நமது சமூகத்தில் இன்று காணப்படும் பாரிய பல பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலமாகவும், கருத்துப் பரிமாறல்கள் மூலமாகவும் தான் நிரந்தரத் தீர்வுகளைக் காண முடியும் என்பதற்கான அழகிய போதனைகளை அல்குர்ஆனும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வு முறையும் நமக்கு பாடமாகப் புகட்டி இருக்கின்றன என்று கூறினார் தபால் தொலைத்தொடர்பு பதில் அமைச்சரும் ஏற்றுமதி வர்த்தக ஊக்குவிப்பு அமைச்சருமான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்.
கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி தேசியப் பாடசாலையின் 125வது வருட நிறைவுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று விசேட நினைவு முத்திரை வெளியிடும் வைபவம் பாடசாலையின் பிரதான மண்டபமான ஏ. எச். எம். பெளஸி அரங்கில் இடம்பெற்றது. அந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசும் போது இந்தப் பாடசாலையில் சமய விழுமியங்கள் மிகவும் உறுதியாகப் பேணப்படுவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். சமய ரீதியாக மாணவர்களை நெறிப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு நல்லதோர் வாழ்க்கையை முன்னெடுக்கக் கூடிய ஒரு பயிற்சியை எம்மால் வழங்க முடியும். சமயப் பண்புகள் குறைவடையும் போதுதான் சமூகத்தில் பல பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.
இஸ்லாம் மனித உரிமைகளையும், ஒழுக்க விழுமியங்களையும் மிகவும் மதிக்கின்ற ஒரு மார்க்கம். அல்குர்ஆனில் இது தொடர்பான பல வசனங்கள் உள்ளன. நபிகளாரின் வாழ்வில் இது பற்றிய பல பாடங்கள் சம்பவங்களாக உள்ளன.
இன்று நமது சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சமய விழுமியங்கள் சரியாகப் பேணப்படாமையே. இதனால் ஒரு பிரிவினர் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர். மரண தண்டனையை நிறைவேற்றுவதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. மனிதனின் மனதில் நல்ல சிந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்குப் பாடசாலைகளில் தேவையான அத்திவாரம் இடப்பட வேண்டும்.
இதனை கருத்திற் கொண்டுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசு கல்வித்துறை அபிவிருத்தியில் பிரதான கவனம் செலுத்தி வருகின்றது. மனிதாபிமான யுத்தம் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்திலும் கூட கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை. இது இந்த அரசு கல்வித் துறை மீது செலுத்திவரும் அக்கறைக்கு நல்லதோர் உதாரணமாகும்.
மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன், பிரதி அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள், கல்வித் துறை அதிகாரிகள், பழைய மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பெருந்திரளாக இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் வழிகாட்டலில் பாடசாலை அதிபர் தலைமையில் பழைய மாணவர்களின் 80 ஆம் ஆண்டு குழுவினர் இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.