இத்தா லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி 43 உலக சாதனைகளோடு முடிவடைந்தது.இத்தாலியின் ரோம் நகரில் நேற்று முடிவடைந்த இந்த போட்டிகளுள் 8 நாட்கள் நடந்த நீச்சல் போட்டிகளில் 43 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
இதில் பெரும்பாலான உலக சாதனைகள் சர்ச்சைக்குரிய உயர் தொழில்நுட்பத்திலான நீச்சல் உடையை பயன்படுத்தி முறியடிக்கப்பட்ட உலக சாதனைகளாகும். இந்த நீச்சல் உடைக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் தடைவிதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீற்றர் பிரீ ஸ்டைல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் போட்டி முடிவில் 5 தங்கப்பதக்கங்களை தட்டிச்சென்றார். அவர் 100, 200 மீற்றர் பட்டர்பிளை, ரீலே போட்டிகளில் அமெரிக்காவுக்கு தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்தார்.
இறுதியில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் அமெரிக்கா மற்றும் சீனா 11 தங்கப்பதக்கங்களை வென்று முதலாம் இடத்தை பகிர்ந்துகொண்டன. அடுத்ததாக ரஷ்யா 8 தங்கப் பதக்கங்களை வென்று 2 ஆவது இடத்தை பிடித்ததோடு ஜெர்மனி 7 தங்கப்பதக்கங்களுடன் 3 ஆவது இடத்தை பிடித்தது.