இலங் கையின் வடக்கே யுத்தத்தின் போது அரசு மற்றும் புலிகளினால் புதைக்கப்பட்ட பெரும் தொகையான கண்ணி வெடிகளை அகற்றுவதற்கென பிரித்தானிய அரசு 5 லட்சம் பவுண்களை வழங்க முன்வந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே இந்த நிதியுதவியினை தாம் வழங்குவதாக பிரித்தானியா தெரிவித்து உள்ளது.
ஆனால், உலக வங்கி இலங்கைக்கு கடன் உதவியாக 2 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு பிரித்தானியா எதிர்ப்பு தெரிவித்ததுடன் அமெரிக்கா இதற்கு ஆதரவு வழங்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டிருந்தது. மேலும் இலங்கையில் யுத்தம் இடம் பெறுகையில் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் விலிபாண்ட் உடனடியாக யுத்த நிறுத்ததினை ஏற்படுத்துமாறு இலங்கை அரசினை வலியுறுத்தி இருந்தார்.
இலங்கை அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்ததுடன் இலங்கை பிரித்தானிய காலனித்துவத்தில் தற்போது இல்லை என்பதினை உணரவேண்டும் எனக் கூறியும் இருந்தது. மேலும் இலங்கைக்கென ஒரு விஷேட சமாதான தூதுவரை பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த பொழுது அதனையும் இலங்கை நிராகரித்தது.
எனினும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே இந்த நிதியுதவியினை தாம் வழங்குவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்திய படையினர் இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.