மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்ற பங்களாதேஸ்

bangladesh-cricket.jpgமேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் கிரிக்கட் அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது.

முதலில் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது பங்களாதேஸ் கிரிக்கட் அணி. இது பங்களாதேஸ்  அணி, சர்வதேச கிரிக்கட் சுற்றுலாவொன்றில் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும். இதையடுத்து ஒரு நாள் போட்டித் தொடரையும் சந்தித்தது. முதல் ஒரு நாள் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு நேற்று 2வது ஒரு நாள் போட்டியில் ஆடியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியிலும் பங்களாதேஸ்  பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.

முதலில் பந்து வீச்சில் மிரட்டிய பங்களாதேஸ் பின்னர் பேட்டிங்கிலும் திறமையைக் காட்டி மேற்கு இந்தியத் தீவுகளை தேல்வியடையச் செய்தனர்.

அபாரப் பந்து வீச்சு காரணமாக ஓட்டம் எடுக்க முடியாமல் திணறிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் டிராவிஸ் டவ்லீன் சிறப்பாக ஆடி 117 பந்துகளைச் சந்தித்து 100 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சிறப்பான ஆட்டம் காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களை எடுத்தது.

இந்த ஓட்டத்தை  எட்ட பங்களாதேஸ் சிரமப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர் பங்களாதேஸ் வீரர்கள்.

ஷாகிப் அல் ஹசன் மற்றும் முகம்மது அஷ்ரபுல் ஆகியோர் அரை சதம் அடித்து பங்களாதேஸத்திற்கு வெற்றி தேடித் தந்தனர்.கேப்டன் ஷாகிப், 61 பந்துகளைச் சந்தித்து 65 ரன்களைக் குவித்தார். ஆட்ட நாயகன் விருதும் இவருக்கே கிடைத்தது. அஷ்ரபுல் 77 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார்.  ஆட்டம் முடிய கடைசி 6 பந்துகள் இருந்த நிலையில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் அப்துர் ரஸ்ஸாக். இதன் மூலம் 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது. 2வது வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பாற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

இதுதான் முதல் தொடர் வெற்றி…

டெஸ்ட் போட்டியில் ஆடும் நாட்டுக்கு எதிராக ஒரு நாள் போட்டித் தொடர் ஒன்றை வங்கதேசம் கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவரை 200 ஒரு நாள் போட்டிகளில் பங்களாதேஸ் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த 200 ஒரு நாள் போட்டிகளிலும், இன்றைய போட்டிதான் பங்களாதேஸ் அணி பெற்ற கூடுதலான ஓட்டமாகும்.

பங்களாதேஸ் அணி வெளிநாட்டு மண்ணில் வென்றுள்ள முதல் ஒரு நாள் போட்டித் தொடரும் இதுவே.

செயின்ட் கீட்ஸ் தீவில் உள்ள வார்னர் பூங்காவில் வெள்ளிக்கிழமை 3வது மற்றும் கடைசிப் போட்டி நடைபெறுகிறது. இதையும் வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் ஷாகிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதே மைதானத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கும் இடையிலான டுவென்டி 20 போட்டியும் நடைபெறவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *