இடம் பெயர்ந்த சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதிக்கு முன்னர் 35 கிராமங்களில் மீள்குடியேற்றப்படுவரென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாணத்துக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மீள்குடியேற்றப்படும் கிராமங்கள் அடையாளங் காணப்பட்டு அங்கு நிலக்கண்ணிகள் அகற்றப்பட்டுள்ளதோடு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (21) நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.வீதி, மின்சாரம், குடிநீர் வசதி, அடங்கலான சகல அடிப்படை வசதிகளும் அப்பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பகுதிகளிலும் மிக விரைவில் மீள்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் வடக்கு வசந்தம் வேலைத் திட்டம் தொடர்பான மீளாய்வும் மேற்கொள்ளப்பட்டது. 180 நாள் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விவசாய வீதி, கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், மீள்குடியேற்றம், நிலக்கண்ணி அகற்றல் என்பன குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
நீர்ப்பாசன திட்டங்களுக்கென 15.4 மில்லியன் ரூபாவும் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கான பாடசாலை கட்டிடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்த 30 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வவுனியா வடக்கு பகுதியிலுள்ள மருத்துவ அதிகாரி காரியாலயத்தை புனரமைக்கவும் இரண்டு வாரத்தில் 10 மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்கவும் விவசாயத் திட்டங்களுக்கென 32.6 மில்லியன் ரூபா ஒதுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
வடக்கு வசந்தம் 180 நாள் திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு மாத காலத்தில் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியும். சேதமடைந்த பாடசாலை கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகளின் குறைபாடுகள் என்பன தீர்க்கப்பட்டு வருகின்றன எனவும் பசில் ராஜபக்ஷ கூறினார்.
பாதுகாப்புப் படையின் உதவியுடன் மிதிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்பொழுது வவுனியா மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1, 46, 298 பேர் வசிக்கின்றனர். மேலும் 35, 866 பேர் மீள் குடியேற்றப்படவுள்ளனர் என்றார்.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வவுனியா மாவட்டத்தை துரித அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, மாகாண பிரதம செயலாளர் எஸ். சிவகாமி மற்றும் மாகாண அமைச்சின் அனைத்து செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர், சகல திணைக்கள தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.