கொழும்பு யாழ்.பஸ் சேவை 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

bussss.jpg“ஏ9′  வீதியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குமான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் ஒன்றுவிட்ட ஒரு நாள் ஆரம்பமாகவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அத்துடன் மதவாச்சி வரை செல்லும் இரவு நேர தபால் ரயில் சேவையை இவ்வார இறுதிக்குள் வவுனியா வரை நீடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஏ9 வீதியூடான யாழ் – கொழும்பு இ.போ.ச. பஸ் சேவை பற்றிக் கேட்டபோது அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விபரங்களை கூறினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குமான இ.போ.ச. பஸ் சேவையை எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. திங்கட்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு தரப்பினருடனான கூட்டத்தின் போது இது குறித்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த பஸ் சேவையானது ஒன்றுவிட்ட ஒருநாள் சேவையாகவே இருக்கும். அதாவது முதல்நாள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும் பஸ்கள் ஒருநாள் கழித்து அதற்கு மறுதினமே மீண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும்.

இந்த பஸ் சேவைக்கு மக்களிடமிருந்து வரும் ஆதரவுக்கு அமையவே பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது குறைப்பதா என்பது பற்றி முடிவெடுக்கப்படும்.

இதேநேரம், தற்போது மதவாச்சி வரை செல்லும் இரவு நேர தபால் ரயில் சேவையை வவுனியா வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடனும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யுடனும் பேசியிருக்கின்றேன்.

எனவே, இந்த சேவை நீடிப்பை இவ்வார இறுதிக்குள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

ஏனெனில், இந்த இரவு நேர தபால் சேவை ரயிலில் மதவாச்சி வரை செல்லும் மக்கள் அங்கிருந்து வவுனியா செல்ல கொழும்பிலிருந்து மதவாச்சி வரை பயணிக்க செலவிடப்பட்ட தொகையைவிட அதிகமாக செலவிடுகிறார்கள். இதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *