ஏ9 வீதியிலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து நாளாந்த பூஜைகளை நடத்த அனுமதி வழங்குமாறு சர்வதேச இந்து மதபீடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்து மத பீடத்தின் செயலாளர் ஆர்.பாபு சர்மா இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கும் ஏ9 வீதியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து நாளாந்தம் ஒருவேளை பூஜையையாவது நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்தப் பூஜையை நடத்துவதற்கான ஏற்பாட்டை எமது மதபீடம் மேற்கொள்ளும்.
முறிகண்டிப் பிள்ளையார் கோவில் உட்பட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து பூஜை, வழிபாடுகளை நடத்த அனுமதிக்குமாறு வேண்டுகிறோம். வவுனியா முகாம்களிலுள்ள இந்து குருமாரை பூஜைகளில் ஈடுபடுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.