அகதிமுகாமை பார்வையிட அனுமதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு

supremecourtphoto.jpgவன்னியில் அகதி முகாம்களிலுள்ள மக்களைப் பார்வையிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பிரதான எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.

அரசாங்கத்தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அகதி முகாம்களுக்குச் செல்ல எந்தவிதமான தடைகளும் போடப்படவில்லை. ஆனால், எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமே அனுமதி வழங்கப்படாமையானது அடிப்படை உரிமை மீறல் என்று தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு உள்ளிட்ட பல எதிரணிக் கட்சிகள் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின் தீர்ப்பை நேற்று திங்கட்கிழமை வழங்குவதாக உயர்நீதிமன்றம் முன்னர் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று உயர் நீதிமன்றம் கூடிய போது அரசதரப்பு சட்டத்தரணி இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருடனும் சட்டமா அதிபருடனும் கலந்துரையாட வேண்டியிருப்பதால் அதற்கு காலஅவகாசம் தருமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இக் கோரிக்கையை கவனத்திலெடுத்த உயர்நீதிமன்றம் அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி வரை தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வெலி அமுன இங்கு வாதிடுகையில், அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்.பி.க்கள், வெளிநாட்டு பிரமுகர்களுக்கெல்லாம் அகதி முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாங்கம், எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பது அநீதியான செயலென வலியுறுத்திக் கூறியதோடு, இந்த விடயத்தை இழுத்தடிக்கும் நோக்கிலேயே பிரதிவாதிகள் தரப்பு மேலும் கால அவகாசம் கோருவதாகவும் கவலை தெரிவித்தார்.

சிறைக் கைதிகளைப் பார்க்கக் கூட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கும் நிலையில், சாதாரண அகதி மக்களைப் பார்க்க அனுமதி மறுப்பதானது அடிப்படை மனித உரிமை மீறலெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனுதாரர்கள் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத்ஜயவர்தன, ஐ.தே.க.தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • msri
    msri

    எம்நாட்டு மக்களை> எம்நாட்டின் அரசியல் தவைர்கள் சென்று பார்வையிட > நீதிமன்றம் செல்லவேண்டியுள்ளது! எங்கள்நாட்டின் “மகிந்த ஐனநாயகத்திடம்” உலக நாடுகள் பல பாடங்கள் படிக்கவேண்டும்!

    Reply