கியூபா நாட்டு டெங்கு நோய் தொடர்பிலான நிபுணர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வந்தடைந்துள்ளனர்.
கியூபாவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அராம்ஸ் மார்டினஸ், பிரதி தொற்று நோய் நிபுணர் திருமதி யெலினா ஆகியோர் நேற்று கொழும்பு வந்ததாகவும் இவர்கள் நேற்றைய தினமே அம்பாந்தோட்டை நோக்கிப் பயணமானார்கள், அங்கு டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கியூபாவின் பி.ரி.ஐ. பற்றீரியாக்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்வதாகவும் சாதகமான நிலைமை காணப்பட்டால் உடனடியாகவே நடவடிக்கையிலிறங்க விருப்பதாகவும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னி நாயக்கா தெரிவித்தார். இன்று மாலை அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு திரும்பும் அவர்கள் மாலையில் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த பி.ரி.ஐ.பற்றீரியாவை பயன்படுத்துவதற்கான சாதகமான நிலை காணப்படின் வாரத்துக்கொரு தடவை அவை பயன்படுத்தப்படும்.
டெங்கு நோய் வேகமாக பரவியுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு தொடர்ச்சியாக நாடுமுழுவதும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க விருப்பதாகவும் வன்னிநாயக்கா தெரிவித்தார்.
இது இவ்விதமிருக்க இலங்கையில் இதுவரையில் 18,300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 190 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்த டாக்டர் பாலித மகீபால டெங்கு நோய் தொடர்ந்தும் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.