மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியிலும் பங்களாதேசம் வெற்றி பெற்று 3 போட்டிகளையும் வென்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பட்டை நாமம் போட்டுள்ளது.
சகலதுறை ஆட்டக்காரர் முகமதுல்லா 51 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த பங்களாதேச அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகளி்ல் ஆடியது. இதில் இரண்டிலும் வென்று தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.
பின்னர் ஒரு நாள் போட்டிகள் தொடங்கின. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றி மேலும் ஒரு சாதனையைப் படைத்தது. இந்த நிலையில் பாசதீரேவில் நடந்த 3வது போட்டியிலும் வென்று பெரும் சாதனை படைத்து விட்டது. ஒரே நேரத்தில் பங்களாதேச அணி இப்படி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை அமோகமாக கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
இப்போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேசம் வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பட்டை நாமம் போட்டு விட்டது. சகலதுறை ஆட்டக்காரர் முகமதுல்லா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்கள் எடுத்தும், 2 விக்கெட்களை வீழ்த்தியும் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.
முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆட்ட நாயகனாக முகமதுல்லாவும், தொடர் நாயகனாக பங்களாதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் தேர்வு செய்யப்பட்டனர்.