“இந்திய அரசிடமிருந்து இ.தொ.கா. வினால் பெறப்பட்ட பஸ்களில் ஏழு பஸ்களை, பதுளை மாவட்ட தோட்டத் தொழிலாளர் நன்மை கருதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன். அடுத்த மாதம் மேலும் 35 பஸ்களை இந்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளேன்’. இவ்வாறு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், பதுளை வௌஸ்சை, மேமலை, தெல்பத்தை, கோட்டகொடை ஆகிய பெருந்தோட்டங்களில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். தொண்டமான் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
தோட்டத் தொழிலாளர்களுக்கு தினச் சம்பளமாக 500 ரூபா என்றடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கையை நான் முன்வைத்தேன். ஆனால், தோட்ட கம்பனி நிர்வாகமோ தினச் சம்பளத்தில் 37 ரூபாவினை மட்டுமே அதிகரிக்க முடியுமென்று உறுதியாகக் கூறினார். இதனையடுத்து, நாம் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினோம். யார் என்ன கூறியபோதிலும் தொழிலாளர்களினது சம்பள உயர்வினை, எம்மால் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும். அரசுடனோ, தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினுடனோ, தமிழக மற்றும் இந்திய அரசுடனோ, பேச்சுவார்த்தை நடத்தவோ, பேரம்பேசி விடயங்களை சாதிக்கவோ, இ.தொ.கா. வினால் மட்டுமே முடியும். அதற்கான சக்தியும், பலமும் இ.தொ.கா.விற்கே இருந்து வருகின்றது.
சிங்களக் கட்சிகள் மற்றும் சிங்கள மக்களின் பெரும்பாலானோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சியையே ஆதரிக்கின்றனர். அக்கட்சியே அமோகப் பெரும்பான்மை வாக்குகளில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும். யதார்த்தத்தை புரிந்துகொண்டு நாமும் செயல்பட வேண்டும்.
எனவே, நாமும் அரசுடன் இணைந்து ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுகின்றோம். அரசுடன் இணைந்து இருப்பதினால் மட்டுமே சமூக மேம்பாடுகள் கருதிய விடயங்களை சாதிக்க முடியும். அரசிலிருந்து பிரிந்து நின்று எதனையும் சாதிக்க முடியாது. சமூகத்திற்கான பாதுகாப்பும் இவ் அரசுடன் இணைந்து இருப்பதினால் மட்டுமே தங்கியிருக்கின்றது.
எமது சமூகப் பிரதிநிதிகளென்று பலரை இ.தொ.கா.உருவாக்கி, அவர்களுக்கான விலாசத்தினையும் பெற்றுக் கொடுத்தது. பட்டம், பதவிகள் கிடைத்ததும் அவர்கள் பணத்திற்காக விலை போய் இ.தொ.கா.வை காட்டிக் கொடுக்கும் செயலில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கட்டுப்பாடுகளுடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். தொழிற்சங்க ரீதியிலும் அரசியல் ரீதியிலும் எமது சமூகம் பலமடைய வேண்டும். பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என்ற ரீதியில் சமூகப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவும் வேண்டும். இதனை எமது சமூகம் நன்கு புரிந்துகொள்ளல் வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.
பல்லி
//அரசுடனோ, தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினுடனோ, தமிழக மற்றும் இந்திய அரசுடனோ, பேச்சுவார்த்தை நடத்தவோ, பேரம்பேசி விடயங்களை சாதிக்கவோ, இ.தொ.கா. வினால் மட்டுமே முடியும். அதற்கான சக்தியும், பலமும் இ.தொ.கா.விற்கே இருந்து //
இது என்ன புது புரட்ச்சி; யார் செய்தலென்ன தொழிலாளிகளுக்கு நன்னமை கிடைத்தால் அதை ஏற்று கொள்ள வேண்டியதுதானே; அதை விட்டு வி, பு மாதிரி நாம் மட்டும்தான் …. தகுதி உள்ளவர்கள் என ஏப்பம் எதுக்கு; அதிலும் பேரம் பேசகூடிய தகுதி இருக்கென வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள்; அது அனைவரும் அறிந்ததுதானே; பேரம் என்பது உங்களுடைய குடும்ப சொத்து கூட; கூலி தொழிலாளர் பிழைப்பில் கூட அரசியல் நடத்தும் வித்தையை எங்குதான் கத்து வந்தீர்களோ சாமி;
Kirupa
அப்பனால் கிடைத்த வரங்கள்.
அப்பாவி தோட்டத் தொழிலாளர்கள் இன்று வரை கண்டது ஒன்றுமே இல்லை.