பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரபை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது.
நெருக்கடி நிலை, நீதிபதிகள் பதவி நீக்கம் தொடர்பான தனது நடவடிக்கை குறித்து ஜுலை 29ல் நீதிமன்றத்தில் ஆஜராகி முஷாரப் தனது விளக்கத்தை அளிக்குமாறும் தலைமை நீதிபதி இப்திகர் செளத்ரி தலைமையிலான பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
முஷாரப் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்பதில்லை. தனது தரப்பில் வழக்கறிஞரைகூட ஆஜர்படுத்தி உரிய விளக்கத்தை அளிக்கலாம் என்றும் அந்த நோட்டீஸில் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முஷாரப் அதிபராக இருந்த போது திடீரென நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். இதற்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இப்திகர் செளத்ரி உட்பட நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் அனைவரையும் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார்.
இதையடுத்து ஜர்தாரி அதிபரானதும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் வலியுறுத்தலால் இப்திகர் கெளத்ரி உட்பட பதவிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில் முஷாரப் தனது ஆட்சியில் எடுத்த நடவடிக்கை குறித்து இப்திகர் செளத்ரி தலைமையிலான பெஞ்ச், மறுஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரிட்டனில் முஷாரப்: முஷாரப் தற்போது பிரிட்டனில் உள்ளார். அவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்காகச் சென்றுள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.