இராஜதந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளையில் ஏன் ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது? – செ.பத்மநாதன்

kp.jpgஇராஜ தந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளையில் ஏன் ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது என்பது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் இணையத்தளத்தில்  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்துள்ளதாக கடந்த வாரப் பக்கங்களில் குறிப்பிட்டிருந்தேன்.

மக்களின் தற்போதைய கடினமான வாழ்க்கை நிலையை முன்னிறுத்தியும், அண்மையில் நமது விடுதலைப்போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும், இம் முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்துள்ளதாகவும் அந்தப் பக்கங்களில் தெரிவித்திருந்தேன்.

இதன் அடிப்படையில், முள்ளிவாய்க்காலில் வைத்து நமது தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு அமைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, நமது விடுதலை இலட்சியத்தினை வென்றெடுப்பதற்கான அடுத்தகட்டப்பயணம் அரசியல், இராஜதந்திர வழிமுறைகளுக்கூடாகத் தொடரும் எனவும் தெரிவித்திருந்தேன்.

இது நமது அடுத்தகட்டப் போராட்டம் குறித்த முக்கியமான ஒரு அரசியல் நிலைப்பாடு எனவும் இது குறித்த ஏனைய விடயங்களை இந்த வாரம் நோக்கவுள்ளதாகவும் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.

நாம் நமது புதிய அரசியல் இராஜதந்திரப் பாதையினை அறிவித்த பின்னர் என்னிடம் உரையாடிய சிலர் என்னிடம் கேட்ட ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட இரு கேள்விகளை ஆராய்வது இந்த வாரப் பக்கங்களுக்கு முக்கியமாகப்படுகிறது.

அரசியல் இராஜதந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளை கெரில்லாப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாதா? அது சிறிலங்கா அரசுக்கு கூடுதல் அழுத்தத்ததைக் கொடுத்து, அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்குப் பக்க பலமாக அமையும் அல்லவா?  இவையே அந்தக் கேள்விகள்.

முதலில், நான் ஒரு விடயத்தினைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிற்பாடு, அரசியல் இராஜதந்திரப் பாதையில் பயணத்தினைத் தொடர்வது என்ற முடிவினை நான் மட்டும் தனித்து எடுக்கவில்லை. களத்தில் நிற்கும் தளபதிகள் மற்றும் தொடர்பில் இருந்த ஏனைய துறைசார் போராளிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய அனைத்துலக ஒழுங்கில் நாம் அரசியல் இராஜதந்திரப் பாதையில் பயணிக்கும் அதேவேளையில் ஆயுதப் போராட்டத்தினையும் சமநேரத்தில் முன்னெடுப்பது முரணான இருதிசைகளில் பயணிப்பதற்கு ஒத்ததாக இருக்கின்றது. இது எமது மக்களின் நலன்களை மையப்படுத்தும் விடுதலைப் போரினை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு பலவித நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தும்.
நாம் ஒரு பேச்சுக்கு கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட முனைகிறோம் என வைத்துக் கொள்வோம்.  அதன் விளைவுகள் எத்தகையவையாக இருக்கும்? சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம்.  இந்த தாக்குதல் முனைப்புக்களை சிறிலங்கா அரசு தனது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தவே பயன்படுத்தும்.

இதன் உடனடித் தாக்கம் இன்று தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பில் பாதகமாகப் பிரதிபலிக்கும்.  அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக சிங்கள அரசினால் தடுத்து வைக்கபட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், சித்திரவதைகளுக்குட்பட்டும் வருகின்ற 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் போராளிகள் பாதுகாப்பு மிகுந்த கேள்விக்குறியாகும்.

மக்கள் தத்தமது இடங்களில் இயன்றளவு விரைவாக குடியமர்த்தப்படுவதற்குரிய அரசியல் இராஜதந்திர அழுத்தங்களை முன்னெடுப்பது பலவீனமடைந்து, மக்களை நீண்டநாட்களுக்கு தடுப்பு முகாம்களுக்கள் முடக்குவதற்கு வழிகோலும்.  இது ஏற்கனவே மிகுந்த வேதனைக்குள்ளாகியிருக்கும் மக்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்கும். இந்த மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டி எழுப்புவதற்கு ஆதாரமாய் நிற்கவேண்டியது தமிழீழ தேசத்தின் கடமை.  இந்நிலையில் மக்கள் தமது சொந்த இடங்களில் விரைவாக குடியமர்வதற்கு நாம் எந்த வகையிலும் இடையுறாக இருக்க முடியாது.

மேலும், மக்களை தடுப்பு முகாம்களுக்குள் முடக்கியபடி வன்னிப்பெரு நிலத்தின் குடிசனப்பரம்பலை குடியேற்றங்கள் மூலமும் மாவட்ட எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலமும் தமிழ்ப் பெரும்பான்மையற்ற முறையில் மாற்றியமைத்திட முனையும் சிறிலங்கா அரசுக்கு நாமும் துணை புரிவதாய் அமைந்து விடும்.

தமிழர் பிரதேசங்களை மிக நீண்ட நாட்களுக்கு இராணுவ ஆக்கிரமிப்பக்குள் வைத்திட முனையும் சிறிலங்கா அரசுக்கு நாமே வாய்ப்புக்களை வழங்குவதாய் அமைந்து விடும். அனைத்துலக அரங்கில் நமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக பரப்புரைகளையும் இராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டு நமது விடுதலைப்போராட்டக் கட்டமைப்புக்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளை இலகுவாக்கிவிடும்.

இவை மட்டுமன்றி, அரசு அல்லாத தரப்புக்களின் ஆயுதப்போர் பற்றிய இன்றைய உலக அணுகுமுறையினால் எம்மால் எவ்விதமான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கவோ அல்லது அரசியல் இராஜதந்திர அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்கு எதிரானப் பிரயோகிக்கவோ முடியாமல் போகும்.  மாறாக, நாங்கள் இதுகாலவரை எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் நிகழ்த்திய ஆயுதம் தரித்த விடுதலைப் போர் ஏற்படுத்தித் தந்த அடித்தளத்தில் இருந்து அடுத்தகட்ட ஈழப்போரினை முன்னெடுப்பதே சமகால உலக உறவுகள், அரசியல் – பொருளாதார நிலைப்பாடுகளின் வெளிச்சத்தில் வெற்றிக்கான வழித்தடமாக இருக்கும்.

அந்த அடித்தளங்கள் எவை?. எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போர் தமிழீழ மக்களிடையே வலுவான தேசிய எழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சுயநிர்ணய உரிமை, தாயகம் தேசியம் என்கின்ற அடிப்படை விடயங்களை முதன்மையான விடயங்களாக வலுவாக முன்னிறுத்தியுள்ளது. தாயகத்திலும், புலத்திலும் அரசு, இறைமை என்பன போன்ற விடயங்களில் புரட்சிகரமான சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள தேசியவாத அரசின் செல்வாக்கிற்கு வெளியே தேசிய இனச்சிக்கலை கையாளும் வாய்ப்புக்களை உருவாக்கியது. உலக தமிழ்ச் சமூகம் மத்தியில் தமிழீழம் சார்ந்த ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்தியது. இவ்வாறு இந்த அடித்தளங்களை பட்டியலிடலாம்.  அனைத்திலும் மேலாக அர்ப்பணிப்புக்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர் விடுதலைப் போர் என்கின்ற தார்மீகம் எங்கள் அரசியல் நிலைப்பாட்டினை ஆதரமாக தாங்கியுள்ளது. இந்த இடத்தில் இருந்து போராட்ட வடிவத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றியே நாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இங்கு போராட்ட இலக்கு மற்றும் போராட்ட வடிவம், இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்த தெளிவான பார்வை முக்கியமானது. நமது போராட்ட இலக்கினை அடைந்து கொள்ள எத்தகைய போராட்ட வடிவம் கூடுதல் பயன் தருமோ அந்த வடிவங்களை நாம் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்த வேண்டும். இதையே நமது தலைவர் 1987 ஆம் ஆண்டில் போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு மாறாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய காலகட்டத்தில், போராட்ட இலக்கினை முன்நோக்கி நகர்த்துவததற்கு போராட்ட வடிவத்தினை மாற்றுவது தவிர்க்க முடியாதது. நாம் மக்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பது மிகவும் அவசிமானதாகும். இந்த அடிப்படையிலேயே போராட்ட வடிவமாற்றமும் முக்கியமானதாகும்.  நாம் முன்னர் ஆயுதப்போராட்டத்தை நடத்தியவாறு தானே அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்தோம் என்ற கேள்வி சிலர் மத்தியில் இந்த தருணத்தில் எழலாம்.  உண்மை தான். ஆனால் முன்னர் இருந்த சூழலுடன் தற்போதைய சூழலை நாம் ஒப்பிட முடியாது. 1970-களில் ஒற்றைத் துப்பாக்கியுடன் நமது தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட நமது விடுதலை இயக்கம் எத்தனையோ சோதனைகள் வேதனைகள் தாண்டி, இமாலய சாதனைகள் புரிந்து வரலாற்றில் ஈட்டிய வெற்றிகள் ஊடாகவே நமக்கு அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் திறந்தன.

இருந்தும் அனைத்துலகத்தின் நலன்களும் நமது நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்காமையால் திறக்கப்பட்ட அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் ஊடாக நம்மை நன்மைகள் பெரியளவில் வந்தடையவில்லை. இறுதியில் சிங்கள அரசு அனைத்துலக சமூகத்தை தன்வசப்படுத்தியவாறே போரை முன்னெடுத்தது. நமக்கு திறக்கப்பட்டிருந்த அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் ஊடாக நம்மை நன்மைகள் வந்தடையாமைக்கு அடிப்படையில் இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. அவையாவன:

1. தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லாண்மைச் சக்திகள் இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்த கொள்வதே உசிதமானதாகக் கருதியமை. இது தமிழீழம் என்ற நமது இலட்சியத்திற்கு எதிரான உலக நிலைப்பாட்டுக்கு வழிகோலியது.

2. இலங்கைத் தீவில் ஆயுதப்போராட்டம் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு வரவேண்டும் என்பதிலும் அனைத்துலகம் ஒரே கருத்துக்கு வந்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்திற்கும் உலக ஆதரவினை திரட்டுவது சாத்திமற்றதாக இருந்தது. நாம் தற்போது நமது தாயகச் சூழல் கருதியும் அனைத்துலக நிலைமைகளை மதிப்பீடு செய்தும் நமது விடுதலை இலட்சியத்தில் உறுதியாக நின்று கொண்டு போராட்ட வடிவத்தை மாற்றுகிறோம்.

இதன் ஊடாக உலக நலன்களுடன் நமது நலன்கள் முரண்படும் மேற்குறிப்பிட்ட இரு விடயங்களில் ஒன்றினில் முரண்பாட்டைத் தவிர்க்கிறோம். உலகம் தற்போது ஏற்க மறுப்பதற்காக நமது தமிழீழ இலட்சியத்தில் இருந்து நாம் பின்வாங்க முடியாது. வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இந்த மாற்றங்கள் ஈழத்தழிழ் மக்களின் விடுதலைக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கான நிலைமைகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்களையும் கொண்டுவரும்.

இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்ளும் உலக சக்திகளின் புவிசார் அரசியல் தோல்வியினை அடையும் சூழலும் இந்த மாற்றங்களின் ஊடாக உருவாகும். அப்போது நமக்கான தமிழீழ தேசத்தை நாம் அமைத்துக் கொள்வதற்கான நிலைமைகளும் உருவாகும். இந்த நம்பிக்கையுடன் நமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரப் பாதையின் ஊடாக நாம் முன்னெடுக்க வேண்டும்.

அரசியல் இராஜதந்திரப் பாதையின் ஊடாக பயணம் செய்வது என்பதும் இலகுவான ஒரு விடயம் அல்ல. பல சவால்களையும் எதிர்கொண்டு மிகுந்த சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணம் இது. இந்தப் பயணத்திற்கு உரிய அரசியல் லேலைத்திட்டம் மிகவும் முக்கியம். இவ்வாறாக அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • thurai
    thurai

    யாராவது இந்த பத்மநாதன் கும்பலிற்கு ராஜபக்ஸ்சவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பீர்களா? ஆயுதத்துடன் ஏ 9 பாதையில் கப்பம் வாங்க படாதபாடு படுகின்றார்கள்.

    துரை

    Reply
  • rajai
    rajai

    கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது இது தானாக்கும் . . ……..

    Reply
  • Kusumbo
    Kusumbo

    /முள்ளிவாய்க்காலில் வைத்து நமது தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு அமைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு/ இதுதான் எனக்கு விளங்கவில்லை. எம்தலைவர் சரணடையவுமில்லை தற்கொலை செய்யவும் இல்லை நேருக்கு நேர் போராடியே இறந்தார் என்று புலிகளும்;புலிப்பினாமிகளும் பிதற்றிக் கொண்டு திரிந்தார்களே. பிரபாகரன் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்றால் எப்படி வீரனாச் செத்திருக்க முடியும். சரி புலிகள் கூறுவதுபோல் பிரபாரன் நேரே போரிட்டுச் செத்திருந்தால் எப்படி ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்று சொல்ல முடியும்? ஓ செத்தபின் சொன்னாரோ? இவருமொரு புதிய யேசுதான். எட்டுமுறை செத்து உயிர்ந்தவராமே

    Reply
  • Kusumbo
    Kusumbo

    கேபின் பலகருத்துக்களுடன் குசும்பு குசும்பாமல் இருக்கும். ஆனால் இன்னுமொரு விசயம்தான் இடிக்கிறது. தலைவர் சொன்னார் சொன்னால் என்று தலையில் வைத்துக் கூத்தாடுகிறீர்களே இதுவும் ஒரு ராஜதந்திர நடவடடிக்கை என்றால் உண்மையாக கேபியை ஒத்துக் கொள்ளலாம். திருவள்ளுவர் சொன்னால் அவர் சொன்னால் இவர் சொன்னார் அண்ணா சொன்னார் இப்போ தம்பி சொன்னார் என்று வந்துவிட்டது. எமது சமூகம் தாமாக ஒன்றும் சொல்லாது, மற்றவர்கள் சொன்னால் தான் செய்யும். இப்படியான ஒரு சமூக அமைப்பைத்தானே புலிகள் விரும்பினார்கள். இதன் மறுவடிவம்தான் தலைவர் சொன்னார் என்பதா?

    //இதையே நமது தலைவர் 1987 ஆம் ஆண்டில் போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு மாறாது எனக் குறிப்பிட்டிருந்தார்// இதைத் தெரிந்து கொண்ட தலைவர் ஏன் போராட்ட வடிவத்தை மாற்றவில்லை. என்கேள்விகள் எல்லாம் விதண்டாவாதத்திற்காக அல்ல தெளிவடைவதற்காக. தெளிவடைந்தால் நாமும் உங்களுடன் சேர்ந்து போராடலாம் தானே.

    //நாம் முன்னர் ஆயுதப்போராட்டத்தை நடத்தியவாறு தானே அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்தோம்// என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்களிடம் எப்போ அரசியல் இருந்தது. இராணுவத்தை இலங்கை மண்ணில் இருந்து கலைப்பதனூடாகத்தான் தமிழஈழம் கிடைக்கும் என்று முழுமையா உங்கள் தலைவர் நம்பினார். இராஜதந்திரம் எப்போ இருந்தது? இது இருந்திருந்தால் சகஇயக்கங்களை ஏதோ ஒரு பொதுத்தளத்துக்கு இழுத்துச்சென்று சகோதரப் படுகொலைகளைக் குறைத்தும் தடுத்தும் போராட்டத்தை வலுப்படுத்தியிருக்கலாமே. நீங்கள் ஆயுதப்போராட்டம் செய்தீர்கள் அரசியல் செய்யவில்லை. கடசிகாலத்தில் தாங்கள் வரிந்து கொண்ட கெரில்லாப் போராட்டத்தையும் சரியாகச் செய்யவில்லை என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

    //இயக்கம் எத்தனையோ சோதனைகள் வேதனைகள் தாண்டி, இமாலய சாதனைகள் புரிந்து வரலாற்றில் ஈட்டிய வெற்றிகள் ஊடாகவே நமக்கு அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் திறந்தன//
    இக்கூற்றும் பிழையானது. தவிகூ காலத்திலேயே திறக்க ஆரம்பித்ததை புலிகள் அடைந்தார்கள். அன்று மக்கள் எழுற்சியுடனும் எமது பிரச்சனைகள் வெளியுலகிற்கு கலவரங்கள் போன்றவற்றினூடும் தெரிய ஆரம்பித்தது. சட்டத்தரணிகளாக அரசியல்வாதிகள் பிரச்சனையை உலகமேடைகளுக்குக் கொண்டுவந்தார்கள் அது ஐ.நா விலும் கேட்டது. மறந்த விடாதீர்கள்; மேலும் அரசியல் ஆலோகரான அரையவியல் கலாநிதியாகாத கலாநிதி ஐயா பாலசிங்கம் செய்த அரசியலை மேடைகளில் கேட்டோம். அவர் சொன்னது சந்திரிகாவும் புலுமையிர்சிலந்தியின் கதைதான். அதற்குக் கிடைத்த கைதட்டலில் அரசியல் பற்றி சிந்தித்த அனைவரும் அரசியலைவிட்டு ஓடிவிட்டார்கள்.

    உங்கள் கருத்தில் 1) ஒற்றைநாடாகப் பேணுதல். உண்மை ஆனால் அது மாறும் ஜனநாயக முறையில் நிரந்தரமானதல்ல. இங்கே ராஜபக்கசவின் அரசியலை அவதானிப்பது முக்கியம். இந்தியாவை நம்புவதுபோல் நடத்து எமக்கு மட்டுமல்ல உலகத்துக்கே இந்தியா உதவுகிறது எனும் பிரேமையை ஏற்படுத்தி சீனனிடம் ஆயுதம் காந்தப்புலநறி கதிரிகளை வாங்கி சீன முறையில் போக்குக் காட்டியடிக்கும் கெரல்லா முறையை ஏன் கையாண்டார்? இந்தியாபோல் சீனா காலத்துக்குக் காலம் அரசியலை மாற்றிக்கொள்ளாது. அதுமட்டுமல்ல தென்னிந்தியா தமிழர்சார் பகுதியாய இருப்பதால் முழுமையாய இந்தியாவை நம்ப இயலாது என்பதுமே. வளர்த்தால் குடும்பி வழித்தால் மொட்டை என்ற கணக்கில் இல்லாமல் இராஜதந்திர நடவடிக்கைகளிலும் அரசியலிலும் ஆயுதம் பின்னிப்பிணைத்து இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது. உங்கள் எதிரியை பாருங்கள் அரசியல்தான் செய்தார்கள் ஆயுதம் சும்மா கிடந்ததா? தேவைப்படின் தூக்குவோம் என்பதும் இராஜதந்திரம் தான்.

    Reply
  • thevi
    thevi

    இராஜ தந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளையில் ஏன் ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது என்பது முற்றிலும் மறுபடியும் மக்களை ஏமாற்றி அவர்களில் சவாரி செய்து தமது வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ளும் மோசடியாகும். முதலில் உங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்ளுங்கள் . பிழை செய்து விட்டோம் என்பதையும் தோல்விக்கான் முழுப் பொறுப்பும் உங்களுடையதே என்பதையும் பகிரங்கமாக அறிவியுங்கள்.

    ஆயுதம் இன்றி அரசியல் இல்லை. அரசியல் இன்றி ஆயுதம் வெல்லாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்ல வேண்டியது. //

    அது சரி “அரசியல் அரசியல்” என்கிறீர்களே அரசியல் என்றால் என்ன என தெரிந்து கொண்டா இறங்கியிருக்கிறீர்கள் ,பத்மநாதன் ?

    Reply
  • தணுஜா
    தணுஜா

    பத்மநாதன் கிழிக்கப்படுறார்?
    http://www.zshare.net/audio/63202444f7207864/

    Reply
  • sekaran
    sekaran

    ஒரு கிரிமினலை கஷ்டப்பட்டு கிட்டத்தட்ட 25 வருஷங்களின் பின் அழித்தோம். இப்போ அடுத்த கிரிமினல் ரெடியாகிவிட்டார். அதென்ன இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அனேகமான தமிழர்கள் (எல்லாரும் அல்ல)கிரிமினல் ஒருவரையே தலைவராக தேர்ந்தெடுக்கிறார்கள்?

    Reply
  • nallurkantha
    nallurkantha

    Ultre rightists groups normally speak like this.Because they are basically anti-people groups.LTTE has demonstrated to the world the end of an ultra rightist droup.Jaffna elite is also responsible for the sad state of Tamil people.This elite are the custodians of the rigid caste system in the North.

    Reply
  • மாயா
    மாயா

    ஒரு மாபியாவை(பிரபாகரன்) பின்பற்றுவோர் மாபியாகளே. அதற்கான அடுத்த தலைமைகளும் (கேபீயோ ஏனையவர்களோ) அதே வழியிலேதான் பயணிப்பார்கள். இவர்களை பின் பற்றும் சாதாரண மக்களும் உலகத்தினரால் மாபியாக்களாக கருதப்படும் சோகத்திலிருந்து ஆண்டவனாலும் காப்பாற்ற முடியுமோ தெரியுமோ தெரியாது?

    இவர்கள் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களது அழிவுக்கே காரணமாவார்கள். அடுத்த கட்டத்தை உணராத ஒரு தலைமை, தனக்கு பின் அடுத்ததாக ஒருவரை தலைமை ஏற்க உருவாக்காத ஒரு தலைவர் சுயநலவாதிதான். அந்த வகையில் புலிகள் தீர்க்கதரிசனமற்றவர்கள்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    //ஒரு கிரிமினலை கஷ்டப்பட்டு கிட்டத்தட்ட 25 வருஷங்களின் பின் அழித்தோம். இப்போ அடுத்த கிரிமினல் ரெடியாகிவிட்டார்// சேகரன்! பிரபாகரன் கிறிமினல் என்றால் கேபி பிரபாவை விட 100 மடங்கு கிறிமினல். பிரபா உள்ளூர் கிறிமினல் தெருச்சண்டித்தனம் உள்ளூர் கிறிமினலானது. கே.பி சர்வதேசக் கிறிமினல்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    மாயா சொன்னது அவ்வளவும் உண்மை. தனித்தலைமை எனும் காலம் போய் குழுத்தலைமையே ஐனநாயகத்தை எழுத்துச் செல்லும் எனக்கருதியே கட்சிகள் உருவாயின. அதனால் அரச முறைமாறியது. ஒருபோராடும் குழுவுக்குள்ளாவது ஒரு குழுஇருந்து தலைமைத்துவம் சுழற்சி முறையிலேயோ அன்றி போராளிகளின் தேர்தல் முறையிலேயோ ஒர தலைமை நடந்திருந்தால் கூட மக்கள் கருத்துத்தான் கருத்தில் கொள்ளப்படாவிட்டாலும் போராளிகளின் கருத்தாவது கருத்தில் கொள்ளப்பட்டிருக்கும். புதிய புலிகளின் மத்திய செயற்குழு முறையை முற்றாக அழித்து தனிமனிதப் போராட்டமாக்கியவர் பிரபாவே. இதைத்தொடர்ந்து உமா…!!

    Reply
  • மாயா
    மாயா

    இன்று வவுனியா தடுப்பு முகாம் ஒன்றிலிருந்து புலிகளின் விமானப் படையில் இருந்த தலைவர் ஒருவர் கைதாகியுள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவல்களின் பின்னர் முகாமில் புலிகளது விமானப் படையில் இருந்த மேலும் இருவர் இருப்பதாகவும் , புலிகளது விமான படை மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளை பெற முடிந்துள்ளதாக புலன் விசாரணைகளை நடத்தி வரும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மேலதிக தகவல்களை பெறுவதற்காக கைதானவரது பெயரை வெளியிடவில்லை.

    Reply
  • mike
    mike

    பிரபாகரனால் முப்பது வருடங்களில் செய்ய முடியாமல் போனதை, இனிமேலும் ஆயுதம் ஏந்தி என்னத்தை வெட்டி விழுத்தப்போகிறார். மிச்சமுள்ள தமிழ்மக்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதுதான் கே.பியின் அடுத்த ஆயுதபோராட்டமா? தேன்பானையே உடைந்து நொறுங்கிய பின்னரும் இன்னும் தொட்டு நக்க ஆசைப்படுவதேனோ. விரலை முறிப்பதைவிட வேறு வழியே இல்லை.

    Reply