நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் வைத்திய அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சரியாக விளங்கிக்கொள்ளாமையின் காரணமாக சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளனர். இவர்களுக்கு அரசியல் யாப்பினூடாக மேலதிக அதிகாரங்களை வழங்க முடியாதுள்ளது. எனினும் இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாகவுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் தொகுக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். டெங்கு நோயைப் பரப்பக்கூடிய சுற்றுச் சுழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக அபராதம் அறவிடுவதுடன் மற்றும் தண்டனை வழங்குவதற்கான சட்டம் கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி குற்றவாளியாகக் காணப்படுகின்றவர்களுக்கு ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.