5 லட்சம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய புத்தளம் மாவட்டத்தில் உள்ள கிராம அதிகாரிகள் பிரிவு தோறும் பதிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. புத்தளம் மாவட்டத்தின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிலையத்திலேயே மேற்படி பதிவு தொடர்பான செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது குறித்து பிரதேச செயலாளர்கள், கிராம அதிகாரிகள், முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோருக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்புத்துறை அமைச்சின் கீழ், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை, முகாமைத்துவமுள்ள, செயற்திறனுள்ளதாக மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்லவுள்ளவர்கள் குறித்துத் தகவல்களைத் திரட்டவும், அதற்கேற்ப இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 127 பயிற்சி நிலையங்களில் தேவையான பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதும் இதன் முக்கிய குறிக்கோள்களாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் சுனில்.எஸ்.சிரிசேன தெரிவித்தார்.புத்தளம் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ இந்நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் சுசான் நாணயக்கார உட்பட பலரும் கலந்துகொண்டனர்.