விடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செய்மதி தொலைபேசியே புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை இலங்கை வெற்றிகரமான முறையில் கைது செய்வதற்கு வழிவகுத்ததாக ராய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்தது. மே 18 இல் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பிரபாகரன் மரணமடைந்த பின் அவரது சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செய்மதி தொலைபேசியை இலங்கையின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.
பிரிவினைவாதப் புலிகளையும் அவர்களில் மீதமாக இருப்போரையும் அழிப்பதற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் போராட்டத்திற்கு புலிகளின் புதிய தலைவரான செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளமை அண்மையகால பரிசு என்று ராய்ட்டர் செய்திச்சேவை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது. கொழும்பில் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மூன்று குழுக்கள் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பத்மநாதனை தேடிச் செல்வதற்காக அனுப்பப்பட்டதாகவும் அவரைக் கைது செய்வதற்காக அல்ல என்றும் தம்மை இனங்காட்டிக்கொள்ள விரும்பாத சிரேஷ்ட இராணுவ வட்டாரங்கள் மூன்று தெரிவித்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு அவரைக் கொண்டு வரவேண்டுமென நாம் விரும்பியிருக்கவில்லை. ஆனால், அவ்வாறு செய்வதற்கு சூழ்நிலைகள் எமக்கு இடமளிக்கவில்லை என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவர் ராய்ட்டருக்குத் தெரிவித்துள்ளார். உள்ளூர் புலனாய்வுத்துறை மற்றும் ஒத்துழைப்பாக செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பிரசன்னம் ஆகியவை அந்தத் திட்டத்தை நடைமுறைச்சாத்தியமற்றதாக்கியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தாய்லாந்தில் வைத்து பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் எந்த நாட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் கூற மறுத்துள்ளனர். அதேசமயம், தமது நாடுகளில் வைத்து பத்மநாதன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக தாய்லாந்து, மலேசிய அதிகாரிகளும் மறுத்துள்ளனர். பத்மநாதன் தொடர்ந்து இடங்களையும் தமது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களையும் மாற்றியிருந்ததாகவும் இது தாய்லாந்து, மலேசியா , இந்தோனேசியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கண்காணிப்பை மேற்கொள்வதற்கு வழிவகுத்ததாகவும் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறுகிய நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டிருந்த தருணத்தில் பத்மநாதன் தொடர்ந்து பிரபாகரனுடன் தொலைபேசித் தொடர்பைக் கொண்டிருந்தார். “நாங்கள் இப்போது காஸ்ட்ரோ போன்ற விடுதலைப் புலிகளின் ஏனைய தலைவர்களையும் மற்றைய முக்கியமான ஆட்களையும் ஏனைய நாடுகளில் தேடி வருகிறோம்’ என்று அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
புனைபெயரில் வெளிநாடுகளில் இயங்கும் சிரேஷ்ட புலி உறுப்பினர் காஸ்ட்ரோவாகும். அவர் ஆயுதக் கொள்வனவு, புலனாய்வு விடயங்களை சேகரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை கூறியுள்ளது. பத்மநாதன் மீது இன்ரர்போலின் இரு பிடியாணைகள் இருந்தன. அவர் பல கடவுச்சீட்டுகள் வைத்திருந்தார். அத்துடன், அதிகளவு பணமும் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. கடத்தல் மற்றும் நடவடிக்கைகள் மூலம் வருடாந்தம் 200300 மில்லியன் டொலர்களை புலிகள் சம்பாதித்ததாக நம்பப்படுவதாக ராய்ட்டர் மேலும் கூறியுள்ளது.