வவுனி யாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து மற்றும் போலியோ நோய்களுக்கான நிர்ப்பீடன மருந்துகளும் வயிற்றுப் புழுக்களுக்கான தடுப்பு மருந்தும் இன்று 3 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.
வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளின் நலன்கருதி இந்நிர்ப்பீடன மருந்து வழங்கல் மற்றும் வயிற்று புழுக்களுக்கான மருந்து விநியோகத் திட்டம் இன்று முதல் மூன்று நாட்களுக்குச் செயற்படுத்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளவர்கள் புலிகளின் பிடியில் சிக்குண்டிருந்த சமயம் தமது குழந்தைகளுக்கு, நோய்த் தடுப்பு நிர்ப்பீடன மருந்துகளையோ, வயிற்று புழுக்களைத் தடுப்பதற்கான மருந்துகளையோ ஒழுங்கு முறையாக பெற்றுக் கொடுத்ததில்லை. இக்குழந்தை களின் நலன் கருதியே இத்திட்டத்தை சுகாதார அமைச்சு, யுனிசெப், உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இப்பணியில் 140 அரசாங்க மருத்துவ மாதுகள் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் 130 நிலையங்களும் அமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்துள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் நன்மை பெறுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.