அகதி முகாம்களில் தங்கியிருக்கும் 3 இலட்சம் மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான தெளிவான திட்டத்தையும் கால அட்டவணையையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென ஐ.நா. செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருக்கிறது. உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு இவை முக்கியமான விடயங்கள் என்றும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
வவுனியா, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்டங்களில் 35 முகாம்களில் யுத்தத்தால் இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் திரும்பிச் செல்வது தொடர்பான தெளிவான திட்டங்களும் கால அட்டவணையும் இருப்பது முக்கியமானது என்று ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவித்திருக்கிறார்.
“மாதக்கணக்காக நீங்கள் தொடர்ந்தும் 3இலட்சம் மக்களை அங்கு (முகாம்களில்) நீண்டகாலத்திற்கு வைத்திருந்தால் நிதியைப்பெற்றுக்கொள்வது (நிவாரண நடவடிக்கைகளுக்கு) மிகவும் கடினமானதாக இருக்கப்போகின்றது, என்று நான் நினைக்கிறேன்’ என்று நீல் புனே கூறியுள்ளார். நல்லிணக்கத்தின் முதல் கட்டமானது எவ்வாறு (இடம்பெயர்ந்தோர்) நடத்தப்படுகிறார்கள் என்பதாகும். அரசு அதனை அடையாளம் கண்டுள்ளது. நாங்கள் அதனை அடையாளம் கண்டுள்ளோம். ஆனால் இதுவொரு பாரிய சவாலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இடம் பெயர்ந்த மக்களை பராமரிக்கும் பொது மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டமானது 155 மில்லியன் டொலர் நிதித் தொகையை மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் அது 270 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதுவரை 97 மில்லியன் டொலரே கிடைக்கபெற்றுள்ளது.( தேவைப்படும் தொகையில் 36 ./.) 185 திட்டங்களுக்கு தேவையான 173 மில்லியன் டொலர் பற்றாக்குறையாக உள்ளது. ஆயினும் இடம்பெயர்ந்தோரின் அடிப்படைத் தேவைகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. விநியோகத்தைப் பெற்றுக்கொள்வதில் இப்போது அதிகளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நான் தற்போது நினைக்கிறேன் என்று புனே கூறியுள்ளார்.