முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய தரகர்களை நாட வேண்டாம் : வவுனியா பிரதேச செயலாளர்

இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களை வெளியில் எடுப்பது, அவர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறுவது, கிராம சேவகர்களிடம் அவர்களைப் பதிவு செய்வது, அவர்களுக்கான கடவுச் சீட்டைப் பெறுவது போன்ற செயற்பாடுகளில் இடம்பெயர்ந்தவர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ தரகர்களின் உதவியை நாட வேண்டாம் என வவுனியா பிரசே செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் தேவைகளுக்காகப் பொதுமக்கள் தரகர்களின் உதவியை நாடியுள்ளமை தொடர்பாக பிரதேச செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகளுக்காகத் தரகர்கள் கிராம சேவை அதிகாரிகளின் இலச்சினை, கையெழுத்து என்பவற்றைப் போலியாகப் பயன்படுத்தியுள்ளதுடன், பிரதேச செயலாளரின் கையெழுத்து மற்றும் அவருடைய அலுவலக இலச்சினையையும் தரகர்கள் போலியாகப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது சம்பந்தப்பட்ட கடிதங்களும் பிரதேச செயலகத்திற்குக் கிடைத்திருப்பதாக வவுனியா பிரதேச செலயாளர் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு விரோதமான முறைகளில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முயற்சிக்கின்ற பொதுமக்களே, அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டும் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எனவே தரகர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள வவுனியா பிரதேச செயலாளர், பொதுமக்கள் தமது தேவைகளுக்காக தத்தமது பிரிவு கிராம சேவகர்களுடன் தொடர்பு கொள்வதுடன், அவசியமானால் கிழமை நாட்களில் கடமை நேரத்தில் பிரதேச செயலாளர் அல்லது உதவி பிரதேச செயலாளரை நாடி தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்கள் அடங்கிய பொதுமக்களுக்கான அறிவித்தல் கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் அலுவலகம் உட்பட பொதுமக்கள் தொடர்பு கொள்கின்ற அரச பொது அலுவலகங்களின் அறிவித்தல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *