வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா மெனிக் பாம் முகாம்களில் வசிக்கும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மாதம் 5 ஆம் திகதி தமது சொந்த கிராமங்களில் மீள்குடியமர்த்தப் படவுள்ளதாக மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக, ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த மீள் குடியேற்றம் இடம் பெறவுள்ளதாக அமைச்ச்ர் றிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் 180 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மக்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 1445 பேரும்,யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 45 குடும்பங்களுமே இம் மாதம் 5 ம் திகதி புதன்கிழமை, 60 பஸ் வண்டிகளில் வவுனியாவிலிருந்து சொந்த கிராமங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேலும் கூறினார்.