பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளுடன் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட இந்திய பிரஜைகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பொலிஸ் குழுவொன்றினால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
கஹவத்தை பிரதேசத்தில் சாஸ்திரம் சொல்பவர்கள் என்ற போர்வையில் தங்கியிருந்து பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பெற்ற நகைகளுடன் தப்பிச் செல்ல முற்பட்ட இருவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இது போன்ற மோசடிகளை செய்துள்ளனரா என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெல்மதுல்ல மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.