ஐ.எம். எப் (IMF) அழுங்குப் பிடியில் இலங்கை : வ அழகலிங்கம்

Protest_Against_IMF கடந்த சில நாட்களாக சர்வதேச நாணய சபை இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாகக் கொடுத்ததை ஒரு வெற்றியாக இலங்கை அரச ஆதிக்ககுழாங்கள் கொண்டாடுகின்றன. ஒரு நாடு கடன்கார நாடாகிவிட்டால்  அந்த நாட்டை அழிக்கப் பிரத்தியேக எதிரி எவரும் தேவையில்லை. அது தானாகவே அழிந்துபடும். எதையும் உயர்வு நவிர்ச்சியாகச் சொல்லும் கம்பன் “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று கடன் எவ்வளவு பெரிய சோகத்தைத் தரவல்லது என்று குறிப்பிடுகிறான். இந்த நிதியானது கடுமையான நிபந்தனையின் கீழேயே மேலும் இலங்கை மக்களின் வறுமைக் கோட்டக்குக் கீழ் வாழும்  வாழ்க்கைத் தரத்தை மேலும் வெட்டி வீழ்த்தும் நடவடிக்கையாகும். இலங்கைப் பொருளாதாரமோ நெருக்கடிக்கு மேல் நெருக்கடியில் உள்ளது. வெளி நாட்டு முதலீடுகளும் ஏற்றுமதிகளும் பாரிய அளவில் விழ்ந்துள்ளது. மாசி மதத்தில் வெளிநாட்டுச் செலவாணிச் சேமிப்பானது ஒன்றரை மாதத்திற்கே போதுமானதாக இருந்தது. அரச ஊழியர்களுக்குச் சம்பளம்கொடுக்கவே பணம் இல்லாத நிலை இருந்தது.

இதற்கிடையில் நிதிக் கொள்ளை நோய் உலகெங்கும் கடுமையான சீரழிவுகளைச் செய்த கொண்டிருக்கிறது. அது ஒவ்வொரு நாடாகக் கபளீகரம்செய்து கொண்டிருக்கிறது. அதன்விளைவாக வறுமையும் தொழிற்சாலை மூடல்களும் வேலையில்லாத்திண்டாட்டமும் தலைவிரித்தாடுகிறது. நிதி மூலதன ஒட்டுண்ணிகளின் சூதாட்டமானது ருத்திரத் தாண்டவமாடுகிறது. இதன் தாக்கம் யுத்தக் காயங்களால் பீடிக்கப்பட்ட இலங்கையில் பாரியளவு இருக்கிறது. இதிலிருந்து மீளவே மாற்று வழி ஏதுமில்லாமல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கெட்டது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பழைய காலனித்துவ நாடுகளை இன்றுவரை முன்னேறவிடாமற் தடுத்ததிலே சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு பிரதானமானது. இன்று வரை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்று உலகில் எந்த நாடும் முன்னேறியது கிடையாது. ஆனால் இலங்கையோ இது தொடர்பாகப் பிரத்தியேகமான வரலாற்று அனுபவத்தைக் கொண்டுள்ளது. எந்த உரிமையுமே பொருளாதார அபிவிருத்திக்குக் கட்டுப் பட்டது என்று ஏங்கல்ஸ் கூறுகின்றார்.

இலங்கையில் தமிழ் மக்களோ சிங்கள மக்களோ எந்த உரிமையைப் பெற வேண்டுமானாலும் இலங்கை பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்பதை முன் நிபந்தனையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது வரவு செலவுத்திட்டத்தில் பற்றாக்குறை இல்லாத நாடாக மருந்து எண்ணெய்  இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய தேவைப் பொருட்களைத் தேவைக்கு ஏற்ற மட்டத்திற்கு இறக்குமதி செய்வதற்கு வேண்டிய வெளிநாட்டுச் செலவாணி உள்ள நாடாக வேண்டும். அது இலங்கை ஒரு நவீன நாடாகி உலகச்சந்தையோடு இரண்டறக் கலக்கும்பொழுதுதான் அது சாத்தியமாக முடியும். அதற்கு முந்நிபந்தனையாக இலங்கை தொழில் நுட்பத்தில் மேலாண்மை பெற வேண்டும். அப்படி மேலாண்மை பெற்றால் மாத்திரம் தான் சர்வதேசச் சந்தையிற்போட்டி போட்டு இலங்கையின் உற்பத்திப் பொருட்களைப் போட்டிகளுக்கு மத்தியில் விற்று வெளிநாட்டுச் செலவாணியை ஈட்டலாம். அந்த மட்டத்திற்கு இலங்கைத் தொழிலாளர்களின் சமூகஉழைப்பு உற்பத்தித்திறன் உள்ளதாகி விலைக்கு வாங்கும் சக்தி உள்ளதாகும்.

ஒவ்வொரு பொருளாதார அபிவிருத்திகளும் சமுதாய உறவுகளிலே மாற்றங்களைக் கொண்டு வரும். ஒவ்வொரு சமுதாய உறவுகளும் அதற்கேற்றாற்போல பொரளாதாரத்தை மறு சீரமைக்கும். சமூகங்களுக்கு உள்ளேயுள்ள உறவுகள் நாகரீகத்தை முன் நோக்கி உந்தித் தள்ளும் மாற்றங்களாக ஏற்பட்டால் மாத்திரம்தான் பொருளாதாரம் மேல் நோக்கி வளரும். இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உரிமை வழங்காததற்கான முக்கிய காரணம் அதன் பற்றக்குறைப் பொருளாதாரமேயாகும்.  சமூகங்களுக்குள்ளே உரசல் நிகழ்வதால் பொருளாதார வளர்ச்சி தடைப்படுகிறது. மணிக் கூட்டின் உள்ளேயுள்ள பல்லுச்சக்கரங்கள் ஒன்றோன்று இசைந்து இயங்காமல் ஒன்றோடொன்று மல்லுக் கட்டினால் சரியாக மணிக்கூடு இயங்காது போல சமுதாய உறவுகளிலே ஏற்படும் இசையாமையும் உரசல்களும் சமுதாயத்தை முன்னேற விடாது.

அரசியல் என்பது பொருளாதாரத்தின் செறிவே என்று மாக்ஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் சின்னப் பொருளாதாரமாக இருந்தால் பெரிய அரசியல் செய்ய வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் பெரிய பொருளாதாரமாக இருந்தால் சின்ன அரசியலே போதுமானது. இலங்கை மக்கள் அதுவும் சிங்கள வெகுஜனங்கள் அரசியல் பேசுவதுபோல உலகில் எந்த இனமும் பேசுவது கிடையாது. அதன் காரணத்தைப் பற்றாக்குறைப் பொருளாதாரத்தில் தேட வேண்டும்.

இலங்கைக்கு இன்று கடனை வழங்கிய சர்வதேச நாணய நிதியம் என்ன நிபந்தனையின் கீழ் அக்கடனை வழங்கியுள்ளது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
 
“எண்ணைமானியக் கடன், மின்சக்திமானியக் கடன், மற்றய அரசதொழிற்சாலைகள் ஏற்படுத்தியிருக்கும் கடன் போன்றவற்றைக் குறைக்க வேண்டும். வெளி நாடுகளிலிருந்து பெறும் கடன்களை மட்டுப்படுத்த வேண்டும். மானியம் வழங்குவதைக் குறைக்க வேண்டும். இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும். வரவுசெலவுப் பற்றாக்குறையைக் குறைக்கவேண்டும். பற்றாக் குறையை ஈடுசெய்யுமகமாக அரச வருமானத்தைக் கூட்டுவதற்காக வரிகளை உயர்த்த வேண்டும். மற்றய நாடுகளிலிருந்து நிதிஉதவி பெறும்பொழுதும், மற்றய அரசியல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பும் சர்வதேச நாணய நிதியத்தோடு கலந்துரையாடிவிட்டே எடுக்க வேண்டும்.’

இந்த நிபந்தனைகளில் இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றயவை இலங்கை மக்களுக்கு ஏற்புடையதல்ல. இதுகூட புதுமையான நிபந்தனையாகும். இராணுவச் செலவைக் குறையென்று சர்வதேச நாணய நிதியம் ஒரு நாளும் சொல்வதில்லை. இன்று கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  மூன்றாமுலக நாடுகள், அதிகமாக நேற்று ஏராளமாக ஆயுதங்களை வாங்கிக் குவித்தவை என்பதே உண்மை. ஆயுதங்களுக்காகச் செலவு செய்வதால் அழிவைத் தவிர ஆக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இராணுவச் செலவீட்டில் வெறும் நுகர்வைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. ஆயுதங்களைக் கடனில் வாங்கும் நாடுகள், அசலோடு வட்டியையும் சேர்த்துத் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து எந்த வருமானமும் கிடையாது.

இந்தச் சீர்திருத்தங்கள் எண்ணெய் விலையையும் மின் சக்தி விலையையும் மற்றய சாமான்களின் விலையையும் கூட்டும் என்பதை விளங்கிக் கொள்ள  வேண்டும். உலகச் சந்தையிலே விலை கூடினால் அதற்கு ஏற்றாற்போல் இலங்கையிலும் விலையைக் கூட்டவேண்டுமே ஒளிய மானியம் வழங்கி விலையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று கண்டிப்பாக எச்சரித்துள்ளது.

வரவுசெலவுப் பற்றாக் குறையைக் குறைப்பதற்கு மேலும் வரிகளைக் கூட்டி அரச வருமானத்தை அதிகரிக்கச் செய்வது  விலைவாசியைப் பாரிய மட்டத்திற்குக் கூட்டும். அரசாங்கத்தின் வரிவசூல் இலாகாவுக்கு வரும் வருமானம் குறைந்தால் மேலும் வரிகளைக் கூட்டுவதன் மூலம் அவற்றை ஈடுசெய்ய வேண்டும்.

இன்றைக்குள்ள இலங்கை மக்களின் விலைக்கு வாங்கும் சக்தியோடு ஒப்பிடுமிடத்து இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எவருமே இலகுவாக ஊகிப்பர். மூன்று தசாப்த யுத்தத்தால் விரக்தியின் விழிம்பில் உள்ள இந்த மக்களை இந்தச் செயற்பாடுகள் என்ன செய்யத்தூண்டும் என்பதை ஊகிக்க முடியும்.

சில கிழமைகளுக்கு முன்னர் ஜனாதிபதி ராஜபக்ஸ்ச தான் சர்வதேச நாணய சபையின் நிபந்தனைக்குக் கட்டுப்படப் போவதில்லை என்று சூழுரைத்தார். 2007 மார்ச்சில் சர்வதேச நாணயசபை இலங்கை அரசாங்கத்தின் இசைவு இணக்கமும் ஒத்தாசையும் இல்லாமையால் நாட்டடைவிட்டு வெளியேறியது. இருந்தபோதும் அதன் இருபது வீதமான கடனை சர்வதேச நாணய நிதியத்திற்கு வருடா வருடம் பட்டுவாடா செய்ய வேண்டியிருந்தது. 2004 றணில் விக்கிரம சிங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தால் பல தனியார்மயமாக்கல் நடவடிக்கை செய்யததாலேயே கலைக்கவேண்டி வந்தது. குறிப்பாக றெயில் சேவையை ஓரு இந்திய நிறுவனத்திற்கு விற்க எடுத்ததைத் தொடர்ந்து, அந்த இந்திய நிறுவனம் கொழும்பு கோட்டை புகையிரத நிலயத்தையும் மருதானைப் புகையிரத நிலயத்தையும் இடித்து அந்த இடங்களில் வர்த்தகக் கட்டிடங்களைக் (shopping complex) கட்ட இருந்தது. அதைத்தொடர்ந்த தொழிலாளர் வேலை நிறுத்மானது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு செல்லவே வேறு மார்க்கமில்லாமல் அன்றய ஜனாதிபதி சந்திரிக்கா, றணில்விக்கிரமசிங்கா அரசாங்கத்தைக் கலைக்க வேண்டி வந்தது.

வறிய மக்களின் துன்ப துயரங்களை இந்த நிதிநிறுவனம் ஒருபோதும் கருத்தில் கொண்டது கிடையாது. மாறாக முதலாளித்துவத் தொழிற்துறைகளை வளர்ப்பதற்காக ஏழைகளின் நிதியில் பெருவீதிகள் துறைமுகங்கள் விமான நிலையங் கட்டிக் கொடுத்ததே வழக்கமாக இருந்தது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு மூலகாரணம் சர்வதேச நாணய நிதியமாகும். 1950 தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் அங்கத்துவ நாடாகச் சேர்ந்து கொண்டது. 1953 இல் இதன் நிர்ப்பந்தத்தால் அரிசிவிலை கூட்டப்பட்டதால்  மாபெரும் கர்த்தால் போராட்டம் வெடித்து பிரதம மந்திரி டட்லி சேனனாயக்கா கொழும்பு துறைமுகத்தில் இருந்த பிரித்தானியக் கப்பலில் ஓடி ஒழித்துக் கொண்டார்.

மீண்டும் 1965 டட்லி சேனனாயக்கா அரசாங்கத்தில் கல்விக்கான மானியத்தை வெட்ட சர்வதேச நாணய நிதியம் நிர்ப்பந்தித்தது. ஆனால் அப்பொழுது சர்வகலாசாலைக்குப் புகுவதற்குத் தகுதியான மாணவர்கள்  இலங்கையில் இருந்த பல்கலைக் கழகக் கொள்ளளவைவிடப் பத்து மடங்காக இருந்தனர். பொன்னம்பலம் செல்வனாயகத்தின் இந்துப் பல்கலைக்கழகமா தமிழ் பல்கலைக் கழகமா என்ற வாத விவாத இழுபறியால் ஒரு பல்கலைக் கழகமுமே போடாமல் டட்லி சேனனாயக்க தப்பிக் கொண்டார். உண்மை சர்வதேச நாணய நிதியம் அதற்கு நிதி ஒதுக்க விடவில்லை.

ஆனால் 1969 இல் பல்கலைக்கழகப் புகுமுகத்திற்கான மாணவர் போராட்டங்கள் நடைபெறவே அது 1970 இல் புதிதாக ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் பல்கலைக் கழகப் புகுமுகத்தில் தரப்படுத்தலை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. மேலும் சர்வதேச நாணய சபை முன்பு பட்ட கடனைத் திருப்பிக் கட்டும்படி பிடிவாதமாக நின்றதால் புதிய நிதி மந்திரி என்.எம் பெரோராவால் வரவு செலவுத் திட்டத்தைச் சமாளிக்க முடியாமற்போகவே அது ஏற்படுத்திய தாக்கத்தாலும் உலக நாணயமாக விளங்கிய அமெரிக்க டொலருக்கும் தங்கத்துக்கும் உள்ள பிணைப்பு ஜனாதிபதி நிக்ஸ்சன் நிர்வாகத்தால் உடைக்கப்பட்டு பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போய் அதன் பிரதி விளைவால் எண்ணெய் விலை உலகச் சந்தையில் நாலுமடங்காக கூடி மேலும் நெருக்கடி ஏற்படவே 1971 இல் ஜே.வி.பி கிராமப் புறச் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி ஏற்பட்டது. அன்று போடப்பட்ட அவசரகாச் சட்டத்தின் கீழான ஆட்சி இன்று வரை நீடிக்கின்றது.

1977 ஜே.ஆர். ஜெயவர்த்தனா யூ.என்.பி அரசாங்கம் வந்தவுடன் அதன் நிதி மந்திரியாக றொணி டீ.மெல் வந்தார். அப்போதும் சர்வதேச நாணய சபை உணவு மானியத்தையும் கல்வி வைத்திய வசத்திக்கான மானியத்தையும் வெட்டும் படி பிடிவாதமாக நின்று கொண்டது. அப்பொழுது ஜெயவர்த்தனா இலங்கையைச் சிங்பூராக்கக் கனாக்கண்டு 1956 இல் இருந்து நிலவிய இறக்குமதித்தடையை எடுத்ததோடு திறந்த பொருளாதாரத்திற்கு வழி வகுத்தார். முதலாவது வரவு  செலவுத்திட்டத்தை வாசிக்கும் நாள் பாராளுமன்றத்துக்குள் இரண்டு சர்வதேச நாணயநிதியப் பிரதிநிதிகள் கேட்போர் கூடத்தில் காத்திருந்து நிதிமந்திரியின் வரவுசெலவுத்திட்ட நகலைத் பரிசீலித்த பின்பே வாசிக்க அனுமதித்தனர்.

அன்று சர்வதேச நாணய சபை மற்றய மூன்றாமுலக நாடுகளுக்கு  ‘மறுசீரமைப்பு” என்று சொன்ன அதே சுப்ரபாதத்தை இலங்கை அரசுக்கும் சொன்னது.

‘நாணய மதிப்பைக் குறை, அரச செலவுகளைக் கடுமையாக வெட்டு. குறிப்பாக சமுதாயச் செலவு உணவு மற்றும் பிறநுகர்வுக்காக அளிக்கப்படும் மானியத்தைக் குறை, அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக்கு, அரசு கொடுக்கும் பொருட்களின் விலையை உயர்த்து, (மின்சக்தி, எண்ணெய், போக்குவரத்துக் கட்டணம், உரம், பூச்சிகொல்லி, நீர்), விவசாய நீப்பாசனத்திற்கு இலவச நீர் வழங்காதே, விலைக் கட்டுப்பாடுகளை அறவே அகற்று, ஊதியக் குறைப்பு மூலம் நுகர்வைக் குறை, வரி மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்து.”

கட்டுனாயக்காவில் போடவிருந்த சுதந்திர வாத்தக  வலையத்திற்கு எதிராக ஏற்பட்ட தொழிலாளர் போராட்டங்களைக் கட்டுப்படுத்த 1977 இனக்கலவரத்தை செயற்கையாக ஆத்திரமூட்டி ‘சண்டையெண்டால் சண்டை சமாதானம் என்றால் சமாதானம்” என்று பயமுறுத்தி அதன் பின்னணியில் 1978 இல் பங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப் பட்டது. அது இன்றுவரை நீடிக்கின்றது. அதைத் தொடர்ந்து 1983 இல் இனக்கலவரம் இராணுவத்தின் உள்சதி காரணமாக  வெடித்ததோடு வெறியாட்டம் ஆடிய இராணுவத்தை ஜெயவர்த்தனாவும் கட்டுப்படுத்த முடியாதவராக இருந்தார்.

அதைத் தொடர்ந்து நீடித்த 36 வருடங்களும் சர்வதேச நாணய நிதியம் உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மேற்கு நாடுகள் எல்லாம் ஒவ்வொரு சமாதானப் பேச்சு வார்த்தைகளின் முன்னும் பின்னும் பொருளாதாரத்தைத் தாரளமயமாக்கு, அரசுடமையான நிறுவனங்களைத் தனியார் உடமையாக்கு என்று உச்சாடனம் செய்வதில் ஓய்ந்ததே கிடையாது. மாவிலாற்றுப் பிரச்சனை மத்தியிலும் கூட அவர்கள் தமது தனியார் மயமாக்கு என்ற நிர்ப்பந்தத்தை நிறுத்தியது கிடையாது. இருந்த போதும் பொருளாதாரத் தாரளமயமாக்கலும் தனியுடமையாக்கலும் இலங்கையில் பூரணம் அடையவில்லை. இன்றுவரை இலவச வைத்திய வசதியும் இலவசக் கல்வியும் உணவு எண்ணெய் மின் போக்குவரத்து உர மானியங்களும் பாதியளவென்றாலும் தப்பிப் பிழைத்துள்ளன. மூன்று தசாப்தமாக லட்சக்கணக்கான இலங்கைத்தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களை வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் ஏகாதிபத்தியங்களும் இரைகொடுத்து தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்கான சூழலை ஏற்படுத்தி விட்டன. தமிழ் மக்களுக்கு இந்த யுத்தம் தமிழீழப் போராட்டமாகத் தோன்றிளாலும் மேற்குலக ஏகாதிபத்தியங்களோ இதனுள் தலையிட்டு தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்குரிய சூழலை ஏற்படுத்தவே அக்கறையாக இருந்து சமாதானத்தை வஞ்சக வழிகாளாற் குழப்பின. புலியும் அவர்களது மகிடிக்கு வளைந்து வளைந்து ஆடியது.

Board of Investment (BOI), Sri Lanka  என்கின்ற வெளி நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் திணைக்களம் இன்று இலங்கையிலே எந்தவித அரச தலையீடுமின்றி வெளிநாட்டவர் தமது முதலீடுகளை நூற்றுக்கு நூறுவீதம் தமது சொந்த நிறுவனத்தின் பேரில் முதலிடலாமென்றும் அதனால் வரும் லாபம் முழுவதையும் தமது சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லலாமென்றும் அதற்காக 15 அன்றேல் 20 வருடங்களுக்கு பூச்சிய வரிச்சலுகை தருவதாகவும் அறை கூவுகின்றன. அவர்களது முதலீடுகளைப் பாதுகாக்க மேலும் 100000 இராணுவத்தைச் சேர்கப் போவதாக இராணுவச் செய்திகள் கூறுகின்றன. இலங்கை மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற தோரணையில் இலங்கை அரசு இராணுவத்தைப் பெருக்கி வருகிறது.

இந்த உள் நாட்டு யுத்தத்திலே வென்றதாக எண்ணற்ற இராணுவக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும் கெட்டித்தனம் பெற்று விட்டோமென்றும் அரசாங்க மந்திரிகள் புளுகுகிறார்கள். உதவி நிதி மந்திரி றன்ஜித் சியம்பலப்பிற்றியாவும் மத்திய வங்கி முகாமையாளர்  Ajith Nivard Cabraal புலியை வென்றதின் பின் மேலும்ஒரு பெரிய வெற்றி என்று ஊடகங்களக்குக் கூறிப் புழகாங்கிதம் அடைந்தனர்.

சேக்ஷ்பியரின் “ஹம்லெட” நாடகத்திலே வரும், எரிச்சலூட்டும் அந்த வயதான மனிதனான பொலோனியஸ் தன் மகனிடம் இவ்வாறு கூறுவான் ‘கடன் வாங்கவும் செய்யாதே, கடன் கொடுக்கவும் செய்யாதே.”

இந்த இலங்கை அரசாங்கத்தின் கண்மூடித்தனமான கடனுக்குப் பலியான இலங்கை மக்கள் விளைவுகளைக் கட்டாயம் சந்தித்தே தீரவேண்டும். உள்ளுர்ர் அத்தியாவசிய செலவுகளைக் குறைத்து, இலங்கை மக்களின் கல்வி உடல்நலம் போன்ற அடிப்படைத் தேவைகளை அலட்சியம் செய்து வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி
(பட்டினி பரம ஒளடதம்,
மீதூண் விரும்பேல்,
பாவி பட்டினி கிடந்தால் பரிசுத்தவான் ஆகிறான்)

வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் இருண்ட எதிர்காலத்தை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வேண்டும். பட்ட கடனில் பாதியளவாவது மேலும் கள்ள வழிகளால் கறுப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளில் போய் சேர்வது திண்ணம்.
(எத்தொழிலைச் செய்தாலும்,
ஏது அவஸ்தைப் பட்டாலும்,
முத்தர் மனமிருக்கும் மோனத்தே)

அந்த அயோக்கியத்தனத்தை மறைக்க நாட்டிலே தேசப்பற்றாளர்களும் தேசப்பற்று இல்லாதவர் என்ற இரு பிரிவினரே இருக்கிறார்கள் என்று கடவுளை ஒத்த அதிஅறிவாற்றல் உடைய உத்தமர்கள்  அந்தரத்தில் நின்று பேசும் சுந்தர வசனங்களால் ஊடகங்கள் இனிக்கின்றன. உண்மையில் முழு இலங்கை மக்களும் தாம் கஷ்டப்பட்டுப் போராடி வென்றெடுத்த ஜனனாயக உரிமைகளையும் வாழ்க்கைத்தரத்தையும் சமூக அன்னியோன்யங்களையும் இழந்து விட்டனர். இலங்கையோ புரட்சி ஒன்றைக் கருக் கொண்டுள்ளது என்பதுவே உண்மையாகும். உலகம் முழுவதும் உதவி செய்தாலும் எந்த நிதி நிறுவனமும் எவ்வளவு காசைக் கொட்டினாலும் நெஞ்சை நெருடும் உண்மையொன்று உண்டு.

வன்னி முகாங்கள்  நல்வாழ்வுக்கான சாதனமாய் இல்லாமல் அவல வாழ்வுக்கு எதிரான பரிகாரமாக மட்டும் இருப்பது  தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும்.

வ.அழகலிங்கம்
ஜேர்மனி
30.06.2009

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • chandran.raja
    chandran.raja

    சர்வதேச நாணயத்தின் சட்டதிட்ட குணாம்ச போக்குகள் இலங்கைக்கு மட்டும் உருத்துடைய அல்ல. உலகம் முழுவதற்குமே பொதுவானவை. இதன் முழுமையான குணாம்சங்களை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஓர்யிரு உதாரணங்களில் புரியவைக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பெறுமதியிருப்பது போல ஒவ்வொரு நாட்டிலுள்ளவர்களுக்கும் தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மனியில் உள்ளவனுக்கு ஒரு பெறுமதியென்றால் இந்தியாவில் உள்ளவனுக்கு வேறு மாதிரியானவை. அந்தமான் தீவில்லுள்ளவருக்கு வேறுவிதமானவை. அதாவது ஒருநாட்டு வளங்களிலிருந்தே அந்த மனிதனின் பெறுமதியும் ஆகிறது. உதாரணமாக ஜேர்மன் தொழிலாளி நம்பிக்கைக்குரிய மனிதராக கணிக்கும் இடத்து 100.000 யூரோவை கடனாகப்பெறலாம். இலங்கை தொழிலாளிக்கு அந்த இடம் அல்லவே!

    இன்னொரு உதாரணம். மேற்கூறியவை தொழிலாளர் வகைப்பட்டது.
    அடுத்தது சொத்துகைப் பட்டது.முதல் நாடு. இப்பொழுது சொத்து.
    தியாகராஜா மகேஸ்வரன் நாலுகப்பல் வைத்து வியாபாரம் செய்தாரே இவருக்கு இலங்கை அரசாங்கத்தை விட கூடிய செல்வாககு சர்வதேச வங்கியிடமிருந்தது.

    இரண்டாம் உலகமாகயுத்ததிற்கு பிறகு தோன்றிய இந்த அமைப்பு முறை முற்றிலுமாக மக்களின் நலன் கொண்டதல்ல. அப்பட்டமான சுயநலமிக்க சுரண்டல்லை பாதுகாக்கிற அமைப்பு முறையே! இதில் விசித்திரம் என்னவென்றால் இவர்கள் தமது சொத்தநாட்டு தொழிலாளவர்கத்திற்கே உதவுவதற்கு அருகதையற்றவர்கள். அமெரிக்கநாட்டு பணம் அமெரிக்கருக்கு உதவுவதில்லை. ஐரோபியநாட்டு பணம் ஐரோப்பிய மக்களுக்கு உதவுவதில்லை. அங்குள்ள ஒரு சில மூலதனக்காரருடைய நலன் கருதியதே! இதில் கவலைக்குரிய அம்சம் என்னன்றால் அதிகாரத்துடன் தமக்கான பாதுகாப்பையும் ஆயுதத்தையும் தொழிலாளர் வர்கத்துடன் இருந்து பெற்றிருப்பது தான். இதிலிருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால் இந்த ஏகாதியத்து பூதத்தை விரட்டியடிக்க சர்வதேச தொழிலாளர் ஐக்கியம் தேவை என்பதே! இதற்கு அப்பால் எந்தவித கணக்குமில்லை. இதன் விதிவழியே துன்பஅலைவீசி கடந்து சென்ற உள்நாட்டு யுத்தத்தையும் வரப்போகும் காலங்களையும் கணித்திட முடியும்.

    Reply
  • iyampillai
    iyampillai

    அழகலிங்கம் இன்னமும் பழைய தொழிலாளர்பாதைக் கண்ணாடி ஊடாக உலகத்தை பார்க்கிறார். ஆனால் யதார்த்தம் அதுவல்ல!

    ஜேர்மன் சுவர்விழும் என்றே அழகலிங்கம் எதிர்பார்க்கவில்லை!!

    சொத்துமட்டுமே சேர்த்து செத்துபோகும் தமிழனுக்கு மனிதவாழ்க்கையை அனுபவிக்க எப்பதான் அறிவுவருமோ?

    பகிர்ந்து வாழாமல் பகட்டுக்கு வாழும் தமிழனுக்கு எப்பதான் பகுத்தறிவு வளருமோ?

    வாழ வேண்டிய வயதில் அஞ்சு சதம் செலவழிக்காது மாடாக உழைத்து காசு சேர்த்து எல்லை தள்ளி காணி சேர்த்து அனுபவித்து செத்து போகும் தமிழனுக்கு வாழ்கையை அனுபவிக்க நல்ல கலை இலக்கிய கலாச்சார அம்சங்களை அனுபவிக்க எப்பதான் புத்தி வரப்ப போவுதோ?

    குருட்டுதனமான எதிர்பார்ப்புகள் மடமைத்தனமான நடவடிக்கைகள் கிறுக்குத்தனமான பேச்சுக்கள் வங்குறோத்துதனமான அணுகுமுறைகள்
    தமிழனை இன்று இந்தளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்குது!!!!

    Reply
  • Rohan
    Rohan

    //குருட்டுதனமான எதிர்பார்ப்புகள் மடமைத்தனமான நடவடிக்கைகள் கிறுக்குத்தனமான பேச்சுக்கள் வங்குறோத்துதனமான அணுகுமுறைகள்
    தமிழனை இன்று இந்தளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்குது!!!!//

    ஏதாவது நல்ல விஷயம் சொல்வதை விட்டு இப்படியே வசை பாடி வாழுவது தமிழன் வழமை தானே.

    Reply
  • பல்லி
    பல்லி

    //தமிழனுக்கு வாழ்கையை அனுபவிக்க நல்ல கலை இலக்கிய கலாச்சார அம்சங்களை அனுபவிக்க எப்பதான் புத்தி வரப்ப போவுதோ//
    ஆகா அது எங்கே இருக்கு; நீங்கள் சொல்லிய அலக்கியம் ;களை கொலாச்சாரம் அனைத்தும் வீனாய் போகும் தமிழனிடம் நிறைய இருக்கு; ஆனால் அதை சில கிறுக்கு பிடித்தகூட்டம் தாங்கி பிடிப்பதால் அதுக்கு போகவே பயந்து சின்னத்திரை தொடரையும் இனைய தளத்திலே சினிமாவையும் பார்த்து தம்மை தாமே சமாதானபடுத்தி வாழ்கின்றனர், கலை, இலக்கியம் பற்றி தேசம் ஆரம்பித்த காலத்தில் பல கட்டுரை வந்து சக்கை போடு போட்டதை தாங்கள் கவனிக்காத அளவுக்கு இலக்கிய ஆர்வமா?

    கட்டுரையாளர் மிகநிதானமான கட்டுரையை தந்துள்ளார்; ஆனால் அதுக்கு பல பின்னோட்டம் இடலாம்; இதில் ஏன் தமிழினத்தை வம்புக்கு இழுக்கிறியள்;
    உடைந்துபோன இலக்கியவாதிகள்;;
    உள்ளாடை புரட்ச்சி;;
    கூட்டு கலாவி;;
    விமர்சன எழுத்துலகம்;;
    தலித்துக்களின் தடம் புரள்வு;;
    விலகி போன பெண்ணியம்;;
    பிணத்தின் மீது விமர்சனம்;;
    தளம் மீது தண்ணியடி;;
    தேசத்துக்கு தடா;;
    நாம் மட்டுமே அறிவு கொலைகள்;;
    யாரப்பா இந்த பல்லி;;
    ஜயோ ஜயோ இப்படியான கலை கலாசார தேவைகளை மக்கள் மீது திணிக்க யோசிப்பதை விட்டு நீங்கள் ரசியுங்கோ பாடுங்கோ ஆடுங்கோ அப்புறமாய்………….

    Reply
  • thevi
    thevi

    சொத்துமட்டுமே சேர்த்து செத்துபோகும் தமிழனுக்கு மனிதவாழ்க்கையை அனுபவிக்க எப்பதான் அறிவுவருமோ”

    வரும். தனக்கும் தனது சந்ததிக்கும் சமூகரீதியான அனைத்து பாதுகாப்பும் நிச்சயமானது என்ற நிலை வரும் போது அவர்கள் கலை கலாச்சாரம் மட்டுமல்ல விடுமுறையைக் கழிக்கவும் ஐரோப்பாவிற்கு வருவார்கள்.

    Reply