கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் 3050 குடும்பங்களைச் சேர்ந்த பதினையாயிரம் பேர் (15,000) ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி முதற்கட்டமாக மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் நேற்றுத் தெரிவித்தார்.
பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள முழங்காவில், நாச்சிகுடா கிராம சேவகர் பிரிவுகளில் 1350 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேரும், கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள ஜெயந்திநகர், புதுமுறிப்பு, கனகபுரம், கிருஷ்ணபுரம், உருத்திரபுரம் கிழக்கு ஆகிய கிராம சேவகர்களில் 2700 குடும்பங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பேரும் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இக்கிராமங்களில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளவென உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 35 கிராமங் களில் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி முதற் கட்ட மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்திற்கு அமைய வவுனியா உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 18 கிராமங்களிலும், வெங்கள செட்டிக்குளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 12 கிராமங்களிலும் வவுனியா தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 5 கிராமங்களிலும் இம் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக வவுனியா கச்சேரி அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இம்மீள்குடியேற்றத்தின் நிமித்தம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.