பாதாள உலகத்தினரையும் குற்றவாளிகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்குக் கிடையாதென தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர மரணம் தான் சட்ட ரீதியான தண்டனை என்றால் அதை அவர்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டுமெனவும் கூறினார்.
கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே ரஞ்சித் குணசேகர இவ்வாறு கூறினார்.
“பாதாள உலகத்தினர் பொலிஸாரினால் சட்ட ரீதியாகவே கொல்லப்படுகின்றனர். அதாவது பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் போது பொலிஸார் தற்பாதுகாப்புக் கருதி பதில் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. அதில் மாற்று வழிக்கு இடமில்லை. தற்பாதுகாப்புக் கருதி தாக்குதல் நடத்த சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறது.
அது மட்டுமல்லாது பாதாள உலகத்தினரையும் குற்றவாளிகளையும் பாதுகாக்கப் பொலிஸார் கட்டுப்படவில்லை. மரணம் தான் சட்ட ரீதியான தண்டனை என்றால் அதை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். பாதாள உலகத்தினரைப் பாதுகாத்து பொது மக்களை ஆபத்தில் தள்ள நாம் தயாரில்லை’ என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.