தீர்வுத்திட்ட யோசனைக்கு 13 அரசியல் கட்சிகள் இணக்கம்

tisswitharana111.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாரம் நேரம் ஒதுக்கித்தந்தால், சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தயாரித்துள்ள தீர்வு யோசனையை அவரிடம் சமர்ப்பிக்க முடியும். ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை நாம் கோரியுள்ளோம் என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைத்திட்டத்தை ஜனாதிபதியிடம் கையளிப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,

“தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தயாரிக்கும் நோக்கில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. தற்போது 13 அரசியல் கட்சிகள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் அரசியல் தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. பொதுவாக அனைத்து விடயங்களிலும் 13 அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் எமது யோசனையை தயாரித்துள்ளோம். அதனை ஜனாதிபதியிடம் கையளிப்பதே தற்போதைய தேவையாகும்.

எனினும் நாங்கள் தயாரித்துள்ள தீர்வுத்திட்டத்தில் 13 அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் இதுவரை கையொப்பம் இடவில்லை. ஆனால் தீர்வுத்திட்டத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதுடன் ஜனாதிபதியின் அபிப்பிராயத்தை கேட்ட பின்னர் கையொப்பம் இடலாம் என்ற நிலைப்பாட்டில் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

எனவே தீர்வுத்திட்டத்தை கையளிப்பதற்கு நாங்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். இவ்வாரம் ஜனாதிபதி நேரம் ஒதுக்கித் தந்தால் தீர்வு யோசனையை ஜனாதிபதியிடம் கையளிப்போம். அதன் பின்னர் ஏனைய கட்சிகளின் யோசனைகள் கோரப்படும்”என்றார். அதேவேளை சர்வகட்சிக் குழு தயாரித்துள்ள தீர்வுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து அதில் பங்குபற்றும் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் கருத்து வெளியிடுகையில்,

“தீர்வுத்திட்டத்தில் முக்கிய சில விடயங்கள் உள்ளடங்குகின்றன. நாம் பார்க்கவேண்டிய முக்கிய விடயமாக பொலிஸ் விவகாரம் காணப்படுகின்றது. இவ்விடயமானது புதிய அம்சமாக இருக்கும். அதாவது பொதுவாக பொலிஸ் சேவையில் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படுவார். அவருக்கு கீழ் இரண்டு பொலிஸ்மா அதிபர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒருவர் மாகாண பொலிஸ் விவகாரங்களை ஆராயவும் மற்றவர் தேசிய பொலிஸ் விவகாரங்களை ஆராயவும் நியமிக்கப்படுவார்.

மாகாண மட்டத்தில் உப பொலிஸ் பரிசோதகர்களும் அதற்குக் கீழ்ப்பட்டவர்களும் நியமிக்கப்படுவார்கள். தேசிய மட்டத்தில் அதற்கு ஏற்றவாறு நியமனங்கள் அமையும். மாகாணங்களுக்குத் தனித்தனியாக பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் நேரடியாக முதலமைச்சர்களின் கீழ் வருவார்கள். மாகாண மட்டத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் மத்திய அரசின் கீழான பொலிஸார் தலையிடுவர். அடுத்த விடயமாக அரசியலமைப்பு நீதிமன்றம் காணப்படுகின்றது. இந்த நீதிமன்றம் ஊடாகவே அரசியலமைப்பு தொடர்புபட்ட விடயங்கள் ஆராயப்படும். அத்துடன் காணி மற்றும் நீர் விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படும். தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் காணி மற்றும் நீர் விவகாரம் தொடர்பில் இந்த ஆணைக்குழு பரிந்துரைகளைச் செய்யும்.

செனட் சபை ஒன்றும் அமைக்கப்பட பிரேரிக்கப்பட்டுள்ளது. அதாவது மாகாணம் ஒன்றில் நான்கு உறுப்பினர்கள் வீதம் 36 உறுப்பினர்கள் செனட் சபைக்கு நியமிக்கப்படுவார்கள். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் உள்ள அதிகாரங்களை குறைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இவ்வாறு சர்வகட்சி குழு தயாரித்துள்ள தீர்வுத்திட்டத்தில் பல யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு சர்வகட்சி பிரதிநிகள் குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. இதில் தற்போது 13 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக்க ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *