“டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியமும் பெருமையும் பாதுகாக்கப்பட போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்’ என்கிறார் அன்ட்ரூ பிளிண்டொப். இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் அன்ட்ரூ பிளிண்டொப். தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் ஆஷஸ் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாதுகாப்பது பற்றி பிளிண்டொப் கூறியதாவது;
கடந்த சில ஆண்டுகளாக மக்களின் மனநிலை மாறிவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். “ருவென்ரி20′ கிரிக்கெட் போட்டிகளின் அசுர வளர்ச்சி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
இன்றைய உலகில் சிறிய குழந்தைகளிடம் எவ்வகைப் போட்டிகள் பிடிக்கும் என்று கேட்டால், “கவர்ச்சியும் உற்சாகமும் நிறைந்த “ருவென்ரி20′ போட்டிகள் தான் பிடிக்கும்’ என்று பதில் வருகிறது. இனிவரும் காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவது பற்றி எந்த வருத்தமும் எனக்கில்லை. லோர்ட்ஸில் நடந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டுக்குப் பின் இது இம்மைதானத்தில் எனக்கு கடைசி போட்டி என்பதை உணர்ந்தேன். அமர்ந்து மைதானத்தைச் சுற்றிப்பார்த்து எனக்குள்ளாக மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும், எட்பாஸ்டனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறேன். அப்போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்பதே இப்போதைக்கு எனது கவலை என்றும் பிளிண்டொப் கூறினார்.