மன்னாரி லிருந்து திருகோணமலைக்கு நேரடி பஸ் போக்குவரத்துச் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கைப் போக்குவரத்துச் சபை இதனை ஆரம்பிக்கவுள்ளது.
இன்று காலை 6.30 மணிக்கு மன்னார் அரச பஸ் தரிப்பிடத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றே மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படவுள்ளது. மன்னாரிலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பஸ், வவுனியா சென்று அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக திருகோணமலையைச் சென்றடையும்.
பின்னர் அதே பஸ் பிற்பகல் 1.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து அதே வீதியூடாக மன்னாரை வந்தடையும். இச்சேவை நாளாந்தம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 வருடங்களின் பின்னர் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு அரச பஸ் சேவை, போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.