சிறுபான்மை என்ற பேச்சுக்கே இனி நாட்டில் இடமில்லை – ஜனாதிபதி

mahinda-rajapa.jpgநாட்டில் இனி சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் வார்த்தையில் மட்டுமன்றி செயலிலும் அதனை நிரூபித்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஒதுக்கி விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நம் அனைவருக்குமான இத்தாய் நாட்டைப் பாதுகாப்பதிலும் கட்டியெழுப்புவதிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மொனராகலை பெல வத்தையில் நேற்று மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமையை சகல சமயங்களும் உணரத்தொடங்கியுள்ள காலமிது. இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்று ஒன்றில்லை. அதனை நாம் வார்த்தையில் மட்டுமன்றி செயலிலும் உறுதிப்படுத்தியுள்ளோம். இலங்கையில் தமிழும் சிங்களமும் அரச மொழியாக இருந்த போதிலும் தமிழ் மக்கள் தமது மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருந்ததாலேயே பல பிரச்சினைகள் உக்கிரமடைந்தன.

இப்பிரச்சினைக்குத் தீர்வாக நாம் 2500 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தோம். அவர்களில் 500 பேருக்கு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. அரச சேவையில் தமிழும் சிங்களமும் தெரிந்தவர்களுக்கு 25,000 ரூபாவை சம்பளமாக வழங்குகிறோம். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே பிரச்சினைகள் தீரும்.

மலையக மக்கள் இன்று கல்வியில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் இது விடயத்தில் அக்கறையில்லாமல் இருந்ததற்குக் காரணம் ஆசிரியர் பற்றாக்குறையும் அரசபணிகளில் நிலவிய வசதியின்மையுமே. இதனைக் கருத்திற் கொண்டு நாம் 3,679 ஆசிரியர்களை நியமித்தோம், அத்துடன் அப்பகுதியில் கல்வித் துறையை மேம்படுத்த பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம். ஆசிரியர்களை அப்பகுதியிலிருந்தே தேர்ந்தெடுத்தமை இதில் குறிப்பிடக் கூடியதொரு விடயம். அதனால் பெருந்தோட்டப் பகுதியில் பாரிய மாற்றமொன்று தற்போது ஏற்பட்டுள்ளது. இது நாம் மலையக மக்களுக்காகச் செய்த சேவையாகும்.

இன்று எல்லைக் கிராமங்கள் இல்லை. பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை. அன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அதே அபிவிருத்தி இன்று கிராமப்புறங்களில் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ், சிங்களம், முஸ்லிம் என எந்த பாகுபாடுமில்லாமல் சகலருக்கும் அரசாங்கம் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கின்றது. தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் ஒதுக்கி வைத்து விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மலையகப் பகுதிகளைப் பொறுத்த வரை வெள்ளைக்காரர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட லயன் காம்பிராக்களிலிருந்து அம்மக்களை விடுவித்து அவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது திட்டம். இத்திட்டத்தின் மூலம் தற்போது 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் லயன் காம்பிரா சூழல் மாற்றம் பெற்று கிராமங்கள் உருவெடுக்கும்.

யாழ்ப்பாணத்திலிருந்து பயங்கரவாதிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தில் வாழ்கின்றனர். மூதூரிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களை நாம் 45 மணித்தியாலத்தில் மீளக்குடியமர்த்தி வாக்குறுதியை நிறைவேற்றினோம். முழு உலகிலிருந்தும் அழுத்தம் வந்த போதும் நாம் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினோம். சிறுபான்மை என்பதை வரலாற்றில் மட்டுமன்றி அனைத்திலிருந்தும் அகற்றுவது அவசியம். இன்று எமது அரசாங்கத்தில் பல தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் எம்மை நம்புகின்றனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை நம்புகின்றனர். இந்த அரசு சகல மக்களுக்குமான நம்பிக்கையான அரசு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நாம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் எந்த இனம், நிலம், பிரதேசம் பேதமும் காட்டுவதில்லை. இந்த நாட்டைப் பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் அனைவருக்கும் பொறுப்பு உண்டு.

இது நாம் பிறந்த நாடு. நம் அனைவரதும் தாய் நாடு. இந்த நாட்டை சகலரும் அன்பு செய்ய வேண்டும். இதை பாதுகாக்க சகலரதும் ஒத்துழைப்பு மிகவும்அவசியமானது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபடுவோமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • nsk
    nsk

    Yes, He is true. Soon he will get rid of minority and won’t be a minority. Only Majority. Most anti LTTE theasam readers will start to appluade.

    Reply