மடு தேவாலய உற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை விசேட ரயில் சேவைகளை கொழும்பு கோட்டை, மொரட்டுவை, மாத்தறை, நீர்கொழும்பு ரயில் நிலையங்களிலிருந்து நடத்த ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது.
12 ஆம் திகதி காலை 7.45 க்கு முதலாவது ரயில் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் சரத்குமார குணரட்ண தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, லசந்த அழகியவன்ன, மில்ரோய் பர்னாண்டோ, கொழும்பு மேற்றாணியார் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் சரத்குமார குணரட்ண தெரிவித்தார்.
12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தினமும் மதவாச்சி வரையில் செல்லும் ரயில்கள் புறப்படும் நேரங்கள் வருமாறு:- கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.45, 6.05, 8.45, பகல் 1.45, மாலை 4.20, இரவு 10.00 மணிக்கு புறப்படும். மாத்தறையிலிருந்து காலை 9.45 க்கு மதவாச்சி நோக்கி மேற்படி 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் ரயில் புறப்படும்.
13 ஆம் திகதி மொரட்டுவையிலிருந்து தினமும் 7.50 க்கு புறப்படும் ரயில் பகல் 1.43 க்கு மதவாச்சியை சென்றடையும். 12 ஆம் 14 ஆம் திகதிகளில் நீர்கொழும்பிலிருந்து காலை 7.45 க்கு புறப்படும் ரயில் பகல் 1.45 க்கு மதவாச்சியை சென்றடையும். 12, 13, 14, 15 ஆம் திகதிகளிலும் மதவாச்சியிலிருந்து தினமும் காலை 3,52, 7.32, பகல் 12.25, மாலை 4.15, இரவு 10.35 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி புறப்படும்.
விசேடமாக 15 ஆம் திகதி மாலை 3.15 க்கு மதவாச்சியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி மற்றுமொரு ரயிலும் புறப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவிக்கிறது. மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து மடு தேவாலயப் பகுதிக்குள் செல்வதற்கு மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து மடு தேவாலயம் வரை 50 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடியார்கள் குழுக்களாக தமது சொந்த வாகனத்திலும், வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களிலும், தனியார் பஸ் வண்டிகளிலும் செல்ல முடியும். இதற்கென பிரதேச பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும்.
தனிப்பட்ட தமது சொந்த வாகனத்தில் செல்வோர் தாம் மடு தேவாலய வளவில் கூடாரமிட்டுள்ள பகுதியிலேயே நிறுத்தி வைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அடியார்கள் மடு தேவாலயப் பகுதியில் 17 ஆம் திகதி வரை தங்கியிருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சரத்குமார குணரட்ண தெரிவித்தார்.