டெங்கு காச்சளைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. என்கின்ற பக்ரியா நுண்ணங்கியை பாவிப்பதற்குரிய கியூப மருத்துவ நிபுணர்களின் சிபார்சுகள் அடுத்த வாரம் கிடைக்கப் பெறும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சளைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபாவில் பயன்படுத்தப்படும் பி.ரி.ஐ. என்கிற பக்ரியா நுண்ணங்கியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.
இந்த நுண்ணங்கியை பயன்படுத்துவதற்குத் தேவையான நிபுணத்துவ சேவையை பெற்றுக் கொடுக்கவும் கியூபா முன்வந்துள்ளதுடன் இரு மருத்துவ நிபுணர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கின்றது.
இம்மருத்துவ நிபுணர்கள் இருவரும் ஹம்பாந்தோட்டை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பி.ரி.ஐ.யை பாவிப்பது தொடர்பான கள ஆய்வை பூர்த்தி செய்ததும் தங்களது சிபார்சுகளை சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுக்கு சமர்ப்பிப்பர் என்றும் டாக்டர் மஹீபால கூறினார்.
இம்மருத்துவ நிபுணர்கள் இருவரும் ஹம்பாந்தோடடை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வை ஏற்கனவே மேற்கொண்டனர். கண்டி மாவட்டத்தில் தங்கி இருந்து மேற்கொண்ட கள ஆய்வை முடித்துக் கொண்டு இன்று கொழும்புக்கு வருகை தரும் இவர்கள் அடுத்துவரும் ஐந்து நாட்கள் கொழும்பு மாவட்டத்தில் ஆய்வை மேற்கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டார்.