‘அயலகத் தமிழறிஞர்கள்” – இலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு

ilnco.jpgஇலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ள ‘அயலகத் தமிழறிஞர்கள்” என்ற தலைப்பில் தமிழக அறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் எழுதிய இந்த நூல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளிவர உள்ளது.

இலங்கைத் தமிழறிஞர்கள் தனிநாயகம் அடிகளார், க.சிவத்தம்பி, கா.கைலாசபதி, ஈழத்துப்பூராடனார் (செல்வராசகோபால்),  சி.மௌனகுரு, அ.சண்முகதாசு, எம்.ஏ.நுஃமான், சுப்பிரமணியன், ஆ.வேலுப்பிள்ளை உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ள அயலகத் தமிழறிஞர்கள் என்னும் தலைப்பிலான நூல் தமிழ்நாட்டில் வெளிவர உள்ளது. 200 பக்கம் அளவில் அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். 

ayalaka.jpgதமிழகத்தில் வெளிவரும் தமிழ் ஓசை நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவந்த களஞ்சியம் பதிப்பில் ஆறு மாதங்களாக அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியானது. அதில் 30 அயலகத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழ் இலக்கியப்பணிகள் இடம்பெற்றிருந்தது. கால்டுவெல், போப் அடிகளார், தனிநாயகம் அடிகளார், அ.கி.இராமனுசன்,  கமில் சுவலபில், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அலெக்சாண்டர் துபியான்சுகி,  தாமசு லேமான், சுப.திண்ணப்பன், ஆ.இரா.சிவகுமாரன், முரசு.நெடுமாறன் உள்ளிட்ட முப்பது தமிழுக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் இந்தத் தொடர் அறிஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் இடம்பெற்ற கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்ததால் உலக அளவில் இந்தத்தொடருக்கு ஆதரவு இருந்தது. தொடர் நிறைவு பெற்றதும் வயல்வெளிப் பதிப்பகத்தின் சார்பில் இந்த நூல் வெளிவர உள்ளது. தமிழக விலை 200 ரூபாவாகும்.

முனைவர் மு இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் என்ற நூலும் அதேநாளில் வெளிவர உள்ளது. இணையத் தமிழறிஞர் பட்டம் பெற்ற முனைவர் மு. இளங்கோவன் தமிழறிஞர்களின் வாழ்க்கை, கலை, இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் குறித்து தொடர்ந்து இணையத்தில் எழுதி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கைத் தமிழகம் முழுவதும் நடத்தி தமிழ் மாணவர்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருபவர். தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல்,  வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியாவில் எழுதுதல், மின்னிதழ்கள் உள்ளிட்ட துறை பற்றி எழுதிய பதினைந்து கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.112 பக்கம் அளவுள்ள இந்த நூலின் தமிழக விலை 100 ரூபாவாகும். 

நூல் ஆசிரியரிடம் தொடர்புகொள்ள பின்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்

.muelangovan@gmail.com
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *