அரபு நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடுநிலையான கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றமையைப் பாராட்டுவதாக இலங்கை வந்துள்ள பஹ்ரெய்ன் இராச்சியத்தின் பிரதமர் ஷேய்க் கலிபா பின் சல்மான் அல்- காலிஃபா தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் அரபு நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டையும், நடுநிலைக் கொள்கையையும் கொண்டுள்ளமை பாராட்டுக்குரியதென்று அவர் தெரிவித்தார். பஹ்ரெய்ன் பிரதமர் தமது இல ங்கை விஜயம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமது இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், நீண்டகால ஆழமான உறவின் ஒரு புதிய மைல் கல்லாகுமென்றும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பில் இணக்கம் கண்டிருப்பதாகத் தெரிவித்த பஹ்ரெய்ன் பிரதமர், பஹ்ரெய்ன் இராச்சியத்தின் மேம்பாட்டுக்காகப் பங்களிப்புச் செய்துவரும் இலங்கை யர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.