தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு அச்சுறுத்தலான தருணத்தில் எதிர்நோக்கியுள்ள தேர்தல் குறித்து சிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. என். ஸ்ரீகாந்தா அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழரசு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை மாலை பண்டாரிக்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் சிறிகாந்தா எம்.பி. மேலும் கூறியதாவது;
தமிழ் மக்களுடைய சுயகௌரவத்திற்கும் மரியாதைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலின் மத்தியில் இந்த தேர்தலை ஜனநாயக ரீதியாக நாம் சந்திக்கின்றோம். யாழ். மாநகர சபை, வவுனியா நகர சபைகளில் சிறந்ததொரு நிர்வாகத்தை ஏற்படுத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விரும்புகின்றது.
மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றி யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ள ஆட்சியாளரை ஜனநாயக ரீதியிலும் வடபகுதி தமிழ்மககள் ஆதரித்துவிட்டார்கள் என ஆட்சியாளர்கள் சர்வதேச சமூகத்திற்கு பிரசாரம் செய்து தமிழர்களுக்கு இங்கு பிரச்சினை இல்லை என தெரிவிக்கும் நிலை ஏற்படும்.
எனவேதான், தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டும். தேசிய இனப்பிரச்சினையான தமிழ் மக்களுடைய நியாயமான அரசியல் அபிலாசைகள் சரியாக சமாதானமாக தீர்க்கப்படாததனால் தான் போராட்டம் உருவானது. இந்த போராட்டம் பின்னர் நீண்டதொரு ஆயுதப் போராட்டமாக மாறியது, யுத்தம் நடைபெற்றது.
அரசியல் தீர்வாக நாம் எதிர்பார்க்கும் அமைப்புமுறை வட, கிழக்குத் தமிழர்களுக்கு அவசியமானதாகும்.
நாட்டின் வரையறைக்குள் இதனை பெற்றுக்கொள்ள தமிழ்மக்களுடைய பிரதிநிதிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் போராடும். ஆட்சியாளர்களுடன் இணைந்து தேர்தலில் குதித்துள்ளவர்கள் ஒரு ஆர்ப்பாட்ட அட்டகாச அரசியல் தேர்தலில் குதித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.