சகல பிரதேசங்களுக்கும் சமமான சேவையை வழங்குவதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டில் இதற்கு முன்னர் எந்த அரசாங்கங்களும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவற்றை செய்து முடித்துள்ளோம் எனவும் தொடர்ந்தும் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யத்தயாராயுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என சகல இன மத மக்களும் சுதந்திரமாக ஒரே கொடியின் கீழ் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். வடக்கு, கிழக்கு, பெருந்தோட்டப் பகுதி ஒன்றில்லாமல் சகல பிரதேசங்களுக்கும் சமமான சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர, முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக்கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புத்தள நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டின் தேசிய பயணத்தைப் பலப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர். இன்று நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் சுதந்திர நாடு உரிமையாகியுள்ளது. வடக்கு, கிழக்கிலன்றி மொனராகலை புத்தல பிரதேசங்களிலும் மக்கள் பயங்கரவாத அச்சுறுத்தல்களுடனேயே வாழ்ந்துவந்தனர். புத்தள பகுதியிலும் பலர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டே நாம் உங்கள் முன்னிலைக்கு வந்துள்ளோம். இன்று நாட்டில் பயங்கரவாதம்

மட்டுமன்றி வேறு எந்த வாதமும் இல்லை. வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் எம் இனத்தை அழித்து வளங்களை சூறையாடிய யுகமொன்றிலிருந்தது. அன்று விவசாயிகள் தெருவில் விடப்பட்டனர். விவசாய வளங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டனர். 16 வயதிற்குக் கீழுள்ள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அந்த யுகத்துக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டது.

எனினும் அன்று அவ்வாறு செய்தவர்களுக்கு உதவியவர்கள் இன்று இந்த நாடு அபிவிருத்தியடைவதை விரும்பவில்லை. அதனால்தான் நாம் சர்வதேச கடன்களைப் பெறுவதற்கு அவர்கள் தடையாக நிற்கின்றனர். வடக்கிற்கோ, கிழக்கிற்கோ வேறு அபிவிருத்திகளுக்கோ வன்றி நமது சொந்த விடயங்களுக்காக நாம் வெளிநாட்டுக் கடன் பெறுவதாக அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். இதனை மக்கள் நம்பத்தயாரில்லை. ஏனெனில் நாடு முழுவதிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சமகாலத்தில் ஐந்து துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகளென பாரிய அபிவிருத்திச் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. கிராமங்கள் பெரும் அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

மொனராகலை மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு நான்கு கோடி என நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன. எமக்குப் பல அழுத்தங்கள் வந்தன. அவ்வேளைகளில் நாம் அதற்கு அடிபணியவில்லை. ஒரு தடவையல்ல ஆயிரம் தடவையாயினும் நாம் தூக்குத் தண்டனை பெற தயார் என நாம் கூறினோம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் கஷ்டப் பிரதேசம் என்ற பெயரை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது ஏகாதிபத்தியவாதிகள் நம்மிடமிருந்து பறித்ததை நாம் மீளப்பெற வேண்டியுள்ளது.

மறந்து கிடந்த கிராமங்களை மீள அபிவிருத்தியில் கட்டியெழுப்ப வேண்டிய காலம் உருவாகியுள்ளது. எமது வளங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொழும்பு மட்டுமன்றி சகல நகரங்களும், சகல கிராமங்களும் ஒரேவிதமாக அபிவிருத்தி செய்யப்படும். இதற்கான செயற்றிட்டங்கள் மாகாண சபைகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

எமது மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஊவா மாகாண சபையிலும் நாம் அமோக வெற்றிபெற்று ஊவா மாகாணத்தைக் கட்டியெழுப்ப சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    அதுதான் தமிழர் பகுதிகளிலும் சிங்கள மக்களை குடியேற்ற திட்டமோ;
    நடிகனும் நீங்களே; ரசிகனும் நீங்களே;

    Reply