கறுவாத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் தற்கொலைக்கு முயற்சிசெய்த மாணவி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்து பாடசாலைகளுக்குள் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டுசெல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பினை நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலை வளாகத்துக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
குறித்த மாணவி வைத்திருந்த கையடக்க தொலைபேசி தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையை அடுத்து ஏற்பட்ட மன வேதனையின் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்று இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மாலபே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒன்பதாம் தரத்தில் கல்வி பயின்றுவரும் 14 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்தவராவார். குறித்த சம்பவத்தை அடுத்து இவர் சிகிச்சைகளுக்காக பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த சிகிச்சைகள் பலனின்றி அவர் நேற்று முன்தினம் வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார். இவரது இறுதிக்கிரியைகள் பொரளை பொது மயானத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் கறுவாத்தோட்டம் பொலிஸார் குறித்த மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் என அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களையும் பதிவு செய்தள்ளனர்.
இதேவேளை இச்சம்பவத்தையடுத்து பாடசாலைகளுக்குள் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது. இந்தத் தடையையும் மீறி மாணவர்கள் பாடசாலைகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வார்களாயின் அவர்களின் பெற்றோரே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.