நியூஸி லாந்தின் தெற்குப் பகுதியிலுள்ள ரிசொல்யூஷன் தீவுக்கருகில் கடலுக்கடியில் கடந்த வாரம் ஏற்பட்ட பூகம்பத்தினால் தெற்கு நியூஸிலாந்து அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதி நோக்கி நகர்ந்துள்ளதாக பூகம்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிச்டர் அளவு கோலில் 7.8 என்று பதிவான இந்த பூகம்பத்தினால் தெற்குத் தீவு சுமார் 12 அங்குல (அதாவது 30 செ.மீ.) தூரம் மேற்காக நகர்ந்து அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சென்றுள்ளதாக பூகோள விஞ்ஞானி கென்கிளெட்ஹில் தெரிவித்துள்ளார்.
இந்த புவியியல் மாற்றம் பூமிக்கு அடியில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது என்று கூறியுள்ள கிளெட்ஹில் நியூஸிலாந்து அதனைத் தாக்கும் பெரும்பாறையின் எல்லையில் இருப்பதால் நாட்டின் நிலப்பகுதி அடிக்கடி மாறுதலுக்குள்ளாகிறதெனத் தெரிவித்துள்ளார்.
அதாவது 12 அங்குலம் ஒரு நாடு நகர்ந்திருப்பது என்பது ஏதோ ஆண்டாண்டு காலமாக நிகழவில்லை. ஒரு சில வினாடிகளில் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த புதனன்று ஏற்பட்ட இந்த பூகம்பம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பூகம்பம் என்பதும் நியூஸிலாந்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டள்ள கடுமையான பூகம்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே அளவில் உலகின் வேறு எந்த நாட்டிலாவது பூகம்பம் ஏற்பட்டிருந்தால் அது ஒரு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் நியூஸிலாந்தின் தெற்குத் தீவுப் பகுதியில் மக்கள் தொகை அதிகம் இல்லை என்பதால் அழிவு அவ்வளவாக இல்லையென கிளெட்ஹில் கூறியுள்ளார்.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மற்றொரு விஞ்ஞானி மார்டின் ரெய்னர்ஸ், இரண்டு பெரும்பாறைகளுக்கு நடுவே உள்ள “மென் பாறைகளில்’ இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் ஆற்றல் கட்டுப்படுத்தப்பட்டது. இல்லையேல் பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.