தெற்கு அதிவேகப் பாதைகளின் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த அதிவேகப் பாதையில் உரிய நியமங்களுக்கு குறைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்களை நிர்மாணிப்பது குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, நிர்மாணப் பணிகளில் பல்வேறு கட்டட நிறுவனங்கள் ஈடுபட்டபோதும் அமைச்சு மட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். நாட்டிலுள்ள வீதிகளைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு நிதியைச் செலவிடுகிறது. கிராமப்புற வீதி அபிவிருத்தியின்போது பொதுமக்களின் பங்களிப்புக்களைப் பெறுவதன்மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.
கடந்த காலங்களில் அபிவிருத்திப் பணிகளுக்கு அச்சுறுத்தலாக இனங்காணப்பட்ட இடங்களுக்கு வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் வேலைத் திட்டங்களின் கீழ் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக இவ்வருடம் ஆகக்கூடிய நிதியாக 77,128 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ. ஏக்கநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கரண்ணகொட ஆகியோருடன் தெற்கு அதிவேகப் பாதை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிர்மாண கம்பனிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.