண்டு வருவதில் ஒரு தரப்பு ஏன் அத்தனை தீவிரமாக இருந்தது என்பதும், மறுதரப்பு அதனை ஏன் கடுமையாக ஆட்சேபித்தது என்பதும், இந்த பரவலான, வெகுஜன மட்டத்திலான எதிர்ப்புணர்வுகளையும் மீறி அவற்றை கொண்டு வந்துவிடுவதில் சிறீலங்கா அரசு விடாப்பிடியாக நின்றதற்கான காரணமும் பிடிபடும். இல்லாத போது அந்த பிரச்சனைகளின் ஆழமும் அகலமும் புரிந்து கொள்ளப்படாமல் போய் விடும். சரி, அப்படித்தான் இவையனைத்துமே அற்ப பிரச்சனைகள் என்றால், தமிழர்களது கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி அவற்றை சட்டமாக்க, அந்த சட்டங்களை அமுலாக்க சிறீலங்கா அரசு பிடிவாதம் பிடித்ததேன்? பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கலாம் என்றால், இதனை மட்டும்தானே தமிழர் தரப்பு 1970 களின் நடுப்பகுதி வரையில் செய்து வந்தது. அப்போது ஏன் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் போயின? வன்முறையின் மூலமாக அரசியல் நோக்கங்களை அடைய முனையக் கூடாது என்பவர்கள், ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற தமிழரது எதிர்ப்பு போராட்டங்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்களை பார்த்தல்லவா இதனை சொல்ல வேண்டும்.
தமிழர் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பவர்கள், சிறீலங்கா அரசு எதனையாவது விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறதா? என்பதையும் கேட்க வேண்டாமா? ஒற்றையாட்சி மற்றும் சிங்கள – பௌத்தத்திற்கு முதலிடம் போன்றவற்றை வலியுறுத்தும் அரசியலமைப்புத் திட்டம், மற்றும் பல தேசமக்களது அபிலாசைகளை வெளிப்படுத்தாத தேசியக் கொடி உட்பட அனைத்திலும் விட்டுக் கொடுப்புக்களை செய்யத் தயாராக இல்லாமல் பல தேசங்களும் சேர்ந்த வாழ்வது இன்றை இலங்கையில் சாத்தியமில்லை. இப்போது நடப்பது என்னவென்றால், ஒடுக்குபவனை விமர்சிப்பதை விட்டுவிட்டு, ஒடுக்கப்படுபவர்களை சகித்து போகுமாறு போதிக்கப்படுகிறது. அதுவும் இதனை தமிழர்களே செய்வதுதான் கொடுமையானது.
அதனைவிட விசித்திரமானது என்னவென்றால், நாம் எமது கோரிக்கைகள் மூலமாக சிங்கள மக்களை பயப்படுத்தி விடக் கூடாதாம். நல்ல விசித்திரம். சிங்கள அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் தமது குறுகிய நோக்கங்களுக்காக சிங்கள மக்களை இனவாதம் கொண்டு உசுப்பேத்தி விட்டுள்ளார்கள். இந்த நிலையில் அவர்களை சங்கடப்படுத்தி விடக்கூடாது என்ற அக்கறையிலிருந்து பிரச்சனையை அணுகத் தொடங்கினால், நாம் ஏதாவது உருப்படியாக செய்ய முடியுமா?
இங்கே குறுக்கு வழியெதுவும் கிடையாது! பிரச்சனையின் தார்ப்பரியங்கள் வெளிப்படையாகவும், ஆழமாகவும் அக்கறையுடன் பேசப்பட வேண்டும். அதற்கு இந்த சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் தயாராக இல்லையென்றால், தமிழர் தமது வழியை தாமே நிர்ணயித்துக் கொள்வதை தடுப்பதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நாம் எப்போது சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும் சிந்திக்க, செயற்படப் போகிறோம்? முன்பெல்லாம் புலிகளின் கொத்தடிமைகளாக செயற்பட்டவர்கள், இவர்கள், இப்போது சிறீலங்கா அரசை திருப்பி செய்யும் விதத்தில் கருத்துக்களை தெரிவிக்க தலைப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை புலத்தில் இருந்து கொண்டு அரசை கடுமையாக விமர்சிப்பது பாதுகாப்பு வகையில் பிரச்சனைக்குரியதாக இருக்கலாம். அது புரிந்து கொள்ளப்படத்தக்கதே! ஆனால், இதனை மறைத்து புலம்பெயர் போராளிகளை விமர்சிக்க முனைவது ஆரோக்கியமான போக்கல்லவே.
அடுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் ‘ஐக்கியப்பட்ட புரட்சி’ பற்றிய விடயமாகும். இலங்கையில் தேசிய பிரச்சனைக்கு நாம் தனியான அரசை அமைப்பதன் மூலமாக அன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம், மற்றும் மலையக தொழிலாளர்களது ஐக்கியப்பட்ட புரட்சியின் மூலமாக தீர்வு காண்பதே சரியானது, என இவர்கள் கூறுகிறார்கள். இதன் சாத்தியப்பாடு தொடர்பான சர்ச்சைகளை இங்கு தவிர்த்துக் கொண்டு, இங்கு ஒரு விடயத்தை மட்டுமே நான் கவனத்தில் கொள்ள விரும்புகிறேன். அதாவது, ‘ஐக்கியப்பட்ட புரட்சி’ என்ற நிலைப்பாடு தேசிய பிரச்சனையை முகம் கொடுப்பதில் நின்றும் இந்த இடதுசாரிகள் தப்பித்துக் கொள்ளவதற்கான (Escapism) வழிமுறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதே அந்த பிரச்சனையாகும்.
விடயம் இதுதான்: இப்போது மார்க்சியவாதிகள் எவருமே சோசலிசப் புரட்சியானது தன்னளவிலேயே, சமூகத்திலுள்ள தேசிய பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடும் என்று வாதிடுவதில்லை. சோவியத் யூனியன் கூட பல குடியரசுகளின் ஒன்றியமாகத்தானே இருந்தது. இவ்வாறே ஏனைய பிரச்சனைகளான சாதியம், பெண்ணடிமைத்தனம் போன்றவையும் தானாகவே சோசலிசத்தல் தீர்க்கப்பட்டு விடுவது கிடையாது. இதனால் இவர்கள் இந்த பிரச்சனைகளை சோசலிசத்தில் எப்படியாக தீர்க்கப் போகிறார்கள் என்று தமது திட்டத்தில் குறிப்பாக தெளிவு படுத்துவதுடன், நடப்பு சமூக அமைப்பின் வரம்பிற்குள் நடைமுறைப்படுத்தக் கூடிய கோரிக்கைகளை தமது குறைந்த பட்ச திட்டத்தில் முன்வைத்து, அவற்றை அடைவதற்கான போராட்டங்களை, கிளர்ச்சிகளை, பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள். அப்படியானால் தேசிய பிரச்சனை தொடர்பான இவர்களது நீண்டகால, குறுகியகால திட்டங்கள் எவை? அவற்றை அடைவதற்கு எந்த வழிமுறைகளில் போராடுகிறார்கள். இவற்றிற்கு ஆரோக்கியமான பதில்கள் கிடைக்காதவரையில் இவர்கள் இந்த ‘ஐக்கியப்பட்ட புரட்சி’ என்ற கோசத்தை பிரச்சனையிலிருந்து தப்பிக் கொள்ளும் வழிமுறையாக பாவிப்பதாகவே அர்த்தப்படும்.
சரி அப்படித்தான் ஐக்கியப்பட்ட புரட்சியை ஒரு சாத்தியமான நிலைப்பாடு என்று வைத்துக் கொண்டாலும் கூட, இந்த இடதுசாரி கட்சிகள் இதனை அடைவதற்கு என்ன பணிகளை செய்கிறார்கள் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுப் பாருங்கள். தென்னிலங்கையில் இனவாதம் பலமாக இருப்பதால் தம்மால் அங்கு கட்சிப் பணிகளை சரிவர செய்ய முடியவில்லை என இரகசியமாக ஒத்துக் கொள்வார்கள். இந்த கோரிக்கையின் கீழ் சிங்கள் மக்களை அணிதிரட்டி போராட் முடியாத இவர்கள், தம்மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் மக்களைப் பார்த்து அவர்களது போராட்டத்தை கைவிடுமாறு கோருவது அரசியல்ரீதியிலும், ஏன் தார்மீகரீதியிலும் எப்படி நாகரீகமான செயலாக இருக்க முடியும்.
“சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கிறோம், ஆனால் பிரிந்து போவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது” என்ற வாதம் ஒரு அசலான முரண்நகையாகும். சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது என்பதே, குறிப்பிட்ட தேசமக்கள், தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் உரிமை உடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதைத்தான் குறிக்கும். இதன் பின்பு என்ன அந்த கொசுறு, “பிரிந்து செல்வதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்பது. இதுவோர் மோசடியன்றி வேறல்ல. குறிப்பிட்ட ஒரு தேசத்தினர் எப்படிப்பட்ட முடிவை மேற்கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்திப் பார்க்கலாமேயன்றி, தத்தமது இஷ்டத்திற்கு அந்த மக்களின் அரசியல் பற்றி வியாக்கீனம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.
தமது அரசியல் தலைவிதியை தமது கரங்களிலேயே எடுத்துக் கொள்வதைவிடுத்த, வேறெந்த சமரச முடிவுகளும், அதாவது தனியான அரசை அமைப்பது என்ற முடிவுக்கு குறைந்து எந்தவொரு அரசியல் தீர்வும், சிங்கள் தரப்பில் இருந்து வரும் நேசக்கரத்தை முன்னிபந்தனையாக கோருகிறது. அதாவது, பிரிந்து போவதற்கான முடிவை, செயற்பாடுகளை ஒரு தேசம் தனியாக செய்து முடிக்கலாம். ஆனால் இன்னோர் தேசத்துடன் இணைந்து வாழ்வது என்பது அந்த தேசம் மாத்திரம் தனியாக மேற்கொள்ளக் கூடிய முடிவல்ல. அடுத்த தேசமும் இதனை நோக்கி செயலூக்கத்துடன் செயற்பட்டு, அந்த இணைவிற்கான தனது விருப்பத்தை வெளிப்படையாக, அரசியல்ரீதியாக தெரிவித்தால் மாத்திரமே இது சாத்தியப்படும். சிங்கள மக்களில் மிகப் பெரும்பான்மையானோர் சிங்கள இனவாதத்தின் பிடியில் சிக்கி இருக்கும்போது இது எப்படி சாத்தியமாகும்? சிங்கள- தமிழ் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு கொம்பூனிஸ்ட்டுக் கட்சி கூட இப்போது இலங்கையில் இல்லை. இந்த இலட்சணத்தில் தமிழ் மக்களை நோக்கி இந்த வகையிலான கோரிக்கைகளை முன்வைக்க இவர்களால் எப்படி முடிகிறது?
இப்போது மீண்டும் எமது பிரதான விடயத்திற்கு வருவோம். யுத்தம் முடிந்துவிட்டது: புலிகள் அமைப்பானது இராணுவரீதியாக முழுமையாகவும், விரிவான அளவிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். புலிகளது தலைமை, அதன் இராணுவ இயந்திரம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலிருந்த அதன் அரசியல் கட்டமைப்புக்கள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு, அதன் தலைவர்கள் சரணடைந்துள்ளார்கள். இப்போது சிறீலங்கா அரசாங்கம் என்ன செய்ய முனைகிறது? போரை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதால், தமிழ் மக்களுடன் ஒரு சமாதான தீர்வை நோக்கி முன்னேற முனைகிறதா? அல்லது, வெற்றி பெற்றது நானே, அதனால் தான் பெருந்தன்மையாக தருபவற்றை நன்றியுடன் தமிழர்கள் எற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா?
இந்த இடத்தில் நாம் இன்னொரு குரலையும் கேட்க முடிகிறது. அதாவது, போர் இப்போதுதானே முடிந்திருக்கிறது. அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அதுவாகும். சரி, அதுவும் ஒரு நியாயமான கோரிக்கையாக பலருக்கும் படலாம். ஆனால் நடப்பு நிலைமைகளை கூர்ந்து அவதானிப்பதன் மூலமாக எப்படிப் பட்டதோர் திசையில் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டாமா?
போர் முடிவடைந்து விட்டது. இந்த யுத்தத்தை நடத்துவதற்காக ஐந்தாண்டு திட்டம் ( ‘Project Beacon’) வகுத்து அதனை கச்சிதமாக செயற்படுத்திய ஒரு அரசாங்கத்திடம் அரசியல் தீர்வுக்கான திட்டம் இல்லையென்றால் இது சற்று இடறலாக இல்லை. புலிகளை அழிக்கும் விடயத்தில் தானே முன்கையெடுத்து செயற்பட்டு, எவரது ஆட்சேபனைகளையும் பொருட்படுத்தாது தனது முடிவுகளை முன்னெடுத்துச் சென்ற அரசானது, சமாதான விடயங்களில் இப்படியாக கால்களை இடறுவது விநோதமாக இல்லை. சர்வகட்சி மாநாட்டின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக கூறும் இவர் யுத்த விடத்தில் யாருடைய அபிப்பிராயத்தையும் கேட்கவில்லையே. சரி இதுவரையில் ஜனாதிபதி நேரடியாகவும், அவரது தமிழ் மற்றும் சிங்கள் பினாமிகளுக்கூடாகவும் சொன்ன விடயங்களை எடுத்துக் கொண்டால்: சமஷ்டி கிடையாது: அரசியலமைப்பிற்கான 13ம் திருத்தம் கிடையாது: வடக்கு, கிழக்கு பிரிந்தே இருக்கும்: அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் கிடையாது. அப்படியானால் இதற்கு மேல் ‘தீர்வுப் பொதியில்’ என்னதான் மிச்சமாக இருக்கிறது. அதுவும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் வென்றெடுக்கப்பட்டால்தான்! ஆகா, என்ன அற்புதமான தீர்வு இது! இதனை இவர்களேதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களைப் பொருத்தவரையில் ‘பட்டை நாமம்’ தான் இதற்கு அர்த்தம்.
சரி ஏனைய நிலவரங்களையும் சேர்த்துப் பார்ப்போம். “மக்களை புலிகளின் அடக்குமுறையிலிருந்து மீட்டெடுக்க போரிட்ட” அரசிடம் வெளியேறிவந்த அகதிகளை வைத்து முறையாக பராமரிக்க ஒரு திட்டம், ஏற்பாடு இல்லாமல் இருந்தது போகட்டும்: இப்போது இரண்டு மாதங்கள் ஆகியும் அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியவில்லை. அதில் இருக்கும் மக்களுக்கு குடிப்பதற்கு, குளிப்பதற்கு சரியான தண்ணீர் கிடையாது! (முகாம்களில் இப்படியாக தண்ணீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகளை வாசிக்கும் ஒரு வெளிநாட்டவர், இந்த முகாம்கள் ஏதோ சகாரா பாலைவனத்தில் இருப்பது போலவும், சைபீரியாவிலிருந்து உறைபனிக் கட்டிகளை கடலில் இழுத்துக் கொண்டு வந்துதான் தண்ணீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்பது போலவும் யோசிக்கக் கூடும். முப்பது அடி ஆழத்தில் நிலத்தடி நீர் தாராளமாக உள்ளது. இதனைவிட சுற்றிவர ஆறுகளும், குளங்களும் தாராளமாகவே நீர் வசதிகளுடன் இருக்கின்றன. இங்கே தட்டுப்பாக இருப்து தண்ணீர் அல்ல. நல்லெண்ணம்தான்) முறையாக உணவு வசதிகள் கிடையாது!! கழிப்பிட வசதிகள் கூட கிடையாது!!! மருத்துவ வசதிகள், நடமாட்ட சுதந்திரம், உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சுதந்திரம்….இப்படியாக இல்லாதவற்றின் பட்டியல் மிக நீண்டது. இது வெறும் நிர்வாக குறைபாடுகள் என்பதா? அல்லது தமிழ் மக்களுக்கு வழங்கும் கூட்டுத் தண்டனை என்பதா? கிரிமினல் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலைகள் கூட இத்தனை குறைபாடுகள் இயங்க முடியாதே. அதனைவிட மோசமான நிலைமைகளுடன் “அகதி முகாம்களை” வைத்திருப்பது பாரிய மனித உரிமை மீறலாகவும் போர்க்கால குற்றமாகவும் கருதப்படக் கூடியவையாகும்.
இந்த மக்கள் ஒன்றும் போர்க்கைதிகள் அல்லவே. அரசின் கூற்றுப்படியே, இவர்கள் புலிகளினால் பலவந்தமாக, தமது போர்க்கவசமாக பயன்படுத்தும் நோக்கில் தடுத்து நிறுத்தப்பட்டவர்கள். இவர்களின் சுதந்திரத்திற்கு போராடுவதாகத்தானே இந்த அரசு தனது போர் நடவடிக்கைகளுக்கான நியாயப்பாடுகளை முன்வைத்தது. இப்போது இவர்களை இப்படியாக மீட்டு கொண்டு வந்து அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தடை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதன் நியாயம் எதுவுமே இருக்க முடியாது. இது தமிழருக்கு வழங்கப்படும் கூட்டு தண்டனையாகவே கருதப்பட வேண்டும். அதனால், உடனடியாகவே இந்த தடை முகாம்களை மூடிவிட்டு, அதிலிருக்கும் மக்களை, தாம் விரும்பும் இடத்தில் சுதந்திரமாக குடியிருக்க அனுமதிக்க வேண்டும். அவர்களது சொந்த குடியிருப்பிடங்களுக்கு அவர்கள் திரும்புவதில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால். அவர்களை ஐ. நா மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களது பொறுப்பில் விடவேண்டும்.
இவற்றைவிட தொடரும் படுகொலைகள் மற்றும் கப்பம் வசூலித்தல், பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவை உடனடியாகவே முடிவுக்கு கொண்டுவரப்பட்டாக வேண்டும். நடந்து முடிந்த பேரழிவின் அதிர்ச்சியில் இருந்து தமிழ் மக்கள் சுதாகரித்து எழுவதற்கு முன்னரே உள்ளூராட்சி தேர்தல் இல்லையென்று யார் அழுதார்களாம். இந்த தேர்தல்கள் முழுக்க முழுக்க சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நடவடிக்கை என்பதால் இதில் தமிழ் மக்கள் பங்கெடுக்காது முற்றாகவே நிராகரிக்க வேண்டும். இந்த தேர்தலின்போது பத்திரிகை ஜனநாயகம் படும்பாடு நாமறிந்ததுதானே.
நடப்பு நிலைமைகளை உற்று நோக்கும் எவருமே, அரசில் தீர்வொன்றை முன்வைப்பதற்கு சிங்களத் தலைமை தயாராக இல்லை என்ற உண்மையை துலாம்பரமாக கண்டு கொள்வார்கள். இதற்கு மகிந்தவின் இனவாதம் காரணமா அல்லது சிங்கள இனவாதம் மகிந்தவின் நல்லெண்ணங்களையும் மீறி செயற்பட இடங்கொடுக்கவில்லையா என்பது இங்கு முக்கியமல்ல. தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை கொண்டு வர சிறீலங்கா அரசு தயாராக இல்லையென்பதே இங்கு நாம் குறித்துக் கொள்ள வேண்டியதாகும். புலிகள் போன்ற, சர்வதேசத்தின் முதல்தர கெரில்லா இயக்கத்தை தோற்றடித்த சிறீலங்கா அரசினால் சிங்கள பேரினவாதத்தை முகம் கொடுக்க முடியவில்லை என்றால் அது பேரினவாத சித்தாந்தத்தின் பலத்தை நமக்குக் காட்டுகிறது. இதற்கு மேல் தமிழ் மக்கள் தம்மை ஒழுங்கமைத்துக் கொண்டு பல்வேறு வழிமுறைகளிலும் போராடுவதன் மூலமாக மட்டுமே தமது உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த காலத்தில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும், கலந்து கொள்ளாமல் பார்வையாளர்களாக அல்லது ஆதரவாளர்களாக இருந்த ஒவ்வொருவருக்கும் போராட்டத்தின் தோல்வியில், மக்களது அழிவில் ஏதோ ஒருவிதத்தில் பங்கு இருக்கிறது. இவர்களது செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் – சுயவிமர்சனங்கள் இருப்பது தவிர்க்க முடியாததே. இவற்றை முன்வைத்து ஒரு உரையாடலினூடாக நாம் ஓர் உயர்ந்தகட்ட புரிதலை எட்ட முனைவது, அல்லது அது சாத்தியமில்லாத போது, எமக்கிடையே உள்ள வேறுபாடுகளை கோடு கீறிக்கொள்ள முனைவது அவசியமே.
ஆனால் அதேவேளை இன்று ஏற்பட்டுள்ள இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பியாக வேண்டியது, மிகவும் அவசரமான கடமையாக எம் எல்லோர் முன்னும் நிற்கிறது. தலைமையை உருவாக்குவது, இணைந்து செயற்படுவது என்றவுடன், உடனடியாகவே மீண்டும் புலிகளுக்கு அரங்கம் அமைத்துக் கொடுக்க முனைவதாக கருதத் தேவையில்லை. எந்தவிதமான அமைப்பாதல் நடவடிக்கைகளும் ஜனநாயகம், பன்முகதன்மை, வெளிப்படையான தன்மை, மற்றும் பதில் சொல்லும் பொறுப்பு என்பவற்றை அடிப்படையாக கொண்டதாகவே அமைய முடியும். வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பவர்கள், தத்தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப தாம் விரும்பிய வடிவங்களில் ஒழுங்கமைத்துக் கொள்ளலாம். இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களது கூட்டுசெயற்பாடாக எமது அரசியல் முன்னெடுப்புகள் அமையட்டும். தொடரும் உரையாடல்களினூடாக உயர்ந்த பட்ச ஒற்றுமை அடையப்படும் பட்சத்தில் குழுக்கள் இன்னமும் நெருக்கமாக செயற்படுவது, இணைவது சாத்ததியப்படலாம். இல்லாவிட்டால் தேசியம், ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை அடிப்படையாக கொண்ட ஒரு விரிவான கூட்டமைப்பு பற்றிய சிந்தனைகளுடன் எமது நடவடிக்கைகளை சிறிய அளவிலேனும் உடனடியாக தொடங்கியாக வேண்டும்.
இன்றுள்ள நிலைமையின் பாரதூரமான தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் ஏகபோக தலைமையை நிலைநாட்ட முனைந்த புலிகள், ஏனைய மாற்று அமைப்புக்கள் எதுவுமே இல்லாது வன்மமாக அழித்துவிட்டு இன்று தாங்களும் அழிந்து போயுள்ளார்கள். நாட்டிலுள்ள ஏனைய அமைப்புக்கள் சிறீலங்கா அரசின் கைப்பாவையாக, அல்லது தமது உயிரின் உத்தரவாதம் கருதி சிறீலங்கா அரசிற்கு சவால் விடுக்க முடியாதவர்களாக மௌனமாக்கப் பட்டுள்ளார்கள். புலம் பெயர் புலிகளோ இன்னமும் பினாமி சொத்து பற்றிய பிரச்சனையை தீர்க்க முடியாமல் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சிறீலங்கா அரசு தானாக தீர்வுகளை முன்வைக்காத போது ஐ. நா மற்றும் சர்வதேச அமைப்புக்கள் மூலமாக நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியும், ஏனைய பலவிதமான போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுப்பதனாலுமே போராட்டத்தை மேற்கொண்டு தொடர முடியும். இதற்கு நாம் விரிவான அளவில், பரந்துபட்ட அளவில் உடனடியாக அமைப்பாக ஒழுங்கமைக்கப்பட்டாக வேண்டும். அதுவும் சர்வதேசரிதியில் இதனை செய்தாக வேண்டும். நாடு கடந்த பாராளுமன்றமோ, அல்லது பலஸ்தீன தேசிய கவுன்சில் போன்ற வடிவங்கள் மூலமாகவோ அல்லது இன்னோரன்ன வேறு வடிவங்கள் மூலமாகவே இதனை செய்தாக வேண்டும்.
இந்த நோக்கில் யார் யார் இணைந்து செயற்படு முன்வருகிறார்களோ அவர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு செயற்பட நாம் தயாராக இருக்க வேண்டும். புலிகள் மட்டுமல்ல, ஏனைய அமைப்புக்களான EPRLF அமைப்பு, ரெலோ அமைப்பு, புளொட் அமைப்பு, NLFT….. போன்ற சிறு குழுக்களையும் இணைத்து செயற்பட தயாராக இருக்க வேண்டும். தமிழர் தேசியம், ஜனநாயகம், பன்முக தன்மை என்பவை மட்டுமே இந்த செயற்பாடுகளில் இணைந்து கொள்வதற்கான நிபந்தனைகளாக இருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் புலிகள் தேசிய விடுதலைக்கு இழைத்த தவறுகள் சிறியவை அல்ல. அதனை யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அந்த கட்டத்தில் ‘புலியெதிர்ப்பு வாதத்திற்கு’ ஒரு தார்மீக நியாயமும் இருந்தது. ஆனால் இப்போது புலிகளே அழிந்து விட்டார்கள். இதற்கு மேலும் நாம் புலியெதிர்ப்புவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதானது, எதிர்காலத்தில் நாம் செய்தாக வேண்டிய பணிகளில் இருந்து எம்மை வழிதவற வைத்துவிடும். எனது நண்பர் ஒருவர் கூறியது போல இது “ பாம்பைப் பிடித்த குரங்கின் கதை” ஆகிப் போய்விடக் கூடாது அல்லவா?
புலிகள் திருந்துவார்களா, அவர்கள் ஏனையோரை விழுங்கிவிட மாட்டார்களா போன்ற கேள்விகள் நியாயமாவைதாம். இது பற்றி யாரும் யாருக்கும் உத்தரவாதம் வழங்க முடியாது. ஆனால் இப்போதுள்ள முக்கிய வித்தியாசம், பன்முக தன்மையை அங்கிகரிப்பதாகும். ஆனால் இதனையும் கடந்த இன்னும் பல விடயங்களை தற்போதைய புலிகளின் தலைமை செய்தாக வேண்டும். கடந்த காலத்தின் பாரிய மனித உரிமை மீறல்கள், அரசியல் படுகொலைகள், ஏக பிரதிநிதித்துவம் என்ற நிலைப்பாடு, இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை தவறென ஒத்துக் கொண்டு, சுயவிமர்சனம் செய்வதன் மூலமாக மட்டுமே, புலிகளின் புதிய தலைமை தனது நம்பக தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்வதானால், புலிகள் தமது கட்ந்த கால அரசியலை கட்டுடைக்காமல், மன்னிப்போம் மறப்போம் என்ற பாணியில் அதே அரசியலை தொடர முனைவது எந்த நல்ல விளைவுகளையும் நீண்ட கால நோக்கில் கொண்டு வந்துவிட முடியாது.
இப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ், யாரும் யாரோடும் நிர்ப்பந்தமாக இணைந்தாக வேண்டிய அவசியம் கிடையாது. தாம் விரும்பிய நபர்களுடன், தாம் சரியென நம்புக் கொள்கைகளின் அடிப்படையில், தாம் தேர்ந்தெடுக்கும் அமைப்பு வடிவங்களில் அவரவர்கள் இணைந்து அமைப்பாக்கம் பெறுவோம். இப்போதைக்கு இந்த அமைப்புகளின் ஒரு விசாலமான கூட்டுச் செயற்பாடு (Grand Coalition) என்பதற்கு மேல் நாம் யாரையும் நிர்ப்பந்திக்கத் தேவையில்லை.
நாம் எம்மை ஒழுங்கமைப்பது, விரிவான ஒரு கூட்டமைப்பை நோக்கி முன்னேறுவது போன்ற விடயங்களை பேசும் போதே இன்று தளத்திலுள்ள நிலைமைகள் பற்றி பாராமுகமாக இருக்கவும் முடியாது. அந்த விதத்தில் பின்வரும் விடயங்கள் எமது உடனடி கோரிக்கைகளாக அமைய வேண்டும் என்று கருதுகிறேன்.
• அனைத்து அகதி முகாம்களையும் உடனடியாக மூடி மக்களை தத்தமது சொந்த இடங்களில் குடியமற அனுமதி: மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அந்த முகாம்களை சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
• அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
• இராணுவத்தை திருப்பியழை. தேவைப்பட்டால் ஐ. நா. படைகளை நிலை நிறுத்து வேண்டும்.
• அனைத்து துணை இராணுவ குழுக்களையும் ஆயுதம் களைப்பு செய்ய வேண்டும்.
• அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அமைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் உடன் இரத்து செய்தாக வேண்டும்.
• கடந்த காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல் மற்றும் போர்க்கால குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணைக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.
• அரசியல் தீர்வுகளை உடனடியாக முன்வைத்து, தமிழ் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
• தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை எட்ட முடியாவிடில் தமிழர் தாயகத்தை ஐ. நா பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். ஐ. நா வின் பரிபாலனத்தின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை செயற்படுத்தட்டும்.
• உலகத்திற்கு நாடகமாடும் உள்ளூராட்சி தேர்தல்களை உடன் இரத்து செய்ய வேண்டும். தமிழ் மக்கள் இந்த தேர்தலை நிராகரிக்க வேண்டும்.
இதனுடன் தொடர்புபட்ட முன்னைய கட்டுரை : நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்
sami
பொதுவாக ஒரு நாட்டில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றே ஜனநாயகவாதிகள் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் தேர்தல் வேண்டாம் என்ற கோரிக்கையை “தேசபக்தன்” பேரில் வைக்கும் ஜனநாயகத்தை இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறோம்.
புலி எதிர்ப்புவாதிகள் பற்றி பேச ஆரம்பித்த கட்டுரை பின் புலிகளுடன் ஜக்கியப்பட வேண்டும் என விரிகிறது. இதை சொல்வதற்கு ஏன் இப்படி நீட்டி முழங்கவேண்டும். புலிகளுடன் ஜக்கியப்படவேண்டும் என ஒற்றை வரியில் சொல்லியிருக்கலாம். மக்கள் இதற்கு சம்மதிக்கமாட்டார்கள் என்பது கட்டுரையாளருக்கே தெரிந்திருக்கிறது போலும்.
“சிங்கள மக்கள் ஜக்கியத்துக்கு தயாரில்லை. எனவே ஜக்கியப்புரட்சி சாத்தியமில்லை “என்று கட்டுரையாளர் கூறுகிறார். இது காலம் காலமாக தமிழீழத்தை முன்வைத்தவர்கள் கூறிவரும் வாதம் ஆகும்.
ஜக்கியப்புரட்சி சாத்தியம் இல்லையென்றால் அதைவிட சாத்தியக்குறைவு தமிழீழம் என்பதை எம் கண்முன்னே கண்டுவிட்டோம். எனவே ஜக்கியம் சாத்தியம் இல்லை என்று கூறுவதன் மூலம் பிரிந்து போவதை நியாயப்படுத்த முடியாது .மாறாக தமிழீழம் ஏன் சிறந்த தீர்வு என்பதையும் அதனை எவ்வாறு வெற்றி கொள்ள முடியும் என்பதையும் தெளிவாக முன்வைக்க வேண்டிய கடப்பாடு தமிழீழத்தை முன்வைப்பவர்களுக்கு உண்டு என்பதை மதிப்புக்குரிய கட்டுரையாளர் “தேசபக்தன்” கவனத்தில் கொள்ளவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஜக்கியப்புரட்சியைக் கோருவோர் மார்க்சியத்தின் அடிப்படையில் ஒரு சோசலிச சமுதாய நோக்குடன் அதனை முன்வைக்கின்றனர். அவர்கள் தமிழீழக் கோரிக்கையானது தமிழ் சிங்கள பாட்டாளிவர்க்க ஒற்றுமைக்கு தடையாக இருப்பதோடு தமிழ்மக்களிடையேயான ஒற்றுமைக்குக்கூட தடையாக இருப்பதை காண்கின்றனர். மேலும் தமிழீழக்கோரிக்கையானது இந்திய மற்றும் அந்நிய ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு வழிசமைக்கும் என எண்ணுகின்றனர். இவை உண்மைதான் என்பதை கடந்தகால வரலாறு கண்முன்னே நிருபித்துள்ளது.
எது சாத்தியம்? எது சாத்தியம் இல்லை? என்று பார்ப்பதற்கு முதல் எது சரியான தீர்வு? எது தவறான தீர்வு? என்றே பார்க்கப்படவேண்டும். இதுவே புத்ததிசாலித்தனமான அணுகுமுறையாக இருக்கும். அப்படியாயின் தமிழீழம் தவறான தீர்வு என்பதையும் ஜக்கியப்புரட்சியே சரியான தீர்வு என்பதையும் வரலாறு எமக்கு நன்கு சுட்டிக்காட்டியுள்ளது.எனவே அடுத்து இதனை எப்படி சாத்தியமான தீர்வாக மாற்றமுடியும் என்பதை நோக்கவேண்டும். அதைக்கூட சன்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்கட்சி மற்றும் தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவை போன்றவை “புதிய ஜனநாயகப்புரட்சி” என்று தெளிவான முன்வைத்துள்ளன. எனவே அவற்றை எடுத்து முன்வைத்து அதில் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆராயாமல் வெறுமனே ஜக்கியப்புரட்சி சாத்தியம் இல்லை என்று கூறுவது ஒரு உண்மையான சிறந்த ஆய்வாளருக்கு அழகல்ல .
எல்லோரும் ஜக்கியப்படவேண்டும் என்று கட்டுரையாளர் “தேசபக்தன்” கோருகிறார். உண்மைதான். இந்த ஜக்கியம் ஒரு நல்ல வார்த்தைதான். அதனால்தான் போலும் கே.பி முதல் கருனா ஈறாக இந்த தேசபக்தன் வரை எல்லோரும் அதனை இன்று உச்சரிக்கின்றனர். ஆனால் இந்த ஜக்கியத்தைக் கோருவோர் ஒரு விடயத்தை மறந்து விடுகின்றனர். அவர்கள் யார் யார் எல்லாம் ஜக்கியப்படவேண்டும்? என்ன அடிப்படையில் ஜக்கியப்படவேண்டும்? எப்படி ஜக்கியப்படவேண்டும்? என்பதனை தெளிவாக விளக்குவதில்லை. இங்குதான் சுட்சுமம் ஒளிந்திருக்கிறது. இதனை அவர்கள் விளக்க முனைந்தால் அவர்களின் உண்மை முகம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடும்.
புலிகள் அமெரிக்காவை நம்பினார்கள்.
புலிகள் லண்டன் நோர்வேயை நம்பினார்கள்.
புலிகள் இந்தியாவை நம்பினார்கள்.
புலிகள் கனிமொழி கஸ்பார் கூட்டத்தை நம்பினார்கள்.
புலிகள் இறுதியாக கூட்டனி பா.ஊ நேருவைக்கூட நம்பினார்கள்.
ஆனால் அவர்கள் ஒருபோதும் மக்களை நம்பவில்லை.
மக்கள் சக்தியே மகத்தான சக்தி.
மக்கள் சக்தி அணுகுண்டை விட வல்லமையானது என்பதை
புலிகள் ஒருபோதும் நம்பவில்லை.ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனாலேயே புலிகள் அழிந்தார்கள். இப்போது மீதியிருக்கிற கே.பி கூட்டமும் இத்தகையானதே. இத்தகைய புலிக்கூட்டத்தினருடனே ஜக்கியப்படும்படி கட்டுரையாளர் கோருகிறார். அதுவும் “தேசபக்தன்” என்னும் பேரால்?
kuru
கட்டுரையாளர் “தேசபக்கதன்” அல்ல மாறாக “புலிபித்தன்”என்றே பெயர் கொள்வது பொருத்தமாக இருக்கும். புலிகள் பலமாக இருந்த காலத்திலேயே அவர்களுடன் ஜக்கியப்படுவதற்கு இவ்வாறு பலர் சொல்ல நாம் கண்டோம். தற்போது மீண்டும் புலிகளுடன் ஜக்கியப்படுவதற்கு “தேசபக்தன்” பேரால் சொல்வதை காண்கிறோம். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. காலம் காலமாக இவ்வாறான மக்கள் மீது நம்பிக்கையற்று மக்களுக்காக உண்மையாக உழைக்க திராணியற்ற கூட்டத்தை நாம் கண்டுவருகிறோம். ஆனால் இவர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் எத்தனை பக்கங்கள் நீட்டி முழங்கினாலும் இவர்களின் கனவுகள் நிறைவேறப் போவதில்லை.
kuna
“உலகத்திற்கு நாடகமாடும் உள்ளூராட்சி தேர்தல்களை உடன் இரத்து செய்ய வேண்டும். தமிழ் மக்கள் இந்த தேர்தலை நிராகரிக்க வேண்டும்.”//
தேர்தல் பாதையை நிராகரித்து தேர்தல் வேண்டாம் என்கின்றாரா அல்லது தேர்தல் பாதையை ஏற்றுக்கொண்டு தற்போதைக்கு தேர்தல் வேண்டாம் என்கிறாரா அல்லது உள்ளுராட்சி தேர்தல் மட்டும் வேண்டாம் என்கிறாரா? இவர் கூற்றுப்படி அகதிகள் மீள் குடியேற்றம் செய்த பின் தேர்தல் வைத்தால் அதனை நியாயமானது என்றும் அதன் மூலம் பிரச்சனைகள் தீர்த்துக்கொள்ள முடியும் என்று கருதுகிறாரா?
“தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை எட்ட முடியாவிடில் தமிழர் தாயகத்தை ஐ. நா பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும்.”//
எமது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோது ஜ.நா வின் சுயருபத்தை நாம் நன்கு கண்டுகொண்டோம். அதைவிட தற்போது ஜ.நா வின் கண்காணிப்பில் இருக்கும் நாடுகளில் எப்படி பிரச்சனைகள் தீர்க்கப்படுகினறன என்பதையும் நாம் நன்கு கண்டுவருகிறோம். இந்த லட்சனத்தில் கட்டுரையாளர் எப்படி ஜ.நா வின் கண்காணிப்பில் வைக்கவேண்டும் என்று கோருகிறார்?
“ஐ. நா வின் பரிபாலனத்தின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை செயற்படுத்தட்டும்.”//
மலையதமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கமாட்டார்கள். கிழக்கு மக்களில் பலரும் யாழில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலரும் கூட இந்த தமிழீழத்தை ஆதரிக்கபோவதில்லை. எனவே சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நிச்சயம் தோல்விதான். அப்படி தோல்வி ஏற்பட்டால் கட்டுரையாளர் அதன்பின் என்ன நிலை எடுப்பார்?
“அரசியல் தீர்வுகளை உடனடியாக முன்வைத்து தமிழ் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.”//
என்ன அரசியல் தீர்வு? இதனை யார் முன்வைப்பது? யார் முன்வைப்பது? தமிழ்மக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவதா?அல்லது சிங்கள மக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவதா? அல்லது அனைத்து மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்துவதா?கட்டுரையாளர் இதனை விரிவாக விளக்குவாரா?
“கடந்த காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல் மற்றும் போர்க்கால குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணைக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.”//
அப்படியாயின் புலிகளின் கொலைகள் பற்றியும் விசாரிக்க வேண்டிவரும். அதற்கு கே.பி பொறுப்பு எடுப்பாரா? அல்லது புலிகளுடன் ஜக்கியப்படவேண்டும் என்று கோரும் கட்டுரையாளர் தேசபக்தன் பொறுப்பெடுப்பாரா? மேலும் கடந்த காலம் என்றால் எப்போது இருந்து இதனை மேற்கொள்வது? துரையப்பா கொலையில் இருந்து ஆரம்பிப்பதா? அப்படியாயின் அதற்கு அமிர்தலிங்கம் சார்பில் ஆனந்தசங்கரி அல்லது மங்கையர்கரசி பொறுப்பெடுப்பார்களா?
“அனைத்து அகதி முகாம்களையும் உடனடியாக மூடி மக்களை தத்தமது சொந்த இடங்களில் குடியமற அனுமதி: மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அந்த முகாம்களை சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்”//
முஸ்லிம் மக்கள் இத்தனை வருடமாக அகதிமுகாம்களில் இருக்கின்றனர். கிழக்கு மக்கள் பலரும் தற்போதும் அகதி முகாம்களில் இருக்கின்றனர். இவர்கள் எல்லோரைப் பற்றியும் இதுவரை எவ்வத கவலையும் கொள்ளாது இருந்துவிட்டு தற்போது மட்டும் அகதிகளின் பேரால் கோரிக்கை வைக்க என்ன காரணம்? “தேசபக்தன்” யாழ் தமிழர்களின் அகதி மட்டும் தான் நினைப்பாரோ?
இன்றைய பல பிரச்சனைகள் பலவற்றுக்கு காரணமாக இந்திய அரசே காரணமாக இருக்கின்றது. ஆனால் எல்லாவற்றையும் குறிப்பிட்டு நீண்ட கட்டுரை எழுதி தேசபக்தனுக்கு முக்கியமான இந்த இந்தியாவின் தலையீடு குறித்து ஒரு வரி எழுதமுடியாமற் போனதின் மர்மம் என்ன? தேசபக்தன் ஒரு மறைமுகமான இந்திய பக்தனோ என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது.
kandi
தேசபக்தன் அவர்களே !
தேர்தல் வேண்டாம் என்று கோருவது தேசபக்தி அல்ல.
தமிழீழம் கோருவது மட்டுமே தேசபக்தி அல்ல.
புலிகளுடன் ஜக்கியபடக்கோருவது தேசபக்தி அல்ல.
ஜ.நா வை நம்பி அழைப்பது தேசபக்தி அல்ல.
சிங்கள நட்பு சக்தியை வெறுப்பது தேசபக்தி அல்ல.
இந்திய எதிரியை இனம்காண மறுப்பது தேச பக்தி அல்ல.
தேசபக்தி என்றால் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்-
புரட்சியாளர்கள் தேசவிரோதிகள் அல்லர் மாறாக அவர்களே உண்மையான தேசபக்தர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
Karnan
சாமியுடைய கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். சாமி நீங்கள் ஐக்கியப்பட்ட புரட்சியின் சாத்தியம் பற்றி விரிவாக எழுத வேண்டும். அக்கால கட்டத்தில் பேரவையின் செயற்பாடுகள் பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால் ஏன் அதனை அன்று உங்களால் முன்னெடுக்க முடியவில்லை என்பதையும் நீஙகள் தெளிவு படுத்துவது அவசியம்.
சண்முகதாசன் போன்றவர்களும் மேட்டுக்குடியில் இருந்து வந்ததனாலேயெ அவர்களால் போராட்டத்தை தொடர முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சாமி அது பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றைப் பதிவு செய்யவும்.
sami
தோழர் சண்முகதாசன் “மேட்டுக்குடியை”சார்ந்தவர் என்றும் அதனாலேயே அவரால் புரட்சியை முன்னெடுக்க முடியவில்லை என்றும் குற்றம்சாட்டுவது தவறாகும். இங்கு “மேட்டுக்குடி”என்பது என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்று புரியவில்லை. ஒருவேளை உயர்சைவ வேளான்குடி என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறதா அல்லது பணக்கார குடும்பம் என்பதற்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்கவேண்டும். பணக்காரர் என்பதற்கு பயன்படுத்துவதாக இருந்தால் சண் அவர்கள் அப்படி ஒன்றும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் புலமைப்பரிசு கிடைத்தபடியால்தான் தன்னால் பல்கலைக்கழக படிப்பு படிக்க முடிந்தது என்றும் தனது குடும்பம் காசு கட்டி படிப்பிக்கும் அளவிற்கு வசதியானதாக இருக்கவில்லை என்று தனது “ஓரு கம்யுனிசப் போராளியின் அரசியல் கனவுகள்” என்னும் நுhலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பீட்டர்கெனமன் மற்றும் தலைவர் விக்கிரமசிங்க போன்றோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கநடதையா இறந்தபின்பு அவரின் மனைவிக்கு மறுவாழ்வு கொடுத்தார். அந்தளவில் விதைவைத் திருமணம் புரிந்து அன்று புரட்சிகர முன்னோடியாக திகழ்ந்தார். அவர் இறக்கும்வரை கட்சியின் முழுநேர ஊழியனாகவே இருந்துள்ளார். அவருக்கு பிரத்தியேக வருமானம் எதுவும்இருக்கவில்லை. மாறாக லண்டனில் இருந்த வழக்கறிஞர் சத்தியேந்திரா மற்றும் மார்க்சிய ஆய்வாளர் சிவானந்தன் போன்றோர் அவர் இறக்கும்வரை பண உதவிகள் செய்துள்ளனர். அவருடைய இறுதிக்காலங்களில் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளேன். அவர் எவ்வளவு கஸ்ட நிலையில் இருந்தார் என்பதை நன்கு அறிவேன். எனவே அவர் மேட்டுக்குடியை சேர்தவர் என்பதால் புரட்சி செய்யவில்லை என்பது தவறாகும். மேலும் கொள்கையில் உறுதி இருந்தால் அவர் எந்தக்குடியை சேர்ந்தவர் என்றாலும் புரட்சியை முன்னெடுக்கலாம். எங்கெல்ஸ் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் இறுதி வரை தனது கொள்கையில் உறுதியாக இருந்து மார்க்சியத்தை வளர்க்கவில்லையா? தோழர் லெனின் மேட்டுக்குடியை சேர்ந்தவர். அவர் ரஸ்சியப்புரட்சியை வென்றெடுக்கவில்லையா?எனவே மேட்டுக்குடியை சேர்ந்தவர் என்பதால் புரட்சியை முன்னெடுக்கவில்லை என்று கூறுவது தவறாகும்.
தோழர் சண்முகதாசன் அவர் இலங்கைப்புரட்சியை வென்றெடுக்கவில்லை என்பது உண்மைதான் எனினும் இலங்கை அரசியலில் அவரின் பங்கை குறைத்து மதிப்பிடமுடியாது. குறிப்பாக திரிபுவாதத்திற்கு எதிராக மாசேதுங் சிந்தனைகளை வளர்த்து எடுத்ததில் அவரின் பங்கு அளவிடமுடியாததாகும்.
பாராளுமன்றபாதையை தோலுரித்து காட்டியமை
ஆயுதப்போராட்டப்பாதையே சரி என்பதை நிருபித்து அதையே கட்சியின் பாதையாக முன்னெடுத்தமை
பீட்டர்கெனமன் விக்கிரமசிங்க போன்றோரின் மட்டுமல்ல றோகனவிஜயவீராவின் ஜே.வி.பி திரிபுவாதத்தையும் அம்பலப்படுத்தியமை
கொல்வின்ஆர்டிசில்வா என்.எம.பெராரா போன்ற ரொட்சியவாதிகளை தோலுரித்துக்காட்டியமை
சாதீயப்போராட்டத்திற்கு தலைமைதாங்கி முன்னின்றமை
தமிழீழம் தவறான தீர்வு என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியமை
இந்தியா நண்பன் அல்ல எதிரி என்பதை அன்றே கூறியமை
இவ்வாறு பல அளப்பரிய பங்களிப்பை இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் செய்த தோழர் சண்முகதாசன் அவர்களை “மேட்டுக்குடி” என்பதால் புரட்சி செய்யவில்லை என்று கொச்சைப்படுத்துவது தவறாகும்.இவ்வாறு கூறுவது இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றையே கொச்சைப்படுத்துவதாகும்.
மாயா
கட்டுரையாளர் யாருக்கு தேசபக்தன் என்பதை கட்டுரை வழி வழிந்துள்ளீர்கள். ஆரம்பத்திலிருந்தே எப்படி உங்கள் கருத்தை திணிப்பது என சொதப்பு சொதப்பு என சொதப்பி கடைசியில் அனைத்தையும் சொதப்பிட்டீங்கள். சபாஷ்.
உங்கள் கடைசிக் கோரிக்கையை படித்தால் போதும் , முழுக் கட்டுரையையும் படிக்கவே தேவையில்லை.
உங்கள் கேள்விகளினூடாக நான் கேட்கவிரும்பும் கேள்விகள் ?
• அனைத்து அகதி முகாம்களையும் உடனடியாக மூடி மக்களை தத்தமது சொந்த இடங்களில் குடியமற அனுமதி: மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அந்த முகாம்களை சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
– சொந்த இடங்களில் வாழ்ந்த மக்களை புலிகளை ஆடு மாடுகளைப் போல் புலிகள் இழுத்துக் கொண்டு போன போது, அது குறித்து எழுதாத நீங்கள், சர்வதேசத்தை நம்பி ஏமாந்து சாவைத் தழுவிக் கொண்டவர்கள் எதை நம்பி முகாம்களை சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கச் சொல்கிறீர்கள்?
• அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
– அதாவது புலிகளை விடுதலை செய்யக் கோருகிறீர்களா? நாடு முழுவதும் குண்டுகளை போட்ட புலி பயங்கரவாதிகளை விடுதலை செய்யச் சொல்கிறீர்களா? புலிகள் ஏனைய இயக்கத்தவர்களை அடைத்து வைத்திருந்த போது இதே போன்ற ஒரு வேண்டுகோளை விடுத்தீர்களா?
• இராணுவத்தை திருப்பியழை. தேவைப்பட்டால் ஐ. நா. படைகளை நிலை நிறுத்து வேண்டும்.
– புலிகள் வன்னியில் இருந்த போது ஐநா படைகளை வரக் கூடாதென்று தடுத்தது புலிகள்தான். அது மக்களை புலிகளிடமிருந்து பிரித்து எடுத்துவிடுவார்கள் என்று, இன்று மக்களே இல்லாத அதுவும் யுத்தமே இல்லாத இடத்துக்கு ஐநா படையொன்று எதற்கு?
• அனைத்து துணை இராணுவ குழுக்களையும் ஆயுதம் களைப்பு செய்ய வேண்டும்.
– புலிகள் ஆயுதங்களை வைத்திருக்கும் போது இது ஆயுதக் குழுவாகத் தெரியவில்லையா? புலிகளிடம் இதே கோரிக்கையை எப்போதாவது வைத்தீர்களா? இப்போது ஆயுதக் குழுக்கள் தொடர்ந்து ஆயுதங்களை களைந்து வருகின்றனவே?
• அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அமைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் உடன் இரத்து செய்தாக வேண்டும்.
– பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதாக நினைக்கிறீர்களா? அப்படியானால் ராம் போன்றவர்களது அறிக்கைள் தமிழீழத்திலிருந்து வருகின்றனவே , இவை எதற்காக?
• கடந்த காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல் மற்றும் போர்க்கால குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணைக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.
– புலிகள் செய்த படுகொலைகளையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டுமா? அல்லது அது அரசு இல்லாததால் அதை கணக்கிலெடுக்க இயலாதா?
• அரசியல் தீர்வுகளை உடனடியாக முன்வைத்து, தமிழ் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
– நீங்கள் தேர்தலையே பகிஸ்கரிக்கச் சொல்கிறீர்கள். பிறகேன் அபிப்பிராய வாக்கெடுப்பு?
• தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை எட்ட முடியாவிடில் தமிழர் தாயகத்தை ஐ. நா பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். ஐ. நா வின் பரிபாலனத்தின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை செயற்படுத்தட்டும்.
– இது ஒரு அறிவார்ந்த கேள்வியேயல்ல. இதை அந்த மக்கள்தானே தீர்மானிக்க வேண்டும். இலங்கை ஒரு நாடு, ஐநாவால் சிறீலங்காவின் அனுமதியின்றி நுழையவே முடியாது. அப்படியிருக்கும் போது நீங்கள் சொல்லும் பகுதியை எப்படி அந்நிய சக்தியிடம் கொடுப்பது?
• உலகத்திற்கு நாடகமாடும் உள்ளூராட்சி தேர்தல்களை உடன் இரத்து செய்ய வேண்டும். தமிழ் மக்கள் இந்த தேர்தலை நிராகரிக்க வேண்டும்.
– நீங்கள்தான் ஐ. நா வின் பரிபாலனத்தின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை செயற்படுத்த வேண்டும் என்று சொல்பவர். அதே நேரத்தில் தேர்தலை ரத்து செய்யச் சொல்லியும் நீங்கள்தான் முன்மொழிகிறீர்கள். உங்களுக்கே உங்கள் கருத்துகளின் முரண்பாடு விளங்கவில்லையா?
உங்கள் கட்டுரை சுப்பர் சொதப்பல். முடிந்தால் மேலே உள்ளவற்றுக்கு பதில் தாருங்கள்.
நன்றி.
thampi
விவாகரத்து உரிமை இருக்கின்றது என்பதற்காக எல்லாக் குடும்பமும் பிரிந்து வாழவேண்டும் என்று யாரும் கூறமாட்டார்கள். அதுபோல் பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமை இருக்கிறது என்பதற்காக எல்லா இனமும் பிரிந்து செல்ல வேண்டும் என்று அர்த்தம் அல்ல. தோழர் லெனின் கூறியது போல் ஒரு பிரிவினை முற்போக்கானதா? பிற்போக்கானதா? அல்லது பிரிவினை புரட்சிக்கு வழிசமைக்குமா அல்லது புரட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பார்த்தே அதனை ஆதரிக்கவேண்டும். அந்தவகையில் தமிழீழக்கோரிக்கையானது தமிழ்மக்களுக்கு எந்தவகையிலும் சிறப்பான தீர்வு இல்லை என்பதோடு அது புரட்சிக்கு எதிரானதாகவும் இருக்கிறது. அதனால்தான் புரட்சிவாதிகள் தமிழீழக் கோரிக்கையை நிராகரித்து ஜக்கிய இலங்கையில் ஓர் “புதிய ஜனநாயகப் புரட்சி”யை முன்வைக்கின்றனர். எனவே தமிழ் மக்களையே ஜக்கியப்படுத்த தவறுகின்ற தமிழீழக் கோரிக்கையை ‘தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியத்தை மறுக்கின்ற தமிழீழக் கோரிக்கையை ‘சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கின்ற தமிழீழ கோரிக்கையை சரிஎன்றும் நியாயமானது என்றும் கூறுவோர் இனியும் வெறுமனே “ஜக்கியம் சாத்தியம் இல்லை. எனவே தமிழீழம் “என்று புராணம் பாடாமல் தங்களின் கோரிக்கை எப்படி தமிழ் மக்களுக்கு சரியான நியாயமான சாத்தியமான தீர்வு என்பதை விளக்கவேண்டும். அவர்கள் மக்களை மீண்டும் 1983ம் ஆண்டுக்கு அழைத்து செல்ல ஆசைப்படுகின்றனர். அப்போது கூறியதுபோல் “இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும்” என்று கொஞ்சமும் வெட்கம் அன்றி கூற விரும்புகின்றனர். ஆனால் இம்முறை அவர்கள் ஆசை நிறைவேறப்போவதில்லை. மக்கள் நீண்ட நெடிய யுத்தத்தில் நல்ல பாடங்களை பெற்றுள்ளார்கள். எனவே இனி இந்த தமிழீழம் மற்றும் இந்திய வெளவால் கதைகள் எடுபடப்போவதில்லை என்பதே நிச்சயம்.
anna
கட்டுரையாளர் கூறியது போல் முழு சிங்கள மக்களும் இனவாதிகளாக இருந்திருந்தால் ஜே.வி.பி அல்லது சிங்கள உறுமையவைச் சேர்ந்தவர் அல்லவா ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் இருந்திருக்கவேண்டும். சிங்கள மக்கள் தீவிர இனவாதம் பேசியோரை எப்போதும் தோற்கடித்தல்லவா வந்துள்ளனர். ஆனால் மாறாக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து “சிங்களவனின் தோலை உரித்து செருப்பாக போடுவேன்”என்று முழங்கிய மங்கையர்க்கரசியின் த.வி.கூட்டனியினரே பெரும்பான்மையாக வென்று வந்துள்ளனர். மேலும் தமிழ் மக்களுக்கு ஆதரவான சிங்கள இடதுசாரிகள் அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் அவர்களை தமிழ்மக்கள் ஆதரிக்கவில்லையே. 83ம் ஆண்டு இனக்கலவரம் நடந்தபோது பல தமிழ் மக்களை காப்பாற்றியதோடு அந்த இனக்கலவரத்தை கண்டித்து 66 தொழிற்சங்கங்கள் ஒன்றாக குரல் எழுப்பியதை மறக்கக்கூடாது. 60 ஆயிரம் சிங்கள மக்களை கொன்று குவித்த பிரேமதாசாவின் ஆட்சியை காப்பாற்றியவர்கள் யார்? பல சிங்கள பத்திரயாளர்களை கொன்று குவித்து மக்களை அடக்கி ஒடுக்கி பலாத்கார ஆட்சி செய்யும் மகிந்தாவை ஜனாபதியாக்கிய முக்கிய பங்காளி யார்? புலிகள் தானே! இவ்வாறு ஜக்கியத்திற்கு எதிராக அனைத்து நாசகார வேலைகளையும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்து செய்த புலிகளை கண்டிக்காமல் அவர்களுடன் ஜக்கியப்படும்படி சொல்லும் கட்டுரையாளர் எந்த முகத்துடன் சிங்கள மக்கள் ஜக்கியத்திற்கு தயார் இல்லை என்று சொல்கிறார்?
நண்பன்
புலிகளும் , புலி வால்களும் அடிவாங்கும் போது ஒற்றுமை , ஐக்கியம் என குரல் எழுப்புவார்கள். புலிகளும் , புலி வால்களும் பலமாகும் போது தமது பழைய பல்லவியை தூக்கி எறிந்து விட்டு ஐக்கியம் என முட்டுக் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிப்பார்கள். இதுதான் புலிக் குணம். இதைத்தான் புலிகளின் தேசபக்தன் எழுதியுள்ளார். கருத்து எழுத உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. நன்றி, வணக்கம்.
tamil boy
சமி அவர்களுக்கும் கர்ணன் அவர்களுக்கும் ஒரே பின்னுட்டத்தில் பதில் எழுத விரும்புகிறேன்
பாதுகாப்புப்பேரவை என்ற இயக்கம் என்ன செய்தது என்று இன்றுவரையில் எனக்கு விளங்கவில்லை இவர்களும் 40 டன் 41வது இயக்கமாக எதாவது ஒருவங்கியை கொள்ளையிட்டிருப்பார்கள். அந்த பணத்துடன் தமது உல்லாச ஜரோப்பிய பயணத்தை மேற் கொண்டிருப்பார்கள் என்றே கருதுகிறேன் எங்கே இந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் இவர்கள் கூறியதெல்லாம் புரட்ச்சிவாதங்கள் என்றால் இவர்கள் என்ன இன்னமும் ஜரோப்பாவிலா அல்லது மக்களுடன் மக்களாக கலந்து விட்டார்களா. காரணம் இவர்கள் சொன்னார்கள் புரட்ச்சிவாதிகள் மக்களை விட்டுவெளியே வந்தால் இவர்களால் வாழமுடியாது என்று எப்படி இவர்கள் மக்களை மறந்து 25 வருடங்களாக ஜரோப்பாவில் வாழமுடிந்தது. சரி இப்போ புலிகளின் அழிவின் பிறகு என்றாலும் தமது சிங்கள தோழர்களுடன் சேர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு ஏதாவது ஒரு சிறு உதவி சரி செய்தார்களா? கதைகளை விட்டுவிட்டு உங்கள் பாதுகாப்புப் பேரவை புரட்ச்சிகளை எடுத்து விடுங்கள் பதில் எழுத நானும் தயாராக உள்ளேன்.
சண்முகதாஸன் என்னவோ எல்லாம் எழுதினார் என்று ஒன்றும் சொல்லாமல் இந்த சண்முகதாஸனால் மக்கள் தமது வாழ்வின் முன்னேற்றத்திற்காக என்ன முயற்ச்சி எடுக்கப்பட்டது என்று தெரிவியுங்கள் நீங்கள் மாக்ஸீசம் பேசுபவர்கள் ஏதோ ஒரு சிறிய பகுதியான மாக்ஸீசத்தின் பகுதிகளை தொலைத்துவிட்டே மாக்ஸீசம் பேசுகின்றீர்கள். இது சண்முகதாஸனுக்கும் பொருந்தும் இதுவும் புலிகள் மக்களுக்கு என்று பணம் சேர்த்து விட்டு மக்களுக்கு என்று என்ன செய்தார்கள் என் கேட்டால் வரும் பதிலும் ஒன்றாகவே இருக்கும்.
(எனவே மேட்டுக்குடியை சேர்ந்தவர் என்பதால் புரட்சியை முன்னெடுக்கவில்லை என்று கூறுவது தவறாகும்.)
நண்பர்களே நான் புரட்ச்சிவாதியல்ல ஆனால் ஜதார்த்தவாதி. இந்த மாக்ஸிஸ்ட்டுக்கள் எங்கே தமது புரட்சியை வென்றிருந்தார்கள் என்பதை விளக்குங்கள். அப்படி புரட்ச்சி வெல்லப்பட்டிருந்தால் அது மீளவும் வழுவி முதலாளித்துவத்தில் விழுந்திருக்கமுடியாது.
புரட்ச்சி என்பது பின்னோக்கி போக முடியாத மாற்றம் என்பதை மறந்து பேசுகின்றீர்கள் நண்பர்களே. எப்படி இந்த முதலாளித்துவம் மீண்டும் கல்காலத்திற்கு போக முடியாதோ அது போல முதலாளித்துவத்திலிருந்து புரட்சியை லெனின் மாவோ காஜ்ட்ரோ செய்திருந்தால் இன்று இந்த உலகின் இன்றுள்ள நிலைமையில் சரியான உதாரணமாகவல்லவா இருந்திருக்கும் அல்லது எப்படி இன்றுள்ள கிரடிட் கிரஞ்ஜ் என்று எல்லாம் பேசுகிறார்கள் இவற்றை எல்லாம் மறந்து விட்டு புரட்சிவென்றவர்கள் என்ற பதத்தை பாவிக்கும் பொதே நீங்கள் இன்னும் புரட்சி என்பது பின்னோக்கி சமுகத்தை கொண்டுபோகாத தீர்வு என்பதை விளங்காமல் இருப்பதையே தொட்டுக்காட்டுகிறது.
(தோழர் லெனின் மேட்டுக்குடியை சேர்ந்தவர். அவர் ரஸ்சியப்புரட்சியை வென்றெடுக்கவில்லையா?)
பார்த்திபன்
புலிப்புராணத்தை சுற்றிவளைத்து பாடுவதற்கு “தேசபக்தன்” என்ற பெயரெதற்கு, பேசாமல் “புலிப்பக்தன்” என்ற பெயரிலேயே, புராணம் பாடாமல் விடயத்தை நேரடியாகவே எழுதியிருக்கலாம்.
சாந்தன்
ஜனநாயகபுராணம்…. மாற்றுக்கருத்துப்புராணம்…. இலகியபுராணம்… பெண்ணியப்ப்புராணம்… புரட்சிகரப்புராணம்… மனிதநேயப்புராணம்.. மக்கள் போராட்டப்புராணம்… என்ற வரிசையில் வந்தவர்கள் எல்லோரும் எப்படி தம் கொள்கைகளில் ‘வழுவாது’ நின்றனரோ அப்படித்தான் இப்போது தேசபக்தன் என வைத்துக்கொள்ளுங்கள்!
s.s.ganendran
சிரிப்பு வருது சிரிப்பு வருது தேசபக்தன் ஆக்கம் பார்க்க சிரிப்பு வருது
கே பிக்கு வால் பிடித்தால் இப்படியான ஆக்கங்கள் எழுதுங்கள் ஏதாவது ……….தருவார். ………………………….
Anonymous
பேரன்பு மிக்க தமிழ்பாய் அவர்களுக்கு!
நாலு வரி எழுதினாலும் நறுக்காக நன்றாக எழுதியுள்ளீர்கள்.உங்களுக்கு என் பராட்டுக்கள்.புரட்சி என்று புலுடா விட்டுக்கொண்டிருப்பவர்களை நன்றாக வாரியுள்ளீர்கள்…………….
msri
புலி அறுவைக் கட்டுரை!
தேசபக்தன் “குற்றவாளிக்கூண்டில் புலிகள்” என்ற வழக்காடுமன்றத்தில் புலிகளுக்கான நீண்ட நேர வாதத்தை கட்டரையாக்கியுள்ளார்! புலிகளது அரசியல்ரீதியான முரண்பாடுகளை அதன் அரசியல் தளத்தில்வைத்து அணுகி பதில் சொல்லவேண்டும் என்கின்றார்! புலிகள் ஓர் அரசியல் விடுதலை இயக்கமாக இருந்திருநதால் அத்தளத்தில் இருந்து விவாதிக்கலாம்! தமிழ்த்தேசிய இனத்தின் ஓர் அங்கமான இசுலாமிய மக்களை இரவோடு இரவாக அடித்து துரத்தியதை> கிழக்கில் அவர்களை தொழுகையில் வைத்து படுகொலை செய்ததை>வன்னி மக்களை கேடயமாக்கி> அரச பயங்கரவாதத்ததிற்கு இரையாக்கியது எல்லாம்> புலிகளின் சிநேக முரணபாடோ? அல்லது அரசியல் விடுதலைத்தள அணுகுமுறையோ? எவ்வித முன்யோசனையுமின்றி மாபெரும் மனிதப்படுகொலைகளுக்கும்> தன் மண்டையைக் கொண்டுபோய் கொத்திப் பிளவுங்கள் கொடுத்ததும்> அரசியல் தந்திரோபாயமல்லவா? இப்படி இன்னும் எவ்வளவு விவாதிக்கலாம்!
U OF Jaffna
tamil boy, Congrats… I totally agree with your comments about revolution.
msri
சண்முகதாசன் என்ன செய்தார்!
தமிழ் போய்!
தமிழ்மக்கள் மத்தியில் மூன்றில் ஒர பகுதியினர் (சாதியரீதியாக) ஒடுக்ப்பட்ட மக்கள்! இமக்கள் அடிமை குடிமை முறையில் இருந்து விடுபடவும்>பொது இடங்களில் சமத்துவத்திற்காகவும் (ஆலயங்கள் தேனீர்க்கடைகள் போன்றன) சண் தலைமையலான கடசியே வடபகுதியில் போராட்டடஙகளை முன்னெடுத்தது! போராட்டங்களின் உச்சகட்டத்தில் “மாசே துங் யாழப்பாணம் வந்துவிட்டார் என பத்திரிகைகளும்> வடக்கில் வியட்னாம் யுத்தம் நடைபெறகின்றது என அமிர்தலிங்கம் அவர்கள் பாராளமன்றத்திலும் பேசினார்! இப்போராட்டங்களே ஒடுக்கப்பட்ட மக்களை தலைநிமிர வைத்தது!
mathy
தமிழ்மக்கள் மீது இரு தரப்புக்களாலும் (அரசு, மற்றும் த.வி.பு) திணிக்கப்பட்டவை யுத்தமும், தற்போதைய ” தீர்வும்”. அயலிலுள்ள சிங்களமக்கள் மீது நம்பிக்கை கொள்ளாது ஐ.நா மீது வைத்திருக்கும் அளப்பரிய நம்பிக்கை எங்கேயிலிருந்து வந்தது என்று புரியவில்லை.
ஒரு பிரச்சனைக்கு ஒரேயொரு தீர்வுதான் இருக்கும் என்ற தீர்வு காலாவதி கனகாலம் ஆகிவிட்டது, ஐக்கிய இலங்கையிற்குள் தீர்வு சாத்தியமில்லை என கோடு கீறுவது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என்ற இன்னொரு புலி தலைமைக்கு அடி போடுகிற மாதிரி தோன்றுகிறது.
“சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கிறோம், ஆனால் பிரிந்து போவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது” என்ற வாதம் ஒரு அசலான முரண்நகையானால் என்றால் இது நோர்வே நாட்டில் எப்படி சாத்தியமானது?
chandran.raja
சாமி மாயா அவர்களின் கருத்தைவிட என்னிடம் எதுவுமே இல்லை. இருவரின் கருத்துக்களுக்கும் விடைகிடைத்தால் அதுவே போதுமானவை.
பிச்சையாண்டி என்ற பெயர் உடையவன் கோடீஸ்வரனாகயிருக்கிறான். வெள்ளையன் என்ற பெயருடயவன் கறுப்பனாக இருக்கிறான். செல்வலெச்சுமி என்ற பெயர் கொண்டவள் தரித்தியத்திலே உழன்று கொண்டிருக்கிறாள். இந்த வரிசையிலேயே தேசபக்தனையும் தரிசனம் செய்ய வேண்டியதாகயுள்ளது. ஆரம்ப பாடசாலைகளில் இலங்கைபடத்தை ஆசியர்காட்டி இதுதான் நமது தேசபடம் என கல்வி கற்பித்தார். இத்தேசத்தில் முகமதியர் பெளத்தர்கள் கிறீஸ்தவர்கள் இந்துக்கள் என கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. தேசபக்தனின் பக்தியென்பது புலிப்பக்தியே! பற்றறி வலுவிழந்தபோது புது பற்றறியை மாற்றி புலிப்பொம்மையை “டக்குடக்கு” என ஆட முனைகிறார்.
பக்தன்
திரும்பவும் வந்து விட்டார்கள் இந்த மாக்ஸிஸ பூசாரிகள். பிராமணர்கள் வேதத்தை பாடமாக்குவது போல் இவர்களும் மாக்ஸிஸ புத்தகங்களை பாடமாக்கி விட்டு போதனை வேறு! மாக்ஸிஸ விஞ்ஞானத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதை நிலமைக்கு ஏற்றவாறு பாவிக்காமல் தேசிய இனப்பிரச்சனையில் லெனின் இவ்வாறு பாவித்தார் அவர் அப்படி சொன்னார் என கதை விடுகிறார்கள். உலக மாற்றங்கள் – 19 ம் நுற்றாண்டில் உலக ஒழுங்கு முறை பற்றிய சீரியசான புரிதல் இன்றி கர்நாடக சங்கீதத்தை பாடுவது போல் இந்த பழமைவாதிகள் தொடர்ந்து பாடுகிறார்கள்.
மாக்ஸ்ஸிய விஞ்ஞானம் பிழையானதன்று. அது விஞ்ஞானம். ஆனால் இந்த புத்தகப் புழுக்களுக்கு அதை சூழ்நிலைக்கு ஏற்ப பாவிக்க தெரியாமல் அதையும் குழப்பி எங்களையும் குழப்புகிறார்கள்.
இனங்களுக்குள் சிறிதளவு முறுகல் இருந்த எண்பதிற்கு முதல் இவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் செய்த புரடசியில் இலங்கை மக்கள் அடைந்த பலன்களை சொல்லி மாளாது. புலி பயங்கரவாதம் முடிந்த பின்பு மீண்டும் இந்த குடுகுடுப்பைகாரர்கள் வந்து விட்டார்கள். ஐயோ பாவம் மக்கள்…..! இனி கத்தை கத்தையாக எழுதப் போகின்றார்கள். அது சரி புரடசியை ஆயுதம் இன்றி எவ்வாறு செய்யப் போகின்றார்கள். அல்லது பாராளுமன்றம் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் புரடசியா? இவர்களுக்கு எமது தேசியத் தலைவர் மகிந்த மேல் அப்படி என்ன கோபம்? அவர் கால நேரம் பார்த்து தரவேண்டியது எல்லாம் தருவார்!!
பக்தன்