கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு இடையில் ஏ9 வீதியூடாக இ.போ.ச.பஸ் சேவையை தினசரி சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏ9 வீதியூடான தனியார் போக்குவரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை.
இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை நாளாந்தம் நடத்துவது குறித்து இன்றைய உயர்மட்ட சந்திப்பில் முடிவு செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். வடக்கு அபிவிருத்திக்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையிலான செயலணிக்குழுவின் பிரதிநிதிகளும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளும் பாதுகாப்பு தரப்பினரும் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.
இதேநேரம், ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான இ.போ.ச. பஸ் சேவையை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. கடந்த 22ஆம் திகதி யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பித்து வைத்திருந்தார்.
எனினும் அது பரீட்சார்த்த சேவை ஆரம்பமேயென தெரிவித்த டலஸ் அழகப்பெரும, இன்று நடைபெறும் கூட்டத்திலேயே நாளாந்த சேவை குறித்து இறுதி முடிவெடிக்கப்படுமென்றும் கூறினார்.
இன்றைய கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய, இம்மாத இறுதிக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குமான ஏ9 வீதியூடான நாளாந்த இ.போ.ச. பஸ் சேவையை ஆரம்பித்து விடமுடியுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம், தனியார் போக்குவரத்துக்கான அனுமதி பற்றி கேட்டபோது, எதிர்வரும் நாட்களில் நிலைவரங்களுக்கு அமைய ஆராய்ந்து அதற்கான அனுமதிகள் வழங்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில், “ஏ9 வீதியூடான பொது போக்குவரத்து சேவைகள்’ எனும் விடயத்தின் கீழ் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தினூடாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில்;
“”யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் கொழும்பு வந்து திரும்பிச் செல்ல அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து சோதனை சாவடிகளும் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்குமென்பதுடன், ஏனைய தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். எவ்வாறிருப்பினும், யாழ்ப்பாண மக்கள் கொழும்பு வந்து திரும்பிச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இ.போ.ச. பஸ் சேவைக்கான அனுமதியே இங்கு வழங்கப்பட்டிருப்பதுடன், தனியார் போக்குவரத்துகளுக்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.