அதிபர்களுக்கான தரம்-1, தரம்-2, தரம்-3 பதவி உயர்வுகளை வழங்குவதற்கான நேர் முகப் பரீட்சைகள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் நாளை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறவுள்ளது. வவுனியா மாவட்ட அதிபர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் வவுனியா தெற்கு வலயத்திலும் இடம்பெயர்ந்துள்ள அதிபர்களுக்கு நிவா ரணக் கிராமங்களிலுள்ள பாடசாலைகள் இணைப்பு நிலையங்களில் நடத்தப்படும் என வவுனியா வலய உதவிப் பணிப்பாளர் திருமதி ரன்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றும் அதிபர்கள் தேவையான சகல ஆவணங்களையும் ஆயத்தமாக கொண்டுவரவேண்டும் என்றும் கேட்கப்படுகிறார்கள்.
அத்துடன் நிவாரணக் கிராமங்களிலுள்ள அதிபர்கள் தம்மிடமுள்ள ஆவணங்களையும் நேர்முகப் பரீட்சைக்கு கொண்டுவரவேண்டும். ஆவணங்கள் எதுவும் இல்லையேல் தேவையான ஆவணங்களின் பிரதிகளை பெற்றுக்கொடுக்க வவுனியா மாவட்ட கல்வி வலயப் பணிப்பாளர் அலுவலகம் அந்தந்த நிவாரணக் கிராமங்களின் இணைப்பு அலுவலகங்களில் ஆயத்த நிலையில் இருக்கும் எனவும் பணிப்பாளர் ரன்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.